Saturday, 22 March 2025

திருப்பாச்சி

திருப்பாச்சி

    

 

    வணக்கம் வாசகர்களே. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு சந்திக்கிறோம். சிரித்தது போதும். கொஞ்சம் சீரியஸ்ஸாக எழுதலாம் எனத் தோன்றியது. இதுவரை எழுதியதைப் படித்து விட்டுச் சிரிக்காமல் இருந்தாலும் கூடப் பரவாயில்லை. இதைப் படித்துவிட்டுச் சிரிக்காமல் இருந்தால் சரி.  தலைப்பைப் பார்த்ததும் ஓரளவு ஊகித்திருப்பீர்கள். ஆம். இளைய தளபதி விஜய் அவர்கள் நடித்து 2005 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான வெற்றித் திரைப்படம் என்றே ‘திருப்பாச்சியை’க் கூறலாம். இப்பதிவு முழுமையான ஒரு திரை விமர்சனம் அல்ல என்றாலும், திரைப்படங்கள் பற்றிய ஒரு சராசரி மனிதனின் பார்வையை இதில் நான் முன்வைக்கிறேன். நமது அனுபவங்களை நாமே அசைபோட்டு மகிழ ஒரு தளத்தை ஏற்படுத்த முயல்கிறேன். 

             மனம் போன போக்கில் நான் எழுதுகிறேன் என்றாலும், மேக்கிங் ஆஃப்  த  ஃபில்ம் போன்று இப்பதிவின் பின்னணியையும் சற்று விளக்கிவிடுகிறேன். ஒரு சிந்தனையாளன் மக்களைச் சென்றைடையப் பல வழிகள்  இருப்பினும் திரைப்படம் என்னும் கலை அதற்கு அளிக்கும் வாய்ப்பைப் போல மற்ற கலைவடிவங்கள் அளிப்பதில்லை என்றே கூறலாம். கலைகளை, நிகழ்த்துகலைகள் (Performing arts), நிகழ்த்தாக்கலைகள் (Non-performing arts) என இருவகையாகப் பிரிக்கின்றனர். ஓவியக்கலை, சிற்பக்கலை, கவிதை/கதை எழுதுதல் போன்றவை நிகழ்த்தாக்கலைகளுக்கு எடுத்துக்காட்டுகள். ஓர் ஓவியன் வரையும்போது, ஒரு சிற்பி சிலை வடிக்கும்போது, ஒரு கவிஞன் எழுதும்போது, ஓர் எழுத்தாளன் புனையும்போது நாம் பார்ப்பதில்லை.  கலையின் பயன் முழுமை அடைந்தபின்னரே நாம் அதனை ரசிக்கிறோம். விமர்சிக்கிறோம். அவ்வாறன்றி, பாடல், ஆடல், நாடகம் போன்றவை நிகழ்த்து கலைகளாம். நிகழ்த்த நிகழ்த்தவே அவை கலையார்வலர்களைச் சென்றடைகின்றன. மேடை நாடகம், தெருக்கூத்து, இசைக் கச்சேரி போன்ற கலைகள் மக்களை ஈர்த்து அவர்களது ரசிப்புக்கு விருந்தாக, சோர்வுக்கு மருந்தாக, வாழ்வைச் செம்மையாக்கும் கருத்துப் பெட்டகங்களாக விளங்கியுள்ளன. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்த நிகழ்த்து கலைகள் இன்று பதிவு செய்யப்பட்ட நிகழ்த்து கலைகளாக (Recorded performing arts) மக்களிடையே சேர்கின்றன. பதிவு செய்யப்பட்டவை என்பதால் வேண்டியபோது தக்க கருவிகள் வாயிலாக நாம் அவற்றைக் கேட்டும் கண்டும் களிக்கமுடியும்.

            இவ்வாறுதான் நாம் பாடல்களையும் திரைப்படங்களையும்  அவை நிகழ்த்தப்பட்டு, தொகுக்கப்பட்டு,  வெளியிடப்பட்டபின் மீண்டும் மீண்டும் கேட்கிறோம்/பார்க்கிறோம். திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் தருவது சரியா தவறா என்ற கேள்வி நியாயமானது என்றாலும் திரைப்படம் என்னும் தொழில்நுட்பம் பிரபலமான பின்னர் அன்றாட வாழ்வில் நமது உரையாடல்களிலும் கற்பனைகளிலும் நடவடிக்கைகளிலும் திரைப்படங்களின் தாக்கத்தை நாம் காணமுடியும். நாகேஷ் மாதிரி சிரிப்பு காட்டுகிறான், நம்பியார் மாதிரி வில்லத்தனம் செய்கிறான், வடிவேல் மாதிரி சேட்டை செய்கிறான், பொண்ணு ஸ்ரீதேவி மாதிரி இருப்பாள், ரஜினி மாதிரி ஸ்டைல் செய்கிறான் என்பதோடு சினிமா வசனங்களை நம் சொந்த வாழ்வின் நிகழ்வுகளோடு பொருத்திப் பார்த்து நாமும் பயன்படுத்துகிறோம். 

    ஆகவே ஒரு திரைவிமர்சனம் வாயிலாக இன்னும் நாம் நெருக்கமாக முடியுமா என்ற சோதனையில் இறங்க முற்பட்டேன். மிகவும் பழைய படமாகவும் இல்லாமல் புதிய படமாகவும் இல்லாமல், அதேபோல் நடுத்தர (30-40) வயது ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகர் நடித்த படம் ஒன்றைத் தேர்வு செய்து, முழுமையாகப் பார்த்துவிட்டு விமர்சிப்போம் என்று 2022 ஆம் வெளிவந்த பீஸ்ட் படத்தையே முதலில் தேர்வு செய்தேன். ஆனால் இன்னும் OTT யில் ஒரு படம் கூடப் பார்த்த அனுபவம் எனக்கு இல்லை என்பதால் (OTT யில் பார்க்க விருப்பம் இல்லை என்பதாலும்) சூப்பர் குட் ஃபில்ம்ஸின் அஃபீஷியல் யூட்யூப் சேனலில் கிடைத்த திருப்பாச்சியை முழுமையாகப் பார்த்தேன். Central Board of Film Certification முதல் The End ல் வரும் அடங்கொக்கா மக்கா என்னும் கவுண்டமணியின் ஃபேமஸ் பஞ்ச் வரை கண்டேன். கோடிகள் செலவு செய்து எடுக்கும் படத்தை கண்ணியமற்ற முறையில் பொதுவெளியில் விமர்சிக்க முடியாது. ஆனால் நாகரீகமான முறையில் நிறைகுறைகளைப் பட்டியலிடலாம். ஸ்வாரஸ்யமான தகவல்களைப் பகிரலாம். அப்படித்தான் இப்பதிவு இருக்கப்போகிறது.

           பாட்ஷா படத்தில் நக்மா யார் குழந்தை என்ற கேள்விக்கு இன்றளவும் சரியான விடையும் தெரியாமல், யாரைக் கேட்பது என்பதும் தெரியாமல் தாமே தர்க்கரீதியாக முடிவுக்கு வந்து மனசாந்தி அடையும் ரசிகர்களை ஃபேஸ்புக்கில் பார்க்கலாம். இதையெல்லாம் விவாதப் பொருள் ஆக்குமளவுக்கு நமக்குக் கலைவெறி உண்டு. நான் இதுவரை செய்த சாதனைகள் இரண்டு. 1. ஒரு கிரிக்கெட் மேட்சையும் பார்த்ததில்லை 2. பாட்ஷா படம் கோவை கே.ஜி. தியேட்டரில் 365 நாட்