Saturday, 22 March 2025

திருப்பாச்சி

திருப்பாச்சி

    

 

    வணக்கம் வாசகர்களே. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு சந்திக்கிறோம். சிரித்தது போதும். கொஞ்சம் சீரியஸ்ஸாக எழுதலாம் எனத் தோன்றியது. இதுவரை எழுதியதைப் படித்து விட்டுச் சிரிக்காமல் இருந்தாலும் கூடப் பரவாயில்லை. இதைப் படித்துவிட்டுச் சிரிக்காமல் இருந்தால் சரி.  தலைப்பைப் பார்த்ததும் ஓரளவு ஊகித்திருப்பீர்கள். ஆம். இளைய தளபதி விஜய் அவர்கள் நடித்து 2005 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான வெற்றித் திரைப்படம் என்றே ‘திருப்பாச்சியை’க் கூறலாம். இப்பதிவு முழுமையான ஒரு திரை விமர்சனம் அல்ல என்றாலும், திரைப்படங்கள் பற்றிய ஒரு சராசரி மனிதனின் பார்வையை இதில் நான் முன்வைக்கிறேன். நமது அனுபவங்களை நாமே அசைபோட்டு மகிழ ஒரு தளத்தை ஏற்படுத்த முயல்கிறேன். 

             மனம் போன போக்கில் நான் எழுதுகிறேன் என்றாலும், மேக்கிங் ஆஃப்  த  ஃபில்ம் போன்று இப்பதிவின் பின்னணியையும் சற்று விளக்கிவிடுகிறேன். ஒரு சிந்தனையாளன் மக்களைச் சென்றைடையப் பல வழிகள்  இருப்பினும் திரைப்படம் என்னும் கலை அதற்கு அளிக்கும் வாய்ப்பைப் போல மற்ற கலைவடிவங்கள் அளிப்பதில்லை என்றே கூறலாம். கலைகளை, நிகழ்த்துகலைகள் (Performing arts), நிகழ்த்தாக்கலைகள் (Non-performing arts) என இருவகையாகப் பிரிக்கின்றனர். ஓவியக்கலை, சிற்பக்கலை, கவிதை/கதை எழுதுதல் போன்றவை நிகழ்த்தாக்கலைகளுக்கு எடுத்துக்காட்டுகள். ஓர் ஓவியன் வரையும்போது, ஒரு சிற்பி சிலை வடிக்கும்போது, ஒரு கவிஞன் எழுதும்போது, ஓர் எழுத்தாளன் புனையும்போது நாம் பார்ப்பதில்லை.  கலையின் பயன் முழுமை அடைந்தபின்னரே நாம் அதனை ரசிக்கிறோம். விமர்சிக்கிறோம். அவ்வாறன்றி, பாடல், ஆடல், நாடகம் போன்றவை நிகழ்த்து கலைகளாம். நிகழ்த்த நிகழ்த்தவே அவை கலையார்வலர்களைச் சென்றடைகின்றன. மேடை நாடகம், தெருக்கூத்து, இசைக் கச்சேரி போன்ற கலைகள் மக்களை ஈர்த்து அவர்களது ரசிப்புக்கு விருந்தாக, சோர்வுக்கு மருந்தாக, வாழ்வைச் செம்மையாக்கும் கருத்துப் பெட்டகங்களாக விளங்கியுள்ளன. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்த நிகழ்த்து கலைகள் இன்று பதிவு செய்யப்பட்ட நிகழ்த்து கலைகளாக (Recorded performing arts) மக்களிடையே சேர்கின்றன. பதிவு செய்யப்பட்டவை என்பதால் வேண்டியபோது தக்க கருவிகள் வாயிலாக நாம் அவற்றைக் கேட்டும் கண்டும் களிக்கமுடியும்.

            இவ்வாறுதான் நாம் பாடல்களையும் திரைப்படங்களையும்  அவை நிகழ்த்தப்பட்டு, தொகுக்கப்பட்டு,  வெளியிடப்பட்டபின் மீண்டும் மீண்டும் கேட்கிறோம்/பார்க்கிறோம். திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் தருவது சரியா தவறா என்ற கேள்வி நியாயமானது என்றாலும் திரைப்படம் என்னும் தொழில்நுட்பம் பிரபலமான பின்னர் அன்றாட வாழ்வில் நமது உரையாடல்களிலும் கற்பனைகளிலும் நடவடிக்கைகளிலும் திரைப்படங்களின் தாக்கத்தை நாம் காணமுடியும். நாகேஷ் மாதிரி சிரிப்பு காட்டுகிறான், நம்பியார் மாதிரி வில்லத்தனம் செய்கிறான், வடிவேல் மாதிரி சேட்டை செய்கிறான், பொண்ணு ஸ்ரீதேவி மாதிரி இருப்பாள், ரஜினி மாதிரி ஸ்டைல் செய்கிறான் என்பதோடு சினிமா வசனங்களை நம் சொந்த வாழ்வின் நிகழ்வுகளோடு பொருத்திப் பார்த்து நாமும் பயன்படுத்துகிறோம். 

    ஆகவே ஒரு திரைவிமர்சனம் வாயிலாக இன்னும் நாம் நெருக்கமாக முடியுமா என்ற சோதனையில் இறங்க முற்பட்டேன். மிகவும் பழைய படமாகவும் இல்லாமல் புதிய படமாகவும் இல்லாமல், அதேபோல் நடுத்தர (30-40) வயது ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகர் நடித்த படம் ஒன்றைத் தேர்வு செய்து, முழுமையாகப் பார்த்துவிட்டு விமர்சிப்போம் என்று 2022 ஆம் வெளிவந்த பீஸ்ட் படத்தையே முதலில் தேர்வு செய்தேன். ஆனால் இன்னும் OTT யில் ஒரு படம் கூடப் பார்த்த அனுபவம் எனக்கு இல்லை என்பதால் (OTT யில் பார்க்க விருப்பம் இல்லை என்பதாலும்) சூப்பர் குட் ஃபில்ம்ஸின் அஃபீஷியல் யூட்யூப் சேனலில் கிடைத்த திருப்பாச்சியை முழுமையாகப் பார்த்தேன். Central Board of Film Certification முதல் The End ல் வரும் அடங்கொக்கா மக்கா என்னும் கவுண்டமணியின் ஃபேமஸ் பஞ்ச் வரை கண்டேன். கோடிகள் செலவு செய்து எடுக்கும் படத்தை கண்ணியமற்ற முறையில் பொதுவெளியில் விமர்சிக்க முடியாது. ஆனால் நாகரீகமான முறையில் நிறைகுறைகளைப் பட்டியலிடலாம். ஸ்வாரஸ்யமான தகவல்களைப் பகிரலாம். அப்படித்தான் இப்பதிவு இருக்கப்போகிறது.

           பாட்ஷா படத்தில் நக்மா யார் குழந்தை என்ற கேள்விக்கு இன்றளவும் சரியான விடையும் தெரியாமல், யாரைக் கேட்பது என்பதும் தெரியாமல் தாமே தர்க்கரீதியாக முடிவுக்கு வந்து மனசாந்தி அடையும் ரசிகர்களை ஃபேஸ்புக்கில் பார்க்கலாம். இதையெல்லாம் விவாதப் பொருள் ஆக்குமளவுக்கு நமக்குக் கலைவெறி உண்டு. நான் இதுவரை செய்த சாதனைகள் இரண்டு. 1. ஒரு கிரிக்கெட் மேட்சையும் பார்த்ததில்லை 2. பாட்ஷா படம் கோவை கே.ஜி. தியேட்டரில் 365 நாட்கள் ஓடியும், நான் பார்க்கவில்லை. ஆனால் டி.வி யிலேயே 100 முறை போட்ட படங்களுள் பாட்ஷாவும் ஒன்று என்பதால் சின்னச்சின்ன டயலாக் கூட அத்துப்படி. என் வயதொத்தவர்கள் பார்த்த சராசரித் திரைப்படங்களை விட நான் குறைவாகவே கண்டிருப்பேன் என்றாலும் தியேட்டர் அனுபவம் பற்றிப் பேச ஆசையாக இருக்கிறது. அடுத்த சினிமா சிறப்புப்பதிவின் தலைப்பை இங்கேயே கொடுக்கிறேன்: ‘லட்சுமி தியேட்டர்’ - ஒரு கிராமத்துத் திரையரங்கத்தின் கதை.

        இப்ப ‘திருப்பாச்சி’. அதுக்கு முன்னாடி விஜயுடனான என் அறிமுகம். நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது (1987) வெளியான சட்டம் ஒரு விளையாட்டுன்னு ஒரு படம், எதுக்கோ ஸ்கூல்லயே ப்ரொஜெக்டர் வச்சு ஓட்டிக்காட்டினாங்க (இப்பத்தான் தெரியுது அது தமிழ்மொழி விழிப்புணர்வுப்படமாம்). அதில் விஜயகாந்த் ஹீரோ. எஸ்.ஏ.சி டைரக்‌ஷன், ஷோபா சந்திரசேகர் தயாரிப்பு. ‘ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது....’ https://www.youtube.com/watch?v=fd66GHX_lhU h என்னும் பாடலில் (அந்தப் படம் போட்டுக்காட்டிய வகுப்பறையும் அப்பாடல் காட்சியும் இன்றும் மனதில் இருக்கு) விஜயகாந்தின் சிறிய வயது பாத்திரமாக முதன் முதலில் முகம் காட்டுவான் அப்போது எட்டாவது படித்துக்கொண்டிருந்த மாஸ்டர் விஜய். அந்தப் படத்தை ஓர் இருட்டு வகுப்பறையில் பார்த்ததால் சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்துக்கும் இப்படத்துக்கும் நான் கன்ஃப்யூஸ் பண்ணிக்குவேன். ஏன்னா அதுலயும் விஜயகாந்த் தான் ஹீரோ. 

 இந்தப் படத்தைக் கணக்கில் சேர்க்காமல் விஜய் வளர்ந்து பெரியவரானதும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து சூப்பர் ஹிட் அடித்த பல படங்களுக்குப் பிறகு திருமலை, உதயா, கில்லி, மதுர படங்களுக்குப் பின் 40 ஆவது படமாக வந்ததுதான் ‘திருப்பாச்சி’. முந்தைய படங்களில் பெரும்பாலும் நல்ல வழவழப்பான முகத்துடன் அடர்த்தியான நேர்த்தியான மீசையோடு காட்சியளித்த விஜய் ‘திருமலை’, ‘கில்லி’, ‘மதுர’ படங்களில் மீசையைக் கொஞ்சம் ட்ரிம்மியும் லேசாக தாடி வைத்தும் வேறு மாதிரி முக அமைப்பை ஏற்றார். கொஞ்சம் உடலும் மெலிந்து, இன்னும் சின்னப்பையன் போலத் தெரிந்தார். அந்த கெட்டப்பின் தொடர்ச்சியாகவே ‘திருப்பாச்சி’யில் சிவகிரி பாத்திரத்தில் அதிரடி காட்டுவார். 

         இனி கொஞ்சம் படத்துக்குள். 2005 ல் வெளியானாலும் டைட்டில் கார்ட் டிசைன் பழைய படங்கள் போலவே இருந்தது. ஜஸ்ட் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 2007 ல் வெளியான சிவாஜி திரைப்படத்தின் கலர் க்வாலிட்டியோ டெக்னிகல் இம்ப்ரூவ்மென்ட்டோ இதில் இல்லை. ஒரு வேளை ப்ரொட்யூசர், டைரக்டர், ஹீரோ பொறுத்து அமைந்திருக்குமோ என்னவோ. திருப்பாச்சியில் தனது சர்வ திறமைகளையும் காட்டியிருப்பது விஜய் அல்ல. இயக்குநர் பேரரசுதான். அவர்தான் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எல்லாம். டி.ஆர் இடம் இவர் பயிற்சி பெற்றிருக்கலாம். ஆனாலும் ஏனோ இசையமைப்பை தினாவுக்குக் கொடுத்துவிட்டார். பேரரசு ஒரு பாடலாசிரியர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? கிட்டத்தட்ட 12 படங்களுக்கு சுமார் 35 பாடல்கள் எழுதியுள்ளார். 15க்கும் மேற்பட்ட படங்களில் (பெரும்பாலும் அவரது இயக்கத்திலேயே) நடிக்கவும் செய்துள்ளார். திருப்பாச்சிதான் இயக்குநராக அவரது (டெப்யூ-Debut) முதல் படம். அதில் முதல் பாட்டு ‘நீ எந்த ஊரு, நான் எந்த ஊரு, முகவரி தேவையில்ல..’ என்பது. இத்திரைப்படம் வெற்றி பெற்று அவருக்கு ஒரு முகவரி வாங்கித்தரவே, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி, பழனி, திருவண்ணாமலை, திருத்தணி என்று ஊர்ப்பெயர்களிலேயே படம் எடுத்தார். என்ன சென்ட்டிமென்ட்டோ? தினா இசையில் எல்லாம் யார் வேண்டுமானாலும் பாட்டெழுதலாம். சித்தீஈஈஈஈ...என்ற ராதிகாவின் தொடர்நாடகத்துக்கு இசை அமைத்தவரும் இவர்தான். கோயமுத்தூர்க்காரர். கும்புடப் போன தெய்வம் பாட்டைக் கேட்டா இவரது முத்திரை தெரியும். பாதிக்கு மேல் இதேபோலத்தான். பொறி படத்தின் ‘பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்’ போன்ற பாடல்கள் இவர் இளையராஜாவின் மாணவர் என்பதைக் காட்டும். பேரரசுவின் கவிவாரிசாக வந்தவர்தான் சிவகார்த்திகேயன். அரபிக்குத்து என்னும் மரபுக்கவிதை வரிகளான ’ஹலமத்தி ஹபீபோ ஹலமத்தி ஹபீ வந்தாலே’ என்ற வரிகளுக்குச் சொந்தக்காரர். அவர விடுங்க. அந்தபாட்டுக்கு விளக்கம் கொடுத்த இலுமினாட்டிப் பிரியர்கள் கொண்டாடும் பாரிசாலனை மறக்கமுடியுமா? இப்படி ஒவ்வொன்றாகக் கிளைக்கதை பேசினால் இன்னும் 3 பதிவுகள் இதேதான். இருந்தாலும் பேசாமல் இருக்க முடியவில்லை. மேகம் கறுக்காதா Pen (பென்) பென்னே என்று தனுஷ் பாடுவதைப் பொறுத்துக்கொள்ளும் சகிப்புத்தன்மை இருந்தால் இதை எல்லாம் நாம் கண்டுகொள்ள வேண்டியதில்லை (இதைப்பற்றி ஒரு தனிப்பதிவு பின்னர்). கும்பிடப்போன தெய்வத்துக்குறுக்கே இவர்களெல்லாம் வந்துவிட்டனர். ஆமாம் அதில் ஏன் சாயா சிங்கை அதற்குள் கேமியோ ரோலில் நடிக்க வைத்தனர் என்று தெரியவில்லை. அப்போதுதான் ஒரு நான்கைந்து படம் நடித்திருப்பார். அதில் ஒன்று திருடா திருடி. தனுஷின் கெட் அப் சரியாக ஒரே மாதிரி சீக்வென்ஸாக இல்லாமல் இருக்கும். முதல்நாள் மீசை, தாடி..இரண்டாம் நாள் சிறுவனைப்போன்ற முகம், மூன்றாம் நாள் மீண்டும் மீசை தாடி...கன்டினிவிட்டியில் கோட்டை விட்ட படம் அது. சரி...சரி...மீண்டும் திருப்பாச்சி. முதல் அறிமுகப்பாடலில் விஜய்க்குப் பொருந்தாத ஒரு ஜிப்பாவை மாட்டிவிட்டிருப்பார்கள். தன்னைப் பால்கார அண்ணாமலை ரஜினியாகவே எண்ணிக்கொண்டு பெர்ஃபார்ம் செய்திருப்பார் விஜய். ஓவராக முகபாவம் காட்டுவதில் விஜய்க்கும்  பெஞ்சமினுக்கும் போட்டி.  பழகிய முகம் கொண்ட நடிகர் பட்டாளம். சீனியாரிட்டிப்படி சொல்வதென்றால் எம்.என். ராஜம் அம்மா தொடங்கி குமரிமுத்து (பெஞ்சமினின் அப்பா), எம்.எஸ். பாஸ்கர் வரை. இன்னும் பட்டியல் நீளும்.

    அறிமுகப்பாட்டுக்குப் பின் சுமார் ஒரு வாரம் கழித்து அதே அளவெடுக்காத வெள்ளை ஜிப்பாவை மாட்டி விட்டு  கரிச்சாம்பட்டிக்கு விஜயை அனுப்பியிருப்பார்கள். ஒரே காஸ்ட்யூமில் வேறு வேறு சீன்கள் எடுத்ததன் விளைவு. அந்த எபிஸோடே தேவையில்லாதது. அரசியல் காரணம் இருக்கலாம். ஏனென்றால் அப்போதுதான் கோயில்களில் ஆடு, கோழி வெட்ட தடைச்சட்டம் கொண்டுவந்திருந்தார் கலைத்தாயும் முன்னாள் முதல்வருமான செல்வி ஜெயலலிதா. ஆனால் அதில் முஸ்லிம் பெயர்களைச் சொல்லித் தப்பிப்பதாக வரும் காட்சியில் ‘எங்கம்மா கும்தாஜ்...இல்ல மும்தாஜ்...’ என்பதையெல்லாம் அன்று சிறுபான்மையினர் பெரிதுபடுத்தவில்லை.

        தங்கையின் கல்யாணத்துக்குப் பின் மெட்ராஸ் செல்லும் விஜய் நாயகி திரிஷாவைச் சந்திக்கிறார். 2005 ல் பாவாடை தாவணியில் தோன்றும் திரிஷா ஒன்பதாவது அதிசயம்தான் (ஐஸ்வர்யா ராய் எட்டாவது). பெஞ்சமினின் இறப்புக்குப் பின் தங்கையையும் மாப்பிள்ளையையும் நைசாக ஊரில் இருக்கச்செய்துவிட்டு  விஜய் மெட்ராஸ் வந்து தனது சீக்ரெட் ஆப்ரேஷனைத் தொடங்கி முதல் ஃபைட்டிலேயே 21 பேரைப் போட்டுத்தள்ளுகிறார். ராக்கி ராஜேஷ்க்குப் (சண்டைப் பயிற்சி) பேசிய சம்பளத்தை சௌத்ரி முழுதாகக் கொடுத்திருப்பாரா என்று சந்தேகம்தான். சந்தனம் குங்குமம் விபூதி கலந்து முகத்தில் பூசிக் கொலை செய்வது 2005 ல் மாஸ். 2025ல் சிரிப்புத்தான் வந்தது. இருபது ஆண்டுகள் கழித்துப் பார்த்தது என் தப்புத்தாங்க. எலுமிச்சம்பழத்தைப் பாக்கெட்டிலேயே வைத்திருப்பார் போல விஜய். ஆனால் பான்பராக் ரவி (ஆர்யன்) க்குச் சங்கு ஊத அதை எங்கு வைத்திருந்தார் என்று கேட்கும் அளவு நான் லாஜிக் பார்ப்பவனல்ல.

                 சனியன் சகடை, பட்டாசு பாலு, பான்பராக் ரவி ஆகியோர் ஓரளவு பயமுறுத்துகின்றனர் குழந்தைகளை. இப்படத்துக்குப் பின் பாலு என்று பெயர் கொண்ட சில வெத்து வேட்டுகள் பட்டாசு பாலு என்று அடைமொழி வைத்து அகமகிழ்ந்திருக்கக்கூடும். சனியன் சகடையாக வரும் கோட்டா சீனிவாச ராவுக்கு வாய்ஸ் ஆர்டிஸ்ட் ராஜேந்திரன் குரல் கொடுக்கவில்லை என்றால் அவர் ஊமைக்கோட்டான் சீனிவாசராவ்தான். விஜய் ’ஐயர்’ வீட்டில் நடந்ததைப் பற்றி கம்ப்ளைன் கொடுக்கும்போதே திரிஷாவையும் காணவில்லை என்று கம்ப்ளைன் கொடுத்திருக்கலாம். ஆளையே காணோம். கால்ஷீட் பிரச்சனையாக இருந்திருக்கலாம். சிட்டியில் இருக்கும் போலீஸ் எண்ணிக்கையைப் புள்ளிவிவரமாகத் தரும்போது ஒன்று புரிந்தது. இவர்தானே சின்ன வயதில் சின்ன வயசு கேப்டனாக நடித்தவர். லிவிங்ஸ்டன்-வையாபுரி காமெடிகளை ரசிக்க முடியவில்லை.

                முதல் சீக்ரட் ஆப்ரேஷனுக்குப் பிறகு அதே பேட்டர்னில் செய்யும் கொலைகள் கணிக்கத்தக்கனவாகவே இருந்தன. ஒரு நீண்ட வசனத்தில் தேங்கா வெட்றதுக்கும், தென்னை வெட்றதுக்கும் எளனி வெட்றதுக்கும் என்று (எல்லாமே தென்னை மரத்தின் பாகங்கள்தான சார்?) வசனகர்த்தா பேரரசு சறுக்குகிறார். ஒரு வசனத்தில்  ‘ஆள் கில்லி மாதிரி இருந்தான் சார்’ என அடியாட்கள் சொல்லி விஜயின் முந்தைய பட ரெஃபரன்ஸ் கொடுப்பார்கள். ஆனால் என்னவோ விஜயின் ஹேர்ஸ்டைலில் கன்டினிவிட்டி பிரச்சனை. ஐயரின் கையை வில்லன்கள் உடைக்கும்போது விஜயின் (தங்கை வீடு) ஏரியாவில் வசிக்கும் உயரம் குறைந்த ஒரு நபர் வருவார். பின்னர் பான்பராக் ரவியைக் கொல்லும் ஆபரேஷனில் ஒரு போராட்டக் கூட்டத்திலும் வருவார். ஆனால் அப்போது அவருக்கு விஜயை அடையாளம் தெரியாது. பாவம் அவரே ஃபைனான்ஸில் பணத்தை இழந்து சோகமாக இருந்ததில் எப்படி இதை நினைவு வைத்திருக்க முடியும்? மேலும் இதையெல்லாம் யார் கவனிப்பார்கள் என்று துணைநடிகர்களை ஒருங்கிணைப்போரும் அசிஸ்டன்ட் டைரக்டர்களும் கருதியிருக்கக்கூடும்.

          சொன்ன தேதியில் வில்லன்களின் கதையை முடித்த பிறகு, விஜய்தான் அவற்றைச் செய்தது என்று தெரிந்த பின் அவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று ஒரு சாரார் எதிர்பார்க்க அதைப் பற்றிச் சிந்தித்து எதுக்கு சட்டச்சிக்கலை உருவாக்க வேண்டும் என்று நினைத்த அசோஸியேட் டைரக்டர்கள் குழு ’நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு’ என்று மூன்று சொற்களைப் பின்புலத்தில் ஒலிக்க விட்டு சிம்பிளாக மேட்டரை முடித்த விதம் மெச்சத்தக்கது.

        ஃபாத்திமா பாபுவைப் படத்தில் அடையாளம் கண்டவர்கள் தங்களைத் தாங்களே முதுகில் தட்டிக்கொள்ளலாம். 

      Beast படத்தைப் பார்த்து Sun TV Top 10 Movies சுரேஷ்குமார் போல கால் மேல் கால் போட்டு பீஸ்ட்-மொத்ததில் வேஸ்ட் என்று சொல்லலாம் என்றிருந்தேன். ஆனால் திருப்பாச்சி அப்படியில்லை. என்னதான் இருந்தாலும் 20 ஆண்டுகளுக்கு முன் ஹிட். ராஜூ சுந்தரத்தின் கோரியோக்ராஃபியில் விஜயின் ஆட்டம் (பாட்டு எதுவும் கதையோடு ஒட்டவில்லை என்றாலும்) படத்தை ஆட்டம் காணாமல் செய்கிறது என்றே சொல்லலாம். நம் விமர்சனத்தைப் பார்த்து மீண்டும் திருப்பாச்சியை ரீரிலீஸ் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ரவுடிகளை ஒழித்து மெட்ராஸைச் சுத்தமாக்குவதன் மூலமும், மெட்ராஸ் நல்லா இருந்தால்தான் தமிழ்நாடே நல்லா இருக்கும் என்ற வசனம் மூலமும் விஜய் அண்ணாவுக்கு மைலேஜ் கிடைக்கலாம். பனையூரில் இருந்து சில மைல்கள் வெளியே பயணிக்கலாம். திரிஷாவுடனான நட்புறவும் நீடித்து பெண்கள் வாக்குகளும் திரிஷா ரசிகர் மன்ற வாக்குகளும் கிடைக்கலாம். படத்தில் விஜயின் முதல் ஆப்பரேஷன் எபிஸோடில் ஒரு காட்சியில் ஒரு சிறிய ஃபோட்டோவுடன் மு.க. ஸ்டாலின் என்று எழுதியிருந்த போஸ்டர் ஒன்றும் தென்படுகிறது. ஏதோ போராட்ட அறிவுப்பு போலத் தெரிந்தது. எதிர்க்கட்சின்னாலே அப்படித்தானே. 2005ல் அ.தி.மு.க. ஆட்சி. அதன்பின் 2006ல் தி.மு.க ஆட்சி அமைத்தது (ஆமாம் கலைஞர்தான் முதல்வர்). தொடர்ந்து 2011 ல் ஜெயலலிதாவின் வெற்றிக்கு அணில் போல உதவுவதாக விஜய் தரப்பு சொன்னது. 2024 ல் த.வெ.க. ஆரம்பிக்கப்பட்டு 2026ல் தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளார் அண்ணா (விஜய் அண்ணா). திருப்பாச்சி பட லிங்க் https://www.youtube.com/watch?v=kT6BJcF3ajM

                    விஜய் என்றாலே வெற்றிதான் சினிமாவில். ஆனால் அரசியலில்?

    வாசகர் கருத்துகளைப் பொறுத்து மீண்டும் பழைய படங்கள் அவ்வப்போது போஸ்ட் மார்ட்டம் செய்யப்படும். 

 வி.மஹாலிங்கம்,

           வடவள்ளி, கோவை. 

Saturday, 8 March 2025

கண்மணி அன்போடு....... பகுதி 2

 கண்மணி அன்போடு....... பகுதி 2

         சிவராத்திரிக்குப்  பின் தியானத்தில் ஆழ்ந்ததால் எழுத இயலவில்லை. ஆனால், என் ஆன்மீக வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் நான் சின்ராசு பத்தி எழுதியதால் அரெஸ்ட் ஆயி ஜெயிலுக்குப் போயிட்டதா செய்தி ஊடகங்களில் வதந்தி பரப்பியிருந்தனர்.  இப்போது நக்கீரன் வலையொளியைப் பார்த்தால் சின்ராச அரெஸ்ட் பண்ணீருவாங்கன்னு சொல்றாங்க (எங்க நடக்கப் போகுது?). சரி விடுங்க, நாம யாரு வம்புக்கும் போறதில்ல....தும்புக்கும் போறதில்ல. கண்மணியைத் தொடருவோம் வாங்க. இதுக்கு நடுவால எப்படியெப்படியெல்லாம் அந்தக் காலத்துல லவ் லெட்டர் கொடுத்தாங்கன்னு வாசகர்கள்கிட்ட இருந்து பல லெட்டர்கள். சிலர் தங்களுக்கு வந்த உண்மையான லெட்டரையே அனுப்பியிருந்தாங்க. கொஞ்சம் செல்லரிச்சுப் போயி பழுப்பேறியிருந்த கடிதங்களையெல்லாம் படிச்சுப் பார்த்து அலசி ஆராயவும் நேரமாயிடுச்சு. ஆறாம் வகுப்பு படிக்குறப்ப தனக்கு வந்த அவசர அவசரமா தப்புத் தப்பா எழுதப்பட்ட  சில லவ் லெட்டர்கள பகிர்ந்திருந்தாங்க ஒரு தோழி. அதெல்லாம் லவ் லெட்டர்ஸா இல்ல மிஸ்ஸிங் லெட்டர்ஸான்னு (missing letters இங்க்லீஷ்ல ஒரு exercise இருக்குமே..) தெரியல. அவ்ளோ ஸ்பெல்லிங் மிஸ்டேக். இத்தனைக்கும் தமிழ்லதான் எழுதியிருந்தது. அதுல ஒரு லெட்டர் ஒன் சைடு நோட்டுன்னு சொல்லுவோமே (அறிவியல் பாடத்துக்கு வாங்குவோம். ஒரு சைடு ரூல்டு; இன்னோரு சைடு அன்ரூல்டு) அதுல எழுதியிருந்தது. தான் ஒன் சைடா லவ் பண்றேன்னு எவ்வளவு சிம்பாலிக்கா எழுதியிருக்கார் அந்த லவ்வர் (கிளவர்) பாய். இப்ப அவர் கிழவர் பாயா இருக்கணும். இதை மேலும் உறுதிப்படுத்த மெட்ராஸ்ல தடயவியல் நிபுணரா இருக்குற ஒரு நண்பருக்கு அனுப்பியிருந்தேன். ரிசல்ட்டப் பார்த்ததும் இத எழுதுனது நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தின்னு எல்லாம் இப்ப ஒடுங்குன ஆளாத்தான் இருக்கும்னு அவங்களே மெரண்டு போயிட்டாங்களாம். இந்தியன் தாத்தா மாதிரி கையெழுத்து இருந்தப்பவே நானும் மைல்டா டவுட்டானேன். விஞ்ஞான வளர்ச்சியின் காரணமா அடுத்த ஒரு லெட்டர்....அதை லெட்டர்ன்னு சொல்லமுடியாது.  ‘விக்ரம்’  (1986) கமல் படத்துடன் கூடிய ஒரு பொங்கல் வாழ்த்து அட்டை...அதுல ஒரு ஓரமா தன் காதலை வடிச்சிருந்தார் அந்தக் கலைஞர். என்னா ஐடியா...? பொங்கல் வாழ்த்துல எழுதினா சந்தேகம் வராதாம். அடுத்த கட்டமா, இன்லேண்ட் (இங்க்லேண்டுன்னு சொன்னாத்தான் எல்லோருக்கும் புரியும்) கவர்களில் இங்க் பேனாக்களில் கவிதைகளோடு எழுதப்பட்ட சில கடிதங்கள்... அந்தக் காலத்தில் டேட்டிங் கலாச்சாரம் எல்லாம் இல்லை. எல்லாமே லெட்டரில்தான். ஆனாலும் அவற்றைக் கார்பன் டேட்டிங் (carbon dating) செய்து பார்த்தபோது 1990-92 காலகட்டம் எனத் தெரிய வந்தது. பிறகு, லவ் லெட்டர் எழுதவே ரொமான்டிக்கான watermark background கொண்டிருந்த ப்ரத்யேக letter pad கடிதங்கள். அதில் கடைசியாக ஆண்கள் ரத்தத்திலும் பெண்கள் லிப்ஸ்டிக் முத்தத்திலும் கையொப்பமிட்டிருந்தார்கள். தாங்களே ஸ்கெட்ச், ஜிகினா, க்ளிட்டரிங் பேனா என்று அலங்காரம் செய்த லெட்டர் ஒன்று கண்ணைப் பறித்தது. அதில் கடைசியில் காதலனைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் காதலி அன்று விட்ட கண்ணீர்த்துளியும் இருந்தது. நான் கொஞ்சம் கண் கலங்கிவிட்டேன். பிறகு கண்ணில் விழுந்த அந்த ஜிகினாவை எடுத்ததும் கண் நார்மலானது. என்னதான் லேண்ட்லைன் ஃபோன், மொபைல் ஃபோன், ஈ-மெய்ல், வாட்ஸாப்ன்னு வந்தாலும் அந்தப் பழைய லெட்டர்களுக்கு ஒரு தனி மவுசுதான். உடனுக்குடன் ப்ளூ டிக் வருதான்னு பாக்குறதுல எங்க இருக்கு காதல்? ஒவ்வொரு லெட்டருக்கும் குறைஞ்சது நாலு நாள் காத்திருக்கணும். அந்தக் காதல் எல்லாம் எவரெஸ்ட் ஏறிப்போயாச்சு. போஸ்ட் ஆஃபீஸ் வாசல்லயே குடியிருந்து, போஸ்ட் மேனுக்கு தீபாவளிக் காசு குடுத்து காதல் கடிதங்களை வீட்டுக்கு வரும் முன்னர் நாமே நம் கைப்பட வாங்கிப் படிச்சு, ரசிச்சு, சிரிச்சு இல்ல அழுத சம்பவங்களை மறக்க முடியுமா? இல்ல அப்படிப்பட்ட கடிதங்களை வீட்டில் அட்டாரிகளிலும் பழைய ஃபோட்டோ ஆல்பங்களுக்குள்ளும் ஒளிச்சு வச்சு வீட்டில் யாரும் இல்லாதப்ப, பாடப்புத்தகத்துக்குள்ள வச்சு, படிச்சுப் படிச்சுப் பாத்தது நினைவை விட்டு நீங்குமா? என்ன ஒண்ணு பொங்கலுக்கு வெள்ளையடிக்கும்போதோ வீடு மாத்தும்போதோ கவனமா இருக்கணும். சிலது அப்படியே தொலஞ்சும் போயிருக்கும். தொலையுது உடுங்க.

        கனத்த இதயங்களைக் கொஞ்சம் லேசாக்குவோம். லெட்டர் பத்திப் பேசினதும் நாம் பயன்படுத்தின வித விதமான பேனாக்களப் பத்தி எழுதலாம்னு தோணுச்சு. மூணாம் வகுப்பு வரை பென்சில்தான். நாலாம் வகுப்பில் குண்டான Camlin இங்க் பேனா. அதைத் தூக்கிட்டு வர்றதுகுள்ள போதும் போதும்னு ஆயிடும். நாம் எழுதிய லட்சணத்துக்கு இங்க் தீரவே தீராது. எல்லாருக்கும் கேம்லின் பேனா கிடைக்கல அன்னைக்கெல்லாம். சில லோக்கல் கம்பெனி பேனாக்களும் இருந்தன. கொஞ்சம் அடிக்கடி லீக்கடிக்கும். அப்பல்லாம் இங்க் கறை இல்லாத சட்டைகளே இருக்காது. மை கொட்டினால் அதனைத் தலையில் தடவியே அட்ஜஸ்ட் செய்த நாம்தான் இன்று நரையை ஏற்றுக்கொள்ள முடியாமல் அதே தலையில் டை என்னும் மையைத் தடவுகிறோம். மரை போன பேனாக்களையெல்லாம் சேகரித்து 50 பைசாவுக்கு மரைபோட்டுப் பணம் சம்பாதித்துக் கடைசியில் சஞ்சய்கா (ஞாபகம் வருதா? ஞாபகம் வருதா? ஞாபகம் வருதா?.....) என்னும் சிறு சேமிப்பில் சேமித்த ஒரு நண்பன் கூட இப்போது நினைவுக்கு வருகிறான். லெட் பேனாவில் எழுதுவது அன்புரஃபஷனாலகக் கருதப்பட்ட காலமும் உண்டு. ஆனாலும் அவை புழக்கத்துக்கு வந்தன.

    Ballpoint பேனாவை வைத்து நாம செஞ்சது கொஞ்ச நஞ்சமில்ல. அதுல ஒரு ரூபாய்க்கு ஒல்லியா ஒரு பேனா கிடைக்கும். தண்டுப்பகுதியில் ஒரு கலர் ஸ்ட்ரைப் போட்டிருக்கும். அது இருந்தாலே கெத்துதான். மரக்கட்டைல ஒரு பேனா....அதுக்கு மூடி எல்லாம் இருக்காது.  ரீபில் மாத்த முடியாது. கண்டக்டர் எல்லாம் காதுல சொருகி வச்சிருப்பாங்க. அந்தப் பேனாவ மோந்து பாத்தா உக்கடத்தனமான (கோவைக்காரங்களுக்குப் புரியும்) ஒரு நாத்தம் நாறும். இதனைச் சமன் செய்யும் விதமா எழுதினா மணக்கும் லெட் பேனாக்களும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனாலும் ரெனால்ட்ஸ் கோலோச்சியது. இன்னைக்கும் இருக்கு. அப்ப விலை மூணு ரூபா இருக்கும். சச்சின் விளம்பரத்துல வருவான். Reynolds..The pen the world prefers ன்னு அவனோட மெல்லிய குரல்ல சொல்வான். நல்லா எழுதும். அதையே நம்ம குறும்புக்காரப் பசங்க உடைச்சு உள்ள இருக்கற ரீஃபில்லையும் கட் பண்ணி அதோட மினியேச்சர் வெர்ஷன் மாதிரி ஒண்ண ரெடி பண்ணுவானுக பாருங்க. அதுக்கெல்லாம் நாம பேட்டன்ட் வாங்கியிருந்தா அப்பவே இந்தியா வல்லரசாயிருக்கும். அதுக்குப் பின்னாடி ஹீரோ பேனா (Made in China ன்னு போட்டிருந்தாத்தான் அது ஒரிஜினலாம். நல்லா உழைக்குமாம். இப்ப சிரிப்பா வருதுல்ல). அதுல இங்க் ஊத்தத் தெரியாம நாம பட்ட பாடு இருக்கே...ஐயோ...ஐயோ...என்னதான் அது Hero பேனாவா இருந்தாலும் நம்பி பரிச்சைக்கு எடுத்துட்டுப் போனா அது வில்லனா மாறி நம்மளக் கால வாரிவிட்ரும். அதுக்குப் பின்னாடி ஜெல் பேனா...அது ஒரு ஜில் பேனா என்றால் மிகையல்ல. நோ லீக். நோ ஃபில்லிங். அதுலயும் கறுப்பு இங்க் ஜெல்ன்னா எனக்குப் பிடிக்கும். பிறகு பெருசானதும் Parker பேனாகூட வாங்கியிருப்போம். ஆனா எழுதுறதுதான் கம்மி ஆயிடுச்சு (இதப் பத்தி நான் ஆங்கிலத்துல ஒரு ஆர்ட்டிக்கிள் எழுதியிருக்கேன். அதைப் படிக்க இங்கே செல்லலாம்: https://www.linkedin.com/pulse/refiuelling-fountain-dr-viswanathan-mahalingam/?trackingId=iRoR56MT1v%2FRLDo1xRvZUw%3D%3D)

         லெட் பேனாவுலயே ரொம்ப ஃபேன்ஸியானது அஞ்சு மல்டி கலர் பேனா. அதுல ப்ளூ நல்லா எழுதும். கறுப்பு சுமார். சிவப்பு அல்லது ரோஸ் இன்னும் சுமார். இன்னும் ரெண்டு கலர் எதுக்கு இருக்குன்னே புரியாது. எழுதுனாலும் எடுப்பாத் தெரியாது. அந்த எல்லாக் கலரையும் ஒண்ணா அமுத்தி வெளிய வர வைக்கறது ஒரு விளையாட்டு. சீக்கிரம் உடைஞ்சிடும் இது. இங்க் பேனா சரியா எழுதலன்னா...கிடைத்தால் ப்ளேடாலோ இல்லாட்டி காம்பஸாலோ கீறிய அனுபவம் இருப்பவர்கள் கமென்ட்டவும்.  இங்க் கடன் வாங்குறது....டெஸ்க்கில் ஓரிரு சொட்டு விட்டு நிப்பால் உறிஞ்சுவது...இங்க் பழம்ன்னு ஒரு செடி இருக்கும். அதன் பழத்தை எடுத்து நாமே இங்க் தயார் செய்து பேனாவில் ஊற்றி....என்னா ஆனந்தம் அதெல்லாம். முழு ஆண்டுத் தேர்வு முடிஞ்சு அடுத்த க்ளாஸ்க்கு போகும் முன்னாடி இங்க் பேனாக்களக் கழுவுவோம். அது காயறதுக்குள்ள இங்க் ஊத்தி எழுதுனா டைல்யூட்டா எழுதும். எரிச்சலா வரும். அப்றம் வேணும்ன்னே ரெட் இங்க் பேனால ப்ளூ இங்க் கலந்து ஊத்தி எழுதுறது...அது இதுன்னு எதத்தான் சொல்றது? எத விட்றது? 

   ‘கண்மனி அன்போடு’ன்னு பேனால எழுதுன லெட்டர் முன்னாடி தங்லீஷில் தப்பும் தவறுமாக டைப்பி அனுப்பப்படும் வாட்ஸாப் குறுஞ்செய்திகள் நிக்குமா? 

           - வி. மஹாலிங்கம்

            வடவள்ளி, கோவை. 

 
    
        

Wednesday, 26 February 2025

சின்ராசு (நாட்டாமையுடன் ஒரு நள்ளிரவு)

சின்ராசு (நாட்டாமையுடன் ஒரு நள்ளிரவு) 

சிவராத்திரி சிறப்புக் கட்டுரை

வாசக வாசகியர் தங்கள் லவ் லெட்டர் அனுபவங்களைப் பகிர்ந்த வண்ணம் (என்ன கலரா? உஷ்...! உஷ்...!) இருப்பதால்  கண்மணி அன்போடு....பாகம் இரண்டு இக்கட்டுரைக்குப்பிறகு வெளியாகும். மேலும் இன்றைய கட்டுரை நிகழ்வு சார்ந்தது என்பதாலும் ’மனம் போன போக்கில் பக்கத்தின்  லட்சோப லட்சப் பின்தொடர்வோர் கேட்டுக்கொண்டதற்கிணங்கவும் இக்கட்டுரை தற்போது வரையப்பட்டுக்கொண்டிருக்கப்படுகிறது. 

நம்ம சின்ராசு பத்தி உங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்ல. ஐம்பதுகளின் மத்தியில் டெல்லியில் பிறந்து பின்னர் எண்பதுகளில் தமிழ் மண்ணுக்கு வந்து தனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்து, தனது பேச்சுத் திறமையால் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருப்பவர். இவருக்குத் திருமண வாழ்க்கை அவ்வளவாக இனிக்கவில்லை என்பதும் சின்ராசுவின் மகள் ஒரு பெரிய பேசுபொருளாக இருப்பதும் நாம் அறிந்ததே. பாடி என்றால் (உடம்புங்க) இவருக்கு மிகவும் பிடிக்கும். அந்த பாடியை எப்படி மெய்ன்டெய்ன் பண்ணவேண்டும் என்பது குறித்த இவரது வீடியோக்கள் எப்போது தேடினாலும் யூட்யூபில் சிக்கும். இவரை நாம் செல்லமாக நாட்டாமை என்றும் அழைப்பது அவருக்குத் தெரியுமா என்று தெரியாது. அரசியலிலும் இவர் ஈடுபட்டுள்ளார் என்பது வெட்ட வெளிச்சம். தற்போது சுமார் 65 வயதுக்கு மேல் ஆகியிருந்தாலும் சும்மா கும்முன்னு காட்சியளிப்பார். இவர் ஆட ஆரம்பித்தால் இன்னைக்கெல்லாம் பாத்துட்டே இருக்கலாம். தனியாக ஆடி நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நடிகைகள் உடன் இருந்தால் இவரைக் கையில் பிடிக்கவே முடியாது. என்னமா உடம்பைக் குலுக்கி, துள்ளி, குதித்து ஆடுவார் தெரியுமா? தியானமும் நடனமும் இவரது இரு கண்கள். அதிலும் இந்தப் பாட்டு இருக்கே இதுல இரண்டும் செய்திருப்பார்...”அர்ஜுனா அர்ஜுனா அம்பு விடும் அர்ஜுனா..” சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் பத்தி இப்படி நாம பேசீட்டே போலாம். சிவராத்திரி இனிமையாப் போகும்.

ஒருநிமிஷம் நீங்களும் அப்படி நினச்சீங்க இல்லையா? (வி.ஐ.பி. விவேக் வாய்ஸ்).  ஹஹ்ஹா....எப்படிப் பொருந்துது பாருங்க...சரத்குமார்-சத்குரு என்ன ஒரு பொருத்தமா இருக்கு..இவரும் கூட்டம் சேத்துவாரு அவரும் கூட்டம் சேத்துவாரு. சரத்குமார் ஒரு ராத்திரியில........கட்சியக் கலச்சவரு. சத்குரு ஒவ்வொரு சிவராத்திரியிலயும் இளம் பக்தர்களின்.....மனசக் கலைக்குறவரு. கலைச்சு சரியா இன்னர் என்ஜினியரிங் பண்ணி அனுப்பிருவாரு.

சத்குரு அவர்களின் ஆசியோடு இப்ப இக்கட்டுரை இனிதே துவங்குது. இன்னைக்கும் டைம் மெஷினுக்கு வேலை இருக்கு சரவணன் சார். 1999 ஆம் வருசம். கோய்ம்த்தூர் சும்மா எப்புடி இருன்ச்சு தெரீமா? திருச்சி ரோட்ல சுங்கத்துக்கும் மேக்கதா டிவைடரு. அதுக்குங் கெளக்க எல்லா ஒத்த ரோடுதே. காந்தீபுரத்துல கரூர் வண்டி ஏறுனா 40 நிமிசந்தே பொங்லூரு (நான் அங்கதா பொறந்து வளந்து, பள்ளிக்கோடம் படிச்சு, காலேசு முடிச்சு..அட அவ்வளவு ஏ..கருமம் கலியாணம் வரைக்கு அங்கதான நம்ம பொளப்புத்தனம். 2009 வரீலும் அது கோய்ம்த்தூர் மாவட்டந்தானொ). என்னொ ஒண்டிப்புதூர்ல ரெயில்வே கேட்டு போட்டாப் போச்சு. அதே மாதர இந்தல்ல பொள்ளாச்சி ரோட்ல போனா ஒரே மரமா இருக்கு ரெண்டு அல்லைலயும். வளிபூரா தோட்டங்காடு, தோப்புன்னு அவ்ளோ நிதுவா இருக்கு. அதுல அப்ப முள்ளுப்பாடி கேட்டு வளியா ரயில் போகு. மேட்டுப்பாளைய ரோட்ல மட்டும் என்ன மரத்துக்குப் பஞ்சமா? ஆயரத்துக்கும் மேல புளியமரமா இருக்கு காரமட போக வரீலும். சத்தி ரோடும் அப்புடித்தே. அவுனாசி ரோடெல்லாம் இப்புடி மாறும்ன்னு எவங்கண்டா? டவுனுக்குள்ள பஸ்ஸுல சுத்துனா அவ்ளோ நல்லா இருக்கு. உப்ப நானிருக்குற வடவள்ளியெல்லாம் அப்ப ஒரே காடு. புதூரத் தாண்டுனா ஊடுகளே இருக்காது. பஸ்ஸுல ஆளுகளும் இருக்காது. மருதமல போனம்னா காத்து சும்மா சிலிசிலுன்னு அடிக்கு...பாம்பாட்டி சித்தர் கோயலுக்கு மேல அருவில தண்ணி வரும். நானே குளிச்சுக்கறே. அந்தக் காலம் வரவா போகுது உனி. சேரி டைம் வண்டிய அவடத்தாலைக்கே பார்க் பண்ணிரலாம்.

 

இப்படி ஒரு நாள் அந்தக் காலத்துல நான் கோயமுத்தூர்ல ஒரு போஸ்டர் பார்த்தேன். ’தியானலிங்கம் உலகிற்கு அர்ப்பணிப்பு’ன்னு போட்டிருந்தது. நான் பார்த்த இடம் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு எதுத்தாப்புல ஜெயில் கிரவுண்டு காம்பவுண்டு சுவத்துல. ஆன்மிக ஒளியைப் பப்பரப்பேன்னு பரப்ப யோகாசனம் (யோகா + சனம் = விஜயகாந்த் விளக்கம். அன்றே கணித்தார் கேப்டன். சனம் இவர் பின்னாடி இருக்கும்ன்னு) என்னும் டார்ச்சோடு வந்து இன்னைக்கு வரைக்கும் டார்ச்சர் பண்ணுகிறார் மனுஷன் (சாரி...தெய்வம்). ஒரு மனுசனப் பத்தி சும்மா வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசக்கூடாது. அவர் கஞ்சா வித்தாரா, போலீஸ் ஸ்டேஷன்ல கேஸ் இருக்கா, வசிய மருந்து (அப்படியெல்லாம் ஒண்ணு இருக்கா என்ன? இருந்தா சொல்லுங்க எல்லாத்தையும் வசியம் பண்ணி நம்ம பக்கத்த ஃபாலோ பண்ண வைக்கணும்) வச்சு வெளிநாட்டு, உள்நாட்டுப் பணக்காரங்கள/பெண்களை வசியம் பண்ணினாரா, தன் பொண்டாட்டிய தானே கொண்ணுட்டு சமாதி கட்டினாரா, அதுக்கு அவங்க மாமனார் கேஸ் குடுத்தாரா, யானைப் பாதையைக் கபளீகரம் செஞ்சாரா, காட்டை ஆக்ரமிச்சாரா, ஏழை/மலைவாழ் மக்கள் நிலத்தப் புடுங்குனாரா, பாதரச லிங்கக் குளத்தில் குளிக்க வந்த பெண்கள ஏதும் பண்ணினாரா, பள்ளிக்கூடங்குற பேர்ல பாலியல் குற்றங்கள் நடக்கக் காரணமா இருந்தாரா, பல தற்கொலை/கொலைகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கா, இமயமலைக்குக் கூட்டிட்டுப் போயி பொம்பளைகளுக்கு இம்ச குடுத்தாரா, மரத்த வெட்டினாரா, சத்தியமங்கலம் போற வழியில காரை வேகமா ஓட்டி ஒரு பையன் மேல இடிச்சி அவனுக்கு மோட்சம் வாங்கிக் குடுத்தாரா, நாலஞ்சு வருசத்துக்கு முன்னாடி சிவராத்திரி அன்னைக்கு நைட்டு ஆடும்போது சமந்தா இடுப்பக் கிள்ளுனாரா, இதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க...(சொல்லல...சொல்லல்லுன்னு சொல்லி...நோ...நோ...) வேணும்ன்னா பியூஷ் மானுஷ், நக்கீரன் கோபால், உள்ளூர் வனச்சரக அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள், ஹிந்து மதத்தை அழிக்க வந்த தி.க/தி,மு,க ஜால்ரா ஊடகங்கள்/அவர்களால் ஸ்பான்சர் செய்யப்படும் யூட்யூப் சேனல்கள்ன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கங்க. இதப் பேசும்போது காருண்யா யுனிவர்சிடி செஞ்ச ஆக்ரமிப்பையும் பத்திப் பேசுங்கன்னு தேச பக்தர்களும் சனாதனிகளும் பேசுறதும் நியாயந்தான். அவர்கள் அடிக்கும் கொள்ளை, அங்கே நடக்கும் சட்டவிரோத செயல்கள் எல்லாத்தையும் தோல் உறிக்கணும். மதத்தின்/கடவுளின் பெயரால் யார் தப்பு செஞ்சாலும் தப்புதான். இப்ப...இன்னைக்கு....சத்குரு. எல்லோரையும் சமமாகப் பார்க்கும் நம்மவா என்ன சொல்ல வர்றா? நம்ம ஆள் செஞ்சது தப்புதான். ஆனா மாற்று மதத்தவா பண்ற தப்பையும் கேளுங்கோன்னுதான சொல்றா? சமமாத்தான பாக்குறா. சீமான் அத்திம்பேர் எங்கயோ போயிட்டர்.

சத்குரு அவர்கள் பேசினத வச்சு, நான் செய்தி/ஊடகத்துல பாத்தத வச்சுத்தான் நான் பேசுறேன். மொதல்ல நம்ம சத்குரு என்ன படிச்சிருக்காருன்னு தெரியல (அவரே சொல்லியிருக்காரு...நா ஒன்ணும் படிக்கல...ஸ்கூலுக்கும் போகல...ஒரு கிரந்தமும் படிக்கல...வேதமும் படிக்கல...). ஆனா மனுஷன் (சாரி தெய்வம்) என்னமா இங்க்லீஷ் பேசுறாரு. லா காலேஜ் பசங்க கேட்ட கேள்விக்கெல்லாம் சும்மா பிச்சு ஒதருவாரு...ஐ ஹேவ் ஃபாலோவ்ட் எவ்ரி லா இன் திஸ் கண்ட்ரின்னு அடிச்சு உடுவாரு சராமாரியா...இப்படித்தான் ஒரு ப்ரபல (மறந்து போச்சுன்னா இப்படி சமாளிச்சுக்கலாம்) ஊடகத்துல ஒரு இளம் செய்தியாளர் ஆக்கிரமிப்பு பத்திக் கேள்வி கேக்க....அப்ப நான் லைவா பாத்துட்டிருந்தேன். எங்க வீட்ல சமையல் நடந்துட்டிருந்தது. திடீர்ன்னு குக்கர் விசில் வரவும் நான் கேஸ் ஸ்டவ்வை அணைக்க உள்ளே ஓடினேன்...குக்கர் அமைதியாத்தான் இருந்துச்சு. டக்குன்னு டி.வி இருக்குற ரூமுக்கு வந்தா நம்ம சத்குரு தஸ்...புஸ்...உஷ்...உஷ்...ன்னுட்டிருந்தாரு. நானும் மனுஷன் (தெய்வம்) மூச்சுப் பயிற்சிதான் சொல்லித்தர்றாராக்கும்ன்னு நினச்சேன். அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியல. கேமரா மொதக்கொண்டு தூக்கிட்டு போச்சொல்லீட்டாரு. ஒரு ஞானிக்கே கோவம் வரவச்சுட்டாரு அந்தத் தம்பி. திருட்டு தி.மு,க பாசறைல வளர்ந்தவரா இருக்குமோ?

வடவள்ளியிலிருந்தே பல பேரு அங்க வாலண்டியரா (???) இருக்காங்க. எனக்கு அவங்களையே பெர்சனலாத் தெரியும். ப்ரைவஸி கருதி விவரங்கள் தரல. சிலர் ஈஷா கார்ப்பொரேஷன்ல வேலை செய்றாங்க. ஐ.டி வேலைய விட வேலை வாங்குவாங்களாம். சத்குரு நடத்தும் இந்த ஆன்மீக நிறுவனத்தின் மார்க்கெட்டிங் உத்தி எனக்கே (அங்க போன பெரும்பாலானோருக்கு) தெரியும். நான் ஏன் எப்பப் போனேன்னு கேக்குறீங்க? என்ன பண்றது? யாராச்சும் கெஸ்ட் கோவைக்கு வந்தா என்னமோ பெரிய புனிதத் தலம் மாதிரியும் புராதன ஆலயம் மாதிரியும் இங்கதான் அழச்சுட்டுப் போகச்சொல்றாங்க. அதுல ஒரு கொடும! ஏர்போர்ட்ல கோவையின் அடையாளமா சத்குரு சிலை (சிவன்னும் சில பேர் சொல்றாங்க) வச்சிருக்காங்க. பேரூர் எல்லாம் ஒரு அடையாளமா? இல்ல ஈஷா பக்கத்துல இருக்குற வெள்ளியங்கிரி மலையெல்லாம் முக்கியமா? அந்த மலைக்குப் போகவும் சத்குரு அவர்கள் ஷார்ட்கட் வைத்திருக்கிறார். மாதாமாதம் ஒரு முறை அல்லது இருமுறை அவரது சீடர்கள் பக்தகோடிகளை அழைத்துச் செல்வார்கள். ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

சரி பாய்ண்ட்டுக்கு வருவோம். ஈஷாவின் கோவில் (?) உள்ள பகுதிக்குச் சென்றவர்களுக்குத் தெரியும். நாம் அங்கு எள்ளுரண்டை வாங்கித் தின்று ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கும்போது சாதுவான குரலோடு இரண்டு பேர் வந்து ஐயா/அம்மா 15 நிமிஷமோ/30 நிமிஷமோ யோகா கத்துத்தர்றோம் பக்கத்து ஹால்ல...ம்ம்ம்ம் காசெல்லாம் ஒண்ணும் வேண்டாம்...சும்மாத்தான் (ஏதாச்சும் சினிமா டயலாக்கா இது?) என்பார்கள். இதுதான் முதல் ஃபிஷ்ஷிங் நெட்.

ஹானெஸ்ட்டா சொல்றேன்...அடுத்த பத்தி மட்டும் எனது கற்பனைக்கு எட்டிய அதிக நிகழ்தகவுள்ள ஒரு வழிமுறை.

உள்ளே சென்று திரும்பும்போது நீங்கள் புல்லரித்துப் புளகாங்கிதம் அடைந்துவிட்டால் அடுத்த கட்டம். பிறகு அடிக்கடி வகுப்புக்கு வரச்சொல்வார்கள். அங்கு உங்கள் பின்புலம் விசாரிக்கப்பட்டு, தரம் பிரிக்கப்படுவீர்கள். டோனாரா, வாலெண்டியரா, சீடரா இப்படி...

இந்தப் பத்தி..எனக்குத் தெரிந்தவர்கள் பற்றி. ஒரு கோடீஸ்வரி அம்மையார் எனக்குப் பழக்கமானவர். இவர்புகழேதான் பாடிக்கொண்டிருப்பார். அவர் வாழ்வில் அடைந்த முன்னேற்றத்துக்கு சத்குருவும் அவரது தியான முறைகளுமே காரணம் என்று என்னிடமே சொல்லியிருக்கிறார். அவரது புத்தகம் ஒன்றைப் பதிப்பிக்க நான் உதவியபோது (நெஜமாங்க) நான் இதனை அறிந்தேன். இது ஒரு வகை. இன்னொரு வகை கணவனால் பாதிக்கப்பட்ட/ திருமணம் ஆகாத/ விவாகரத்து ஆன/ திருமண வாழ்வில் வலிகளைச் சந்திக்கும் பெண்களை டார்கெட் செய்வது...இதற்கு பலியானது எனக்குத் தெரிந்த ஒரு பெண். அவங்க இன்னைக்கு ஈஷா சார்பா கும்பமேளாவுக்கெல்லாம் போயிருக்காங்க.

மேற்கொண்டு என்ன நடக்கும்ன்னு அடுத்து ஒரு இன்வெஸ்டிகேஷன் ஜேர்னல் ஸ்டார்ட் பண்ணி, துப்பறிஞ்சு சொல்றேன். 

நான் இங்கு மாங்கு மாங்குன்னு எழுதிக்கொண்டிருக்கும் நேரம் சத்குரு சும்மா பட்டையக் கிளப்பிட்டிருப்பாப்ல. எல்லா சேனலும் இதைத்தான் ஒளிபரப்புறாங்க. டி.வி டேன்ஸ் ஷோக்களுக்கு ஐயாவை ஏன் ஜட்ஜா கூப்டக்கூடாது? இந்த வருஷம் கரகாட்டக்காரன் படத்துல கனகாவக் கெடுக்கப் பாப்பாரே...அந்த வில்லன்...ம்ம்ம்...நடிகர் சந்தான பாரதி அவர் ச்சீஃப் கெஸ்டா வந்துருக்காரு போல. வீட்டுப் பக்கத்துல போஸ்டர்ல பார்த்தேன். 

நம்ம சத்குருவுக்கு ஒரு சமயம் மூளைல எதோ பிரச்சனை ஆயிடுச்சு...அப்பத்தான் தெரிஞ்சது......(நீங்க ஃபில் பண்ணினது சரிதான்). இவுரு வெவசாயம் பத்தி, மன்னு பத்தி, பேசுனது கேட்டா யாரே ஆனாலு கோப வரு. ஏன்னா அதெல்லா ஒரு தன்மெ. ஒரு விக்னானொ. நாம வாளிட்டிருக்கற வாள்க்கெ பத்தி, இன்னும் புதிய கல்வி கொள்கெ பத்தி தமிலு, கன்னடான்னு பல மொளிகள் தெரிஞ்ச நம்ம ஐயாவ யாராச்சும் கேள்வி கேட்டாங்கன்னா போதும் நா என் வேல பாக்குற...என்னோடா செய்லுல தப்பிருந்தா அர்சாங்கொ பாத்துக்வாங்க நீங்க உட்ங்கொ ன்னு தப்பிக்காம பதில் சொல்லுவார்.

அதெல்லாம் உட்டர்லாங்க. காவேரி காலிங்னு சொல்லி ஊர ஏமாத்துன இந்தப் பிக்காலிப் பயல தாடியப் புடிச்சு நாம கேள்வி கேட்க முடியுங்களா? அவரு சத்குருவாச்சே. நீதிமன்றங்களே இவர் வழக்குகளைத் தள்ளுபடி செஞ்சாலும் ஒரு காலம் வரும்....அப்ப இந்த மனுஷன் (தெய்வம்) செத்துப் போயிருப்பாரு. அப்புறம் வயசுக்கு.....(சேம் டயலாக்).

உள்ளம் கொதிக்குதுங்க...இருங்க தியானம் பண்ணிட்டு வர்றேன். 

இப்ப நான் டைப் பண்ற அந்த கீ ஸ்ட்ரோக் சத்தம் உங்க காதுக்குக் கேட்கணும்.

ம த த் தி ன்  பெ ய ரா ல்  ம க் க ளை   ஏ மா ற் று ம்  எ வ னை யு ம்  நா ம் 

த ப் பி க் க  வி ட க் கூ டா து.


கடவுள் நம்பிக்கை அவரவர் உரிமை. ஆனால் பிறப்பின் அடிப்படையில் மனிதருள் ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் எம்மதத்தையும்/கொள்கையையும்  நாம் ஏற்க முடியுமா? 

இப்படி நாம் சிந்திக்கத் தொடங்கும் இரவுகளில்தான் போலிச்சாமியார்களுக்கும் கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கும்  சவக்குழி தோண்டப்படுகிறது, ஹேப்பி சவ சிவராத்திரி.

- வி. மஹாலிங்கம்

வடவள்ளி, கோவை. 

 

 

 

 

 

 

Monday, 24 February 2025

கண்மணி அன்போடு....

 கண்மணி அன்போடு....

தலைப்பப் படிச்சதும் ஒரிஜினல் குணா பட சாங் உங்கள் காதில் ஒலித்தால் நீங்களும் என் தலைமுறை. மஞ்ஞும்மல் போய்ஸ் (மலையாளிகள் அங்கனெயாக்கும் பரயும்) படம் நினைவுக்கு வந்தா நீங்க பழசயெல்லாம் மறக்குற பாவின்னு அர்த்தம். க்கும்...புதிய தலைமுறை எதுக்கு இந்த ப்ளாக் எல்லாம் படிக்கப் போறாங்க? (இப்படிச் சொல்லி ஒரு மார்க்கெட்டிங்தான்...ப்ளீஸ் உங்க பசங்களையும் படிக்கச் சொல்லுங்க).  நமக்கு எப்பவும் இருமொழிக் கொள்கைதாங்க. ஐ மீன் எழுதறதுல. டமில் ஆங்கிலம்ன்னு நான் மிக்ஸ் பண்ணி எழுதுவேன். தூய தமிழ் வேணும்ன்னாலும் எழுதுவேன்...தேவை இருந்தா மூன்றாவது மொழியிலயும் எழுதுவேன். இப்பப் பாருங்க...നിങ്ങൾ മഞ്ഞുമ്മൽ ബോയ്സ് ചലച്ചിത്രം കണ്ടിട്ടുണ്ടോ? - நிங்கள் மஞ்ஞும்மல் போய்ஸ் சலச்சித்ரம் கண்டிட்டுண்டோ? ஆனா பானி பூரி எனக்குப் பிடிக்காது...அது உடம்புக்கும் கெடுதல். நீங்களா எதாவது கோத்துவிட்றாதீங்க அப்றம் என் வீட்டை முற்றுகை இட்ருவாங்க. முஜே ஹிந்தி அச்சே ஸே மாலூம் ஹை. நான் ஸ்கூல் படிக்கும்போது 30 நாட்கள் ஹிந்தி புக் வாங்கிக் கத்துக்கிட்டேன். ஆனா ஸ்கூல்ல கத்துக்கல. சரி..சரி...ப்ளாக் எழுதுனமா, திரும்பத்திரும்பப் படிச்சுப்பாத்து சந்தோஷப்பட்டமான்னு இருக்கணும். இப்படி போற போக்குல அரசியல் கருத்துகளையெல்லாம் அள்ளித் தெளிக்கப்படாது - இது எனக்கு நானே திட்டம்....ச்சய் மறுபடியும் அரசியல்.

அதெல்லாம் நமக்கு வேணாம். வந்த வேலையப் பாப்போம். உங்களுக்கு லவ் லெட்டர் எழுதின அனுபவம் இருக்கா? சும்மா சொல்லுங்க வீட்ல சொல்லமாட்டேன். ஒரு நிமிஷம்....நேத்து எழுத வராததுக்கு ஒரு காரணம் இருக்கு. சரவணா....டைம் மெஷின ராமசாமி சைக்கிள் கடைல கொடுத்து ஓவராயில் (அது overhauling ன்னு தெரியும். ஆனா நாங்க அப்படித்தான் சொல்லுவோம்) பண்ணிட்டேன்.  சரவணன் யாருன்னு தெரியலன்னா நீங்க இன்னும் கமென்ட் படிக்கல...போயி படிச்சுட்டு நீங்களும் கமென்ட்டுங்க. இப்ப போலாம் ரைட்...எனக்கெல்லாம் லவ் லெட்டர் எழுதுன அனுபவம் இல்ல (எங்காத்துலயும் இதப் படிப்பாங்களோன்னோ?).... இவங்க எழுதறத அங்கயும் அவங்க தந்தத இவங்களுக்கும் கொடுத்து போஸ்ட்மேன் வேல பாத்த அனுபவந்தான் இருக்கு. என்ன எல்லாரும் ரொம்ப நம்புவாங்க (ச்சின்ன்ன்ன வயசுல). அதனால எழுதுன லவ் லெட்டர நாலா மடிச்சு லேசா எச்ச தொட்டு ஒட்டித் தருவாங்க. அத சரியான நேரத்துல உரியவங்ககிட்ட சேர்க்கறதுக்குள்ள நமக்கு நாக்கு வறண்டு வெலவெலத்துப் போகும். அப்ப நான் ஒல்லியா சின்னப் பையனா இருப்பேன் (இது அது இல்ல...சீமான் அண்ணன்கிட்ட இருந்து காப்பி ரைட்ஸ் வாங்கிட்டேன்). அதனால ‘அக்கா அங்க மரத்துக்கடியில ஒரு பொருள் வச்சிருக்கேன்...அந்த அண்ணன் கொடுத்தாங்க’ன்னு சொல்லிட்டு ஓடிருவேன். இந்த கூரியர் சர்வீஸப் பாராட்டி இரண்டு பக்கத்திலிருந்தும் தலா ஒரு ஆரஞ்சு மிட்டாய் கிடைக்கும். இப்ப  ட்டக்குன்னு ஒண்ணு தோணுது. அதையும் சொல்லிர்றேன். கண்மணி அன்போடு காதலன்னு நாம இப்பவும் முனுமுனுக்குற குணா படம் வந்த அதே ஆண்டுல (1991) வந்த ஒரு லவ் லெட்டர் சாங் இருக்குற படம் என்ன படம்? சொல்லுங்க பாக்கலாம்....எஸ்...யூ ஆர் ரைட்.. ரேசன்  சேரன் பாண்டியன். அப்பறம் அந்தப் பாட்டு....ஆஹா..அதேதான் ப்ரமாதம்...மெமரி, மெமரி...நல்ல மெமரி. ’காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு’...என்னா பிக்சரைசேஷன்?  ....சிரிச்சுகிட்டே என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீஜாவ.....மறக்க முடியுமா? அப்பத்த இளைஞர்களின் க்ரஷ். இருக்காதா பின்ன? அவங்க கேரள இறக்குமதியாச்சே.  அவங்க அழக வர்ணிக்குற அளவுக்கு அப்ப எனக்கு வயசு இல்ல; எட்டாவது-ஒன்பதாவதுதான் படிப்பேன். ஆனந்த பாபுவும் அதில் நடித்திருக்கிறார் என்பது ஒரு கொசுறு தகவல். இந்தப் பீடிகையெல்லாம் போட்டாத்தான் நீங்க மனசத் திறந்து உங்க லவ் லெட்டர் கதையச் சொல்லி மாட்டிக்குவீங்க.

பி.கு: பிகு பண்ணாம ரெண்டு நாள் டைம் மெஷின்லயே இருங்க....பசிக்குதா? அப்ப ஸ்விக்கி எல்லாம் இல்ல....இதுக்குத்தான் மொதல்லயே பாக்கு மட்டைல புளிச்சோத்தக் கட்டி எடுத்துட்டு வர சொன்னேன். 

இந்த நேருக்கு ஒரு ட்விஸ்ட்ட வப்போம். இன்னைக்கு ஒரு புதூ உத்தியக் கையாளுவோம்.  இத பாகம் ஒண்ணுன்னு போட்டுட்டு...வாசகர் அனுபவத்தக் கேட்டு இன்புட் வாங்கிட்டு அப்புறமா தொடருவோம். ஒரே கல்லுல...மூணு நாலு மாங்கா. 1) ஆர்ட்டிக்கிள் லென்த் கொறஞ்சா மாதிரியும் ஆச்சு 2) லைவ்லியா இருக்குற மாதிரியும் ஆச்சு 3) ஃபாலோயர்ஸ் வர்றாங்களான்னு டெஸ்ட் பண்ணா மாதிரியும் ஆச்சு 4) நாமும் நேரத்துல தூங்கியாச்சு😆

........................................................................................தொடரும்.........................................

ஸ்னிப்பெட் (அடுத்த பகுதி முன்னோட்டம்) ----அக்காலக் காதல் vs இக்காலக் காதல், Pen vs keyboard, பேனாவின் வகைகளும் அதை வைத்து நாம் செய்த சேட்டைகளும்..

இதெல்லாம் படிக்க...உங்கள் அனுபவத்தைப் பகிருங்க, கமென்ட்டுங்க, ஃபாலோ பண்ணுங்க. 

வி.மஹாலிங்கம்

வடவள்ளி, கோவை 

 

 

Saturday, 22 February 2025

காலையில் தினமும்

காலையில் தினமும்

மூணாவது ப்ளாக் எழுதறதுக்குள்ள மூச்சு முட்டுது. என்னோட பக்கத்தப் படிக்கறவங்களோட சராசரி வயது என்ன இருக்கும்ன்னு நினைக்குறீங்க? குத்துமதிப்பா 35 ஆவது இருக்கும். எதுக்குக் கேக்குறேன்னா இப்ப உங்கள ஒரு டைம் மெஷின்ல ஏத்திவிடப்போறேன். ஒரு 25 வருஷம் பின்னாடி போயிப் பார்ப்பமா? நம்ம வீட்டுக் காலை நேரங்கள் எப்படி இருக்கும்? நைட்டின்னா என்னன்னே தெரியாத நம்ம அம்மா 4 மணிக்கே எந்திரிச்சு வீடு கூட்டி, வாசல் தெளிச்சு, அழகா ஒரு கோலம் போட்டு, அப்பாவ 5 மணிக்கு எழுப்பி விட்டு அவங்க ரெண்டு பேரும் ஒரு காபி போட்டுக் குடிச்சுட்டு, அவருக்குத் தேவையான பணிவிடைகள் செஞ்சுட்டு அக்காவையோ/அண்ணனையோ ஆறு மணிக்கு எழுப்பிவிட்டு, வீட்டு வேலைகளுக்கோ/வெளிவேலைகளுக்கோ அவங்களப் பயன்படுத்திட்டு நாம கடைக்குட்டியா இருந்தா ஒரு 7 மணிக்கு எழுப்பிவிடுவாங்க. வீட்டுக்குள்ளேயோ வெளியேயோ எப்பவும் ஒரு விறகடுப்புல தண்ணி காஞ்சுட்டே இருக்கும். அக்கால அப்பாக்களுக்கு தினமும் ஷேவ் பண்ற பழக்கம் இருந்தது. அந்த வேலை பளிச்சுன்னு முடிஞ்சதும் ஒரு பழைய துணியையும் தேங்காய் எண்ணெய் + மண்ணெண்ணெய் கலவையைச் சேமித்து வைத்திருக்கும் ஒரு பிரத்யேகமான ப்ளாஸ்டிக் பாட்டிலையும் எடுத்துட்டு, கட்டம் போட்ட லுங்கி, பொத்தல் விழுந்த கைபனியனோடு சைக்கிளைப் பளிச்சுனு தொடைக்க உக்காந்துடுவாங்க. ஒரு குறிப்பிட்ட வயசு தாண்டுனா அந்த வேலை ஆண் பிள்ளைகள் மீது ஹிந்தியைப் போல் திணிக்கப்படும். நாமும் அம்மாவுக்குத் தெரியாம சீமார்ல இருந்து ஒரு குச்சிய லாவகமா உருவி, துணியில சுருட்டி, பெடலைச் சுத்தி அந்த சைக்கிள் சக்கரத்தோட ரிம்மைச்  சுத்திகரிப்போம். பிறகு அப்பா குளிச்சுட்டு வர்றக்குள்ள நம்ம ஆள் இருக்குற தெருப்பக்கமா ரெண்டுகையையும் விட்டுட்டு ஒரு ரவுண்டடிச்சுட்டு வந்து ஸ்கூலுக்குப் பொறப்பட்டாத்தான் அந்த நாள் இனிய நாள். வீட்ட ஒட்டியோ கொல்லையிலையோ இருக்குற சின்னத் தோட்டத்துக்கு தண்ணி பாய்ச்சுறேன் பேர்வழின்னு தண்ணியில விளையாண்டு அப்புறம் வீட்டுக்கு வெளியவே குளிச்சுட்டு காக்கி வெள்ளை யூனிஃபார்ம் போட்டுகிட்டுத் தயாராவோம். நாம சரியான நேரத்துக்குப் புறப்பட என்ன இருந்தது? அலாரமா? அலெக்ஸாவா? எல்லாம் ரேடியோதான். இருபடப் பாடல் நிகழ்ச்சியில முதல் பாட்டு முடிஞ்சா மணி 8:35. பக்கத்துவீட்டுக் குழந்தைகளோட பேசி சிரிச்சுட்டு நடந்து ஸ்கூலுக்குப் போவோம்.  ஸ்கூல் தூரமா இருந்தா ரோட்டுல போற மட்டுவண்டியின் பின்புறம் நம்ம ஒயர்கூடையை (ஸ்கூல் பேக்) மாட்டிட்டு வண்டிக்காரர் பாக்காதப்ப அதுலயே தொங்கி ஆனந்தமா ஸ்கூல் வாசல்லயே போய் இறங்குவோம். லீவு நாளா இருந்தா காலையில் எந்திரிச்சதும் விளையாட ஓடிருவோம். அப்புறம் 10 மணிக்கு மேல் நம்மளத் தேடி பொடிசுகள் ரூபத்தில் சம்மன் வரும். சரி...போதும். உங்கள ரொம்ப நேரம் சந்தோஷமா இருக்க நான் விடுவேனா? டைம் மெஷின் 2025க்கே ரிட்டர்ண் ஆயிடுச்சு. இறங்குங்க...பாத்து பாத்து... இடுப்பு சுளுக்கிடப் போகுது. வயசாகுதில்ல.

2025 பிப்ரவரி 22. சனிக்கிழமை. “நாளைக்கு நேரத்துல எந்திரிக்கிறோம். நியூ  இயர்ல எடுத்த சபதத்த நிறைவேற்றும் விதமா வாக்கிங் போறோம்”ன்னு நினைச்சுட்டே லைட்ட அணைக்கிறோம். நோட்டிஃபிகேஷன் வந்துச்சோ இல்லையோ சார்ஜ்ல இருக்குற ஃபோனை இழுத்தும் இழுக்காமலும் எடுத்து வாட்ஸாப்பை ஒரு முறை, மெஸன்ஜரை ஒரு முறை நோண்டி, யூட்யூப்ல வெட்டியா ஒரு வீடியோ பார்க்கிறோம். பெரும்பாலும் அது அரசியலோ அல்லது இளையராஜா சாங்காவோ இருக்கும். (அதுல ஒருத்தன் போடுவான் பாருங்க கமெண்ட்டு...2025 ல யாரெல்லாம் இந்த வீடியோ பாக்குறீங்கன்னு. அந்தப் பரதேசி மட்டும் என் கைல கிடச்சான்....அவனக் கூட மன்னிச்சுடுவேன். அதுக்கு ரிப்ளையும் லைக்கும் பண்ணியிருப்பானுக பாருங்க அவனுகளையெல்லாம் நாமே அமெரிக்காவுக்கு அனுப்பி ட்ரம்ப் கையால விலங்கு மாட்ட வைக்கணும்). இது என்ன நமக்குப் புதுசா? கல்யாணமாயி சில ஆண்டுகளுக்குப் பின் இப்படித்தான நாம பண்ணிட்டிருக்கோம். கடைசியா 12 மணிக்கு நம்ம ஸ்கூல்/காலேஜ் குரூப்ல எட்டிப் பார்க்க, நாம் போடும் குட் நைட்டுக்கு மேல Today ன்னு காமிக்கும் பாருங்க அப்பத்தான் நாம சுய நினைவுக்கு வருவோம். இதுல எங்கத்த காலைல 5 மணிக்கு எந்திரிக்கறது. ஒரு பக்கம் அலாரம் சிணுங்க, அலெக்ஸா சத்தமிட (அலெக்ஸா சிணுங்கன்னா வேறமாதிரி இருக்கும். வேண்டாம்) ரெண்டையும் மிரட்டி அணைச்சு நாம மீண்டும் குறட்டை விட எழுந்து பாக்கும்போது 8 மணியா இருந்தாலே பெரிய விஷயம். 

இப்பத்தாங்க தலைப்புக்கு வர்றேன். காலையில் தினமும் கண் விழித்தால்  நாம் செய்ய வேண்டியது என்னான்னு நமக்கு இருந்த சொந்த புத்தி எப்பவோ காலாவதியாக, ரீல்ஸும் ஷார்ட்ஸும் நமக்கு சொல்லித்தருது. ஒருத்தன் எந்திரிச்சதும் படுக்கையிலயே நாலு எக்சஸைஸ் பண்ணணும்கிறான், இன்னொருத்தன் பல்லுவிளக்காம லிட்டர் கணக்கா தண்ணிகுடிக்கணும்கிறான், வேறொருத்தன் எண்ணெய் கொப்பளிக்கணும்கறான், கக்கா போகணும், கண்ணக் கழுவணும், மூக்கக் கழுவணும், நாக்க தண்ணியில நட்டு வைக்கணும், பச்சத்தண்ணில குளிக்கணும், யோகா பண்ணணும், தியானம் பண்ணணும், சுடுதண்ணி குடிக்கணும், அதில் எலுமிச்சம்பழச் சாறு கலக்கணும், தேன் கலக்கணும்ன்னு சில பேரு. கிராம்பு திங்கணும், பூண்டு திங்கணும், சீரகம் திங்கணும், வெங்காயம் திங்கணும், இஞ்சி திங்கணும்ன்னு பிரியாணிக்கு போடுற ஐட்டத்தையெல்லாம் சொல்றாங்க. இதுல எதையுமே பின்பற்றாத அளவுக்கு நாம சொல்பேச்சுக் கேட்காதவங்க இல்ல. ஆனா ஒவ்வொண்ணையும் ரெண்டு நாளைக்கு மேல நாம செஞ்சதில்ல. எது செஞ்சாலும் செய்யாட்டியும் நாம எல்லாரும் காலையில் எழுந்ததும் காமனா பண்ற விஷயம் ஒண்ணு. ஃபோன எடுத்து 100% சார்ஜ் ஏறியிருக்கான்னு பாக்குறது. அப்புறம் அப்படியே வாட்ஸாப் ஸ்டேட்டஸ்க்குத் தாவுறது. இதுல ஒரு ரகசியம் என்னன்னா (உசிலமணி வாய்ஸ்) பொண்டாட்டி வச்ச ஸ்டேட்டஸை நாம பாக்குறதே இல்ல. பறவைகள் பலவிதம்....ஒவ்வொன்றும் ஒருவிதம் மாதிரி ஸ்டேட்டஸின் வகைகள் யாவைங்குற 10 மார்க் கொஸ்டீனுக்கு விடை எழுதுறேன் பாருங்க.  

  • இதில் முதலிடம் சாமிக்கே. இப்பெல்லாம் பசங்க ஜிம்முக்குப் போறாங்களோ இல்லையோ...சாமிகெல்லாம் ஜிம்முகுப் போறாங்க போல...சிவன், ராமன் எல்லோரும் சிக்ஸ்பேக், செஸ்ட், பைசெப்ஸ், ட்ரைசெப்ஸ்ன்னு கட்டிங்ஸோட காட்சியளிக்குறாங்க. முப்பாட்டன் முருகன், வாராஹி அம்மன், இயேசப்பா வரை போட்டு ஆன்மிக ஜோதியை ஏற்றுவது இவ்வகை. அதிலும் பகவத் கீதை சொல்லுதுன்னு இவனுகளோட கருத்த எழுதி கிருஷ்ணர்-அர்ஜுனர் படத்தப் போடுறவங்க மேல ஒரு இனம் புரியா எரிச்சல் வரும்.  அதே மாதிரி பைபிள் வசனங்கள், சங்கீத மொழிகள் இதெல்லாம் பரவால்ல, ‘போடாங்கொய்யா’ ஜான் ஜெபராஜின் ஜெபகீதங்கள ஒலிக்க விடுறதெல்லாம் டூ மச். 

  • இளையாராஜா ரசிகர்களுக்கு இரண்டாவது இடம். அவனவன் சிச்சுவேஷனுக்குத் தகுந்தமாதிரி ராத்திரியே ஒரு பாட்டப் போட்டு, காலைல நம்மள.... அதுல ஒரிஜினலை ஜீரணிக்கலாம். அன்ப்ளக்டு எனும் அளப்பறைய ஏத்துக்க மனம் இடம் கொடுக்கல. 

  • முதுகுல குத்திட்டான்னு முக்குறவங்களுக்கு மூன்றாவது இடம். எப்பப்பாத்தாலும் துரோகம் பண்ணிட்டான், யாரையும் நம்பாதன்னு நெகட்டிவ்வா பேசிகிட்டே இருக்கும் இந்தக் கூட்டம். 

  • நான்காவது இடம் நடிகர்களையெல்லாம் தத்துவவாதியாக்கி அவங்க கக்குன வசனங்களையெல்லாம் வளைச்சுப் போட்டு பின்னணி இசை சேர்த்துப் பின்னிப் பெடலெடுக்கும் ரகம்.
  • எல்.ஐ.சி., ஸ்டார் ஹெல்த் போன்ற இன்சூரன்ஸ் இம்ஸை அரசர்கள் போடும் விளம்பரங்களுக்கு ஐந்தாவது இடம். ஏற்கனவே பீதியில் இருக்கும் நம்மை ஹாஸ்பிடலில் சேர்க்காமல் ஓயாது இக்கூட்டம்.

  • அரசியல் கட்சிகள் பற்றி மாற்றி மாற்றி மீம்ஸ் போடும் தொண்டர்கள் ஸ்டேட்டஸ்களுக்கு ஆறாவது இடம். 

  • வெளிநாட்டு உள்நாட்டுப் பொன்மொழிகள்/சாமியார்களின் (அனைத்து மத) திருவாய்மொழிகள்ன்னு திக்குமுக்காடச் செய்யும் ஸ்டேட்ஸ்களுக்கு ஏழாமிடம். இதுல ஒண்ணையாவது வைக்குறவங்க பின்பற்றுறாங்களான்னெல்லாம் கேட்கப்படாது. என்னது சொல்ற சாமியார்களே ஃபாலோ பண்றதில்லையா?
  • எப்போதும் செல்ஃபி/ சொந்த ஃபோட்டோ/குடும்ப ஃபோட்டோ/ ட்ரிப் ஃபோட்டோன்னு வரிசையாக ட்ரெய்ன் விடும் பிரியன்கள்/பிரியாக்களுக்கு எட்டாவது இடம்.

  • மூன்றாவது தெருவில் நான்கவது வீட்டிலுள்ள ஐந்து வயதுக் குழந்தை முதல், முப்பது வருடத்துக்கு முந்தைய காதலி வரை எல்லோருக்கும் அவரவர் ஃபோட்டோ போட்டு, பேக் கிரவுண்டு பாடலுடன் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும் வெள்ளை உள்ளங்களுக்கு ஒன்பதாம் இடம். 
  • யாருக்கும் தீங்கின்றி பூப்போட்டு குட்மார்னிங் சொல்லும் புனிதர்களுக்குப் பத்தாவது இடம். 

       இதற்கு மேல் எழுதினால் வீட்டில் தங்க இடமில்லையாம். மேலிடத்து உத்தரவு. 12:45 மணியாகுது மக்களே. 23ந்தேதி ஆயிடுச்சு. காலைல நேரத்துல எந்திரிச்சு வாக்கிங் போகணும். அதுக்கு முன்னாடி இத ஸ்டேட்டஸ்ல வைக்கணும்...குட் நைட். 

-வி. மஹாலிங்கம்,

வடவள்ளி, கோவை. 

 


 

        

  

 


Wednesday, 19 February 2025

குட்மார்னிங் கோச்

 குட்மார்னிங் கோச்

இதுக்கு முன்னாடி எழுதுன கட்டுரைல (?) தமிழருவி மணியன் பத்தி எழுதுறேன்னு சொன்னதுனால யாரும் தப்பா நினைக்கலையே. தனிமனிதர்களைப் பற்றித் தனியா எழுதறதில்லன்னு நமக்கு ஒரு கொள்கை. அதனால பல தனிமனிதர்கள சேத்து வச்சு ஆசை தீர ரோஸ்ட் பண்ணுவோம்.  ஆங்...சொல்ல மறந்துட்டேன். போன பதிவப்பத்தி சிலபேரு கருத்து தெரிவிச்சிருந்தாங்க (2 க்கு மேற்பட்டாலே சில ன்னு சொல்லலாமாம்). என்ன கொடுமை சரவணன் இது (நெஜமாவே என் இன்னோரு ஃப்ரண்டுங்க இவரு. முதல் கருத்து, ஒரே கருத்து- இப்ப எழுதுற வரைக்கும்-தெரிவிச்சதே அவர்தான்). மைக்கேல் மதன காம ராஜன் படத்துல வர்ற மளிக லிஸ்ட் மாதிரி ரொம்ப நீளம்ன்னு ஒரு வாசகி அங்கலாய்க்குது. “கூந்தல் நீளமா இருந்தாப் பாராட்டுற அதே சமூகந்தான்.....(இந்த இடத்துல செந்தமிழன் சீமான் மாதிரி படிச்சீங்கன்னா நல்லா இருக்கும்) கட்டுரை நீளமா இருந்தா கலாய்க்குது” அப்படீன்னு சொல்லத்தோணுது. டேய் நில்ரா...எவண்டா அது சின்னப்பையன்.. ‘பூமர் அங்கிள்’ன்னு கத்துறது?  

நான் ரொம்ப ஹெல்த் கான்சியஸ். ஒடம்ப எப்பவும் ஃபிட்டா வெச்சிருப்பேன். ஒரு ஆரோக்யமான டயட்டை ஃபாலோ பண்றவன். பேட் ஹேபிட்ஸ் எதுவும் கிடையாது... இப்படி யார் சொன்னாலும் நான் அவங்க கூட சேரவே மாட்டேன். இருந்தாலும் சின்ன வயசுல ஸ்ப்ரிண்ட், ரிலே, மாரத்தான்...இப்படி ஆரம்பிச்சு ஸ்லோ ரன்னிங், ஜாக்கிங், ஸ்பீட் வாக்கிங், வாக்கிங், ஸ்லோ வாக்கிங்ன்னு ஆயிடுச்சு இப்ப. வடவள்ளி வீதிகளில் (தெருத்தெருவா இல்லீங்க) நடந்துட்டிருந்த நானு போன வாரம் ஒரு நாள் பணக்காரனாகறதுன்னு முடிவெடுத்தேன். அன்னைக்கு ராத்திரி தூக்கமே இல்ல. மண்டைக்குள்ள ஜி.டி. நாயுடு, கே.ஜி. பக்தவச்சலம், தைரோகேர் வேலுமணி ன்னு ஒரே திங்க்கிங். காலைல 5 மணிக்கு எந்திரிச்சு 1C பஸ் புடிச்சு உப்பிலிபாளையம் டி.எஸ்.பி ஸ்டாப்ல இறங்கினேன். என்னோட பணக்காரக்கனவு நனவாக இன்னும் சில மீட்டர் நான் நடந்தாலே போதும்ன்னு நினைக்குறப்ப எனக்கே புல்லரிச்சுது. ஆமாங்க நான் அடைஞ்சுட்டேன்... என் 26 வருசக் கனவு... ரேஸ் கோர்ஸ்ல வாக்கிங்... ஒரு வருஷம்....வேண்டா வேண்டா...ஆறுமாசம் போனாலே பணக்கரனாகிடலாம். பணக்காரங்க ரேஸ்கோர்ஸ்ல வாக்கிங் போறாங்க...அப்ப லா ஆஃப் அட்ராக்‌ஷன் படி... நீங்க அங்க வாக்கிங் போனா அவங்களோட வைப்ரேஷன்....எப்பவும் பணத்தப்பத்தி டிஸ்கஷன்....நியூ இயர் ரெஸல்யூஷன்.......உங்களோட ஆஃபீஸ்ல ப்ரொமோஷன்......உங்க ப்ரச்சனைக்கெல்லாம் சொல்யூஷன்...... பங்களா கன்ஸ்ட்ரக்‌ஷன்.....இனி வாழ்க்கைல நோ டென்ஷன்....நீங்க பணக்காரனாகறத யாராலும் தடுக்க முடியாது (சதுரங்க வேட்டை - ரைஸ் புல்லி- நட்டி டயலாக் சாயல் தெரியுது). இந்த லாஜிக்கை அடிப்படையா வச்சு சாரதா கோவில் எண்ட்ரன்ஸ்ல மங்களகரமா வாக்கிங் ஆரம்பிச்சேன். ஒரு நாப்பது எட்டுத்தான் வச்சிருப்பேன். கவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜ் ஹாஸ்டல் வாசலைத் தாண்டல. ஒரு ஆள் என்னையே குறுகுறுன்னு பாத்திட்டுருந்தான். ரொம்ப நேரமா வாட்ச் பண்ணியிருப்பான் போல. சார்ன்னு சன்னமா கூப்டான். நான் காது கேட்காத மாதிரியும் பிஸியா நடக்குற மாதிரியும் பாவலா பண்ணிட்டு சி.எஸ்.ஐ சர்ச் வரைக்கும் வந்துட்டேன். அவனும் பின்னாடியே சார் சார்ன்னு கூப்ட்டுட்டே வந்தான். நானும் நின்னு என்ன சார் ன்னு கேட்டேன். நீங்க நடக்குற மெத்தட் தப்பு சார்ன்னான். அதப்பத்தி உனக்கென்னய்யா அவனே இவனேன்னு வாய்க்கு வந்தபடி திட்டமுடியல. ஏன்னா ஆளு கொஞ்சம் பல்க்காவே இருந்தான்.  “நீங்க யாரு?” ன்னு..... நான் கேக்குறக்கு முன்னாடியே...சிரிச்ச மேனிக்கு “நான் ஒரு வாக்கிங் கோச் சார்” அப்படின்னான். எனக்கு ஒண்ணும் புரியல. மேற்கொண்டு நான் பேசுறதுக்குள்ள....மாசம் 8 நாள் கோச்சிங் சார். 4000 ருபீஸ் ஃபீஸ் சார் அப்டீன்னான். டக்குன்னு நான் பாக்கெட்டைத் தொட்டுப்பார்த்தேன். கொண்டு வந்த நாப்பது ரூபாய்ல எவ்ளோ மிச்சம் இருக்குன்னு ஒரே மெண்டல் மேத்ஸ்தான். அப்ப எனக்குக் கோவம் வந்தது....அந்த கோச் மேல இல்லீங்க....ஸ்டாலின் மேல... ஏன் ஆம்பளைகளுக்கு ஃப்ரீ பஸ் விட்டா என்ன குடியா முழுகிடும்? வாக்கிங்கை அப்ரப்ட்டா கட் பண்ணீட்டு மறுபடியும் பஸ்ல வீட்டுக்குத் திரும்பி வரும்போது கோச்சுகளப் பத்தி எழுதனும்ன்னு மனதின் மூலையில் ஒரு பட்சி சொல்ல விளைந்ததே இந்தப் பதிவு.

குழந்தை பிறந்தா அதை வளர்க்க ஒரு பேரண்டிங் கோச். பேராண்டிய வளர்க்க ஆயாவை வீட்டுல வச்சிருந்தா ஆய் கழுவ zoom class அட்டெண்ட் பண்ற நிலமை வந்திருக்குமா? அது கொஞ்சம் வளர்ந்ததும் ப்ரீ-ப்ரைமரியாமே....அங்க சேத்து நல்ல பழக்க வழக்கம் பழக பிஹேவியர் கோச். 3வது வந்துட்டாப் போதும் டான்ஸ் கோச், கிடார்/கீ போர்ட் கோச், ஷட்டில் கோச், கிரிக்கெட் கோச், மார்ஷியல் ஆர்ட்ஸ் கோச், செஸ் கோச்...இதுக்கு நடுவுல ஸ்போக்கன் இங்க்லீஷ் கோச். நம்ம பையன் தமிழ்ல ழ சொல்றான்னா வராதும்பான். ஆனா இங்க்லீஷ்ல father, mother ன்னு எழுதியிருந்தா ஃபாதழ், மதழ் ன்னு சொல்வான். எல்லாம் accent coach ஓட வேலைதான். இன்னும் பெருசானா லவ் பண்ண கோச் (நெசமாலுமே இருக்குறாங்க), ரிலேஷன்ஷிப் கோச், மேரேஜ் கோச்....இன்னோரு பக்கம் பிஸினஸ் கோச் (MLM coach கள் தனி), ஃபிட்னஸ் கோச், வெல்த் கோச், மணி கோச், வெல்நெஸ் கோச்...நல்லா ட்ரஸ் பண்ணிக்க grooming coach.. இதெல்லாம் நமக்கு வராதுன்னு யூட்யூப் பக்கம் போனா, AI coach, writing coach...ன்னு 9 ரூபாய் முதல் கோர்ஸ் சொல்லித்தர்றாங்க. எங்களுக்குன்னு சொந்தமா எதுவுமே தெரியாதா கோச்சுகளா? மூச்சு விடவும் கோச்சு.....ப்ராணாயாமாவாமே.. எல்லாத்தையும் தூக்கி சாப்பிடுற மாதிரி கோச்சுகளை கோச் பண்ணும் சூப்பர் கோச்.

எழுதிட்டிருக்கும்போது டக்குன்னு ஒரு ஃபோன். 

எதிர்க்குரல்: “சார் நான் ஒரு ஃப்யூனரல் (funeral) கோச்”
நான்: “அப்படியா! என்ன சொல்லித் தருவீங்க”
எதிர்க்குரல்: “சாகும்போது மூஞ்சிய எப்படி வச்சிருக்கணும்ன்னு சொல்லித்தருவோம்”
நான்: “எலே...எடுபட்ட பயலே...”
எதிர்க்குரல்: “சார்..ஃபேமிலி பேக் எடுத்தா ஆஃபர் இருக்கு..”
நான்:-----------டக்.

கோச்சுகள் கோலோச்சும் காலம். 
தமிழருவி மணியன் ஒரு முன்னோடி அரசியல் கோச். அவருக்கு, தான் பெரிய்ய பிரசாந்த் கிஷோர்ன்னு நினப்பு. சிவனேன்னு இருந்த ரஜினிய சீண்டி...சிங்கமா இருந்த அண்ணாமலைய நோண்டி...த.வெ.க தளபதி விஜய்ய...

இத்துடன் குட்மார்னிங் கோச் என்னும் தமிழருவி மணியன் பற்றிய கட்டுரை முற்றிற்று.
-வி. மஹாலிங்கம், வடவள்ளி, கோவை.

Tuesday, 18 February 2025

சொல்வனம்

மனம் போன போக்கில்...

எதாவது ஒண்ணு படிக்கணும்ன்னு இங்க வந்தவங்களுக்கு நான் எதாவது ஒண்ணு எழுதிக்கிட்டு இருக்கேன். தூய தமிழ் ஆர்வலர்கள், படைப்பாளிகள், இலக்கியவாதிகள், மருத்துவக் குறிப்பாளிகள், வேணும்ன்னே கெட்ட வார்த்தை எல்லாம்  போட்டு யாரையாச்சும் வசைபாடிட்டோ இல்ல அலங்கார வார்த்தைகள்/பஞ்ச் டயலாக் போட்டு யாரோ ஒருத்தரத் துதி பாடிட்டோ இருக்கவும் எவ்வளவோ பக்கங்கள் இருக்கு. நான் இங்க மனம் போன போக்குல எழுதப்போறேன்.  நான் எழுதறதப் படிச்சா அறிவு வளருமான்னு தெரியாது. ஜாலியா இருக்குமான்னும் தெரியாது. எனக்குப் பொழுது போகுது. இன்னோன்னு நான் எழுதறத அவ்வளவு சீக்கிரம் யாரும் வெளியிட மாட்டாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. போதாததுக்கு வயசும் ஆகுது. நான் எழுதறதைப் படிச்சுட்டு அறிவார்ந்த விவாதத்துக்கெல்லாம் வந்துறாதீங்க. நான் அந்த அளவுக்கு வொர்த் இல்ல.

சொல்வனம்

மொத நாளே நெகட்டிவ்வா ஆரம்பிப்போம். சொல்வனம் சொல்வனம் ன்னு ஆனந்த விகடன்ல கவிதை போடுவாங்க. இருங்க கொஞ்சம் லீட் கொடுக்கறேன். சின்ன வயசலர்ந்து வாராவாரம் ஆனந்த விகடன் வாங்கிப்படிச்சிட்டுருந்தவந்தான் நானு. வெல ஏற ஏற வாங்குறத விட்டுட்டேன். முந்தாநேத்து 40 ரூபா கொடுத்து வாங்குனேன். சில்ற இல்லாம (பாக்கட்ல காசே இல்ல...ச்சீ பொய் சொன்னேன். பாக்கட்டே இல்லை...டீ ஷர்ட் போட்டுட்டுப் போயிட்டேன். ஹி..ஹி.. இப்ப ப்ராக்கட்டுக்குள் ப்ராக்கட் (ஆனந்த விகடன்னு சொன்னாலே ஹி..ஹி..ன்னு ஆட்டோமேட்டிக்கா வந்துடுது)) பே.டி.எம் பண்ணலாம்ன்னு ட்ரை பண்ணி ஃபெய்லியர் ஆயிருச்சு. அப்புறம் என் நண்பன்கிட்ட இருந்து 50 ரூபா வாங்கி கடைக்காரருக்குக் கொடுத்தேன். இந்தச் சம்பவம் உண்மை மாதிரியே தெரியணும்ன்னா சில விஷயங்கள சேக்கணும். இப்ப மறுபடியும் மொதல்லருந்து. அன்னைக்கு சாயங்காலம் 5 மணி இருக்கும். என்னவோ இப்பல்லாம் மத்யான சோத்துக்கப்புறம் சீக்கிரமே மறுபடியும் பசிக்குது. சரி ஈவனிங் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்ன்னு முருகேசுக்கு ஃபோன் போட்டேன். இல்ல..இல்ல...அவனேதான் ஃபோன் பண்ணினான். என்னப் பாக்க வர்றேன்னு சொன்னான். நானும் நைஸா ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போயிடலாம்னு ஐடியா பண்ணினேன். நான் மனசுல நினச்சது வடவள்ளி ஆனந்தாஸ் ஹோட்டல்ல ஒரு காபியும் வடையும். பாவம் அவன் என்ன ஸ்ட்ரெஸ்ல இருந்தானோ.. தலைவரே ஆர்.எஸ். புரம் அன்னபூர்ணா போலாங்களான்னு தாராள மனசக் காட்ட, ரெண்டு பேரும் ஹோண்டா சிட்டி கார்ல (வெள்ளக்கலர், நம்பர் வேண்டாம் உடுங்க) போனோம். கார் அவனதுதான் என்பதை நான் சொல்ல வேண்டியதில்ல. அன்னபூர்ணால மல்டிலெவல் பார்க்கிங் வந்துருச்சு. மொதல்லயெல்லாம் 10 வண்டிகூட நிறுத்த முடியாது. காரைப் பார்க்கிட்டு ஹோட்டலுக்குள்ள போனோம். க்ரீம் பன் கிடைக்கும்ங்குற போர்டு வரவேத்துது. மனசுக்குள்ள கடை ஓனர் ஜி.எஸ்.டி பத்திப் பேசுனது, அது இதுன்னு நியாபகம் வந்துச்சு. நானும் ஒரு க்ரீம் பன்னத்தான் வாங்கித்திங்கலாமான்னு நினச்சேன் (என் வாழ்க்கைல நான் சாப்டதே இல்ல). ஆனா முருகேசு வாங்கித்தரப்போற டிஃபன சாப்டமுடியாதுன்னு கம்முனு இருந்துட்டேன். ஏ.சி. ஹால்ல போயி பந்தாவா உக்கரலாம்ன்னு பார்த்தா... அது குளோஸ்டு. சரின்னு சாதாரண ஹால்லயே சாப்ட்டோம். ஐயய்யோ லீட் குடுக்கறேன்னு பூராக் கதையும் சொல்லிட்டேன். ஆனா நம்புற மாதிரி இருக்குல்ல? (படிமம்- ஆங்கிலத்துல imagery ன்னு சொல்வாங்க...அந்தக் காட்சிகள் உங்களுக்குக் கற்பனைல வந்துச்சா?). தோ வந்துட்டேன் பாருங்க.  முருகேசு பார்க்கிங்க்லர்ந்து வண்டி எடுத்துட்டு வர்றதுக்குள்ள எதாச்சும் புக் வாங்கலாம்னு 19.02.25 தேதி போட்ட ஆனந்த விகடன் புக்க வாங்குனேன். அப்புறம் அதுக்கும் அவனையே பணம் கொடுக்க வச்சது காலம். இன்னும் என் மனசக் கிடந்து பிராண்டுறது என்னன்னா பிரண்டுகிட்ட 50 ரூபா வாங்கி, 40 ரூபா புக்குக்குக் குடுத்துட்டு, மீதி 10 ரூபயக் கூட அவனுக்குக் கொடுக்காம பாக்கட்ல போட்டுக்கிட்டதுதான் (இருங்க பாக்கட் இல்லன்னு முன்னாடி சொன்னேன்ல. இது பேண்ட் பாக்கட்). காருக்குள்ள புக் படிக்க முடியல. சோறு வாங்கித்தந்த முருகேசு பேசுறதுக்கு உம் கொட்டி ஓசி டிஃபனுக்கு ப்ராயச்சித்தம் தேடிக்கிட்டேன். இருங்க அடுத்த பேராகிராஃப் பிரிச்சு உட்டர்றேன்.

வீட்டுக்குப் போனதும் படிக்கறக்கு புக்க எடுத்தேன். இந்த இதழ் காதலர் தின சிறப்பிதழாம். சரி அது நமக்குத் தேவையில்லத டாப்பிக். அட்டைப் படத்தில் திரிஷா ஒரு தினுசா சிரிக்குது. திரிஷாவின் வயசு....என் வயசு... இதெல்லாம் மனசுக்குள் வந்துபோச்சு. ஆமா அதுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா? கல்யாணம்...கல்யாணம். இனி புக்குக்குள்ள. நேக்கு சினிமா பெருசாப் பிடிக்காதுண்ட்றதால இவுக திருத்தி மார்க் போடுவாகளே அதையெல்லாம் நான் படிக்க மாட்டேன். 1995 ல குருதிப்புனல் படத்துக்கு 'இது KURUDHIPPUNAL' ன்னு விமர்சனம் பண்ணி ஹாலிவுட் படம் மாதிரி இருக்குன்னு சிம்பாலிக்கா சொன்னாங்களாம். கமலுக்கே ட்ஃப் குடுக்குறாங்க. இந்த இதழ்ல விடாமுயற்சி. அந்தப் பக்கத்தப் படிக்க எந்த முயற்சியும் எடுக்காம உள்ளே போனேன். ஓஷோ கணக்கா ஒருத்தரு ஃபோட்டோ போட்டு எதோ அல்கெமின்னு போட்டிருந்துது. ஆனந்த விகடன் புரோமோட் செய்த நித்தி, ஜக்கி வரிசையில் இதுவும் ஒண்ணோன்னு கடந்து போகாம, படிச்சேன் கருமத்த. என்னப்பா சொல்ல வர்றாரு அவரு. திரும்பத் திரும்ப ஒரே விஷயந்தான். சேட் ஜி.பி.டி கூட கொஞ்சம் தமிழ் நல்லா எழுதும் போல இருக்குது. இந்தாளு காசு வாங்கிட்டு வகுப்பு வேற நடத்துறாராம். கோயமுத்தூர் இப்ப ரெம்ப ஃபேமஸ் ஆயிடுச்சு. மைவி3 லருந்து உணவுத்திருவிழா வரைக்கும் கழுவி ஊத்துறாங்க. கிணத்துக்கடவு ரவி, பர்வீன் யூனுஸ் இவங்க ஜோக்கெல்லாம் இன்னமும் வந்துட்டிருக்கும் ன்னு ஒரு அனுமானம். ஆனா இந்த வாரம் இல்ல போலருக்கு. வேற புதுசு புதுசா வந்துட்டாங்க.  வலைபாயுதே கொஞ்சம் நக்கலா இருக்கும். நம்மள மாதிரி சாதாரண மக்கள் தங்கள் சிந்தனைத் திறமையையும் வார்த்தை விளையாட்டையும் காட்டியிருப்பாங்க. இந்த வாரப் பகுதியப் படிச்சுட்டு சிரிச்சேன். 

மொதல்லையெல்லாம் குஜினி, குமல், குஜய், பாகுல் பூந்தி, கக்ரம், குமிழருவி பனியன்னு (முறையே ரஜினி, கமல், விஜய், ராகுல் காந்தி, விக்ரம், தமிழருவி மணியன் - நம்ம அடுத்த ஆர்ட்டிக்கிள் இந்தாளப் பத்தித்தான்) நையாண்டி பண்ணி லூசுப் பையன்னு ஒருத்தர் எழுதுவாரு. அத இப்பக் காணம். நான் ஒரு லூசுப் பையன்...இன்னுமா அதெல்லாம் வரும்? (ஆனா கன்னித்தீவு வருதுன்னு நினைக்கிறேன்).  ஆனந்த விகடன்ல வந்த வைரமுத்து கவிதைகளையோ தொடர்களையோ நான் படிக்க மாட்டேன் (அவர் கவித...படைப்பு...பேச்சு ன்னு நான் எதையும் ரசிக்க மாட்டேன்). மனுஷ்யபுத்திரன் படத்தப் போட்டு ஒரு பக்கம். அதையும் நான் படிக்கல (வேற எதத்தான் நீ படிச்சன்னு கேக்காதீங்க). 

தலைப்புக்குத் தாவுறேன். சொல்வனம் பகுதியில் கவிதைகள் இருக்கும். வாரமலர் கவிதைகள் ஒரு ரகம் என்றால் இவை வேறு ரகம். பல சமயம் புரியாது....எதுக்கு இதையெல்லாம் பப்ளிஷ் பண்ணியிருக்காங்கன்னு. சான்றுகளோட எழுதணும்ன்னா நிறைய புக் கலெக்‌ஷன் வேணும். என்கிட்ட இல்ல. அதனால இந்த வாரக் கவித ஒண்ணு. கவிஞர் ஸ்ரீநிவாஸ் பிரபு அவர்கள் எழுதியது (ஏண்டா வைரமுத்து, மனுஷ்யபுத்திரன்னு எழுதிட்டு.... இப்ப கவிஞர்.. நீ யாரடா ஓட்டற? என்னும் தங்கள் மைண்ட் வாய்ஸை யாம் கேட்கிறோம்).

ஃபோட்டோ போட்டா நல்லா இருக்காது. அச்சு பிசகாம நானே டைப்புறேன்.

திருமணத்தில் ஒன்றுசேராது போன
அவனும் அவளும்
சந்தித்துக்கொண்ட
குளிரூட்டப்பட்ட பல்பொருள் அங்காடியில்
நீரில் பரவிய எண்ணெய்ப் படலமாய்
தனித்த வண்ணங்களை 
வெப்பத்துடன் வெளிப்படுத்துகிறது
ஊடுருவும் பார்வைக்குள்
உள்ளுறைந்த காதல்
                                      - ஸ்ரீநிவாஸ் பிரபு

இதைப் படித்ததும் நம்ம வடிவேல் சொல்வாருல்ல தலையப் பிச்சுக்கிட்டு ‘என்னங்க இது எனக்கு ஒண்ணுமே புரியலங்க’ன்னு அப்படித்தான் நேக்கும் இருந்தது.

நேர் நேர் தேமா வருதான்னோ என்ன பா வகைன்னோ அசை, சீர், அடி, தளை, தொடை (8ம் வகுப்பு இலக்கண புக்ல படிச்சது) இதெல்லாம் சரியான்னோ நாம கேக்கல. ஏன்னா தெரியாது. ஆனா எதாச்சும் மீனிங் வேணுமில்லங்க. அதுவும் அந்தக் கடைசி நாலு வரி... புதுக்கவிதை ன்னு எதை எழுதினாலும் பப்ளிஷ் பண்ணிடுவாங்க போல.. காதலர் தின சிறப்பிதழ் இல்லையா? 
ஒரு வாசகனா என்னால இந்தக் கவிதையப் புரிஞ்சுக்க முடியல... அது என்னப்பா நீரில் பரவிய எண்ணெய்ப் படலம்.....தனித்த வண்ணம்... வெப்பத்துடன் வெளிப்படுத்துகிறது...
இதுக்கெல்லாம் சாதி ஒழிப்புப் போராட்டங்கள்தான் காரணம். கோனார் நோட்ஸையே வேரோடும் வேரடி மண்ணோடும் அறுத்துட்டாங்க போலருக்கு. அது இருந்திருந்தாலாச்சும் நான் அருஞ்சொற்பொருள், பொழிப்புரைன்னு எதாச்சும் படிச்சுத் தெரிஞ்சிருப்பேன். 

விகடனுக்கு ஒரு பக்கம் செண்ட்ரல் கவுர்மெண்ட்டு ட்ரபுள் குடுக்குது. இன்னொரு பக்கம் நானு (எவ்ளோ பெரிய ஆளு பாத்தீங்களா?). 

“வறண்டு கிடக்கும் சொல்வனம் 
வளமாவதெப்போது?
துவண்டு கிடக்கும் விகடன் தாத்தா
துள்ளிக்குதிப்பதெப்போது?” 

ன்னு நேக்கே எழுதத் தோணறது.

சொல்வனம் பகுதித் தேர்வுக்குழுவுல அடியேனையும் சேர்த்துக்க அப்ளிக்கேஷன் போட்டிருக்கேன். (என்னாது.....அதுக்கு சொல்வனம் கவிதைகள் எல்லாத்தையும் படிக்கணுமா? ஆள விடுங்கப்பா சாமி. நான் பர்வீன் சுல்தானா ரசித்துச் சொல்லும் ஹைக்கூக் கவிதைகளையே படிச்சுக்கிறேன். என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல...அந்த அம்மாவப் பார்த்தாலும் காண்டாகுது. சில சமயம் ஓவராப் பேசும். கப்ஸாவா அடிச்சு விடும். தெரிஞ்சு பேசுதா தெரியாம பேசுதான்னே தெரியாது... மோட்டிவேட்டஷன் ஸ்பீச்சுக்கு காலேஜ்களுக்குக் கூப்டா....நம்மள மோஷன் போக வச்சுடும்)

----புனை பெயர் வைக்கும் அளவுக்கெல்லாம் இல்லீங்க.
வி. மஹாலிங்கம், வடவள்ளி, கோவை.
 

திருப்பாச்சி

திருப்பாச்சி             வணக்கம் வாசகர்களே. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு சந்திக்கிறோம். சிரித்தது போதும். கொஞ்சம் சீரியஸ்ஸாக எழுதலாம் எனத் ...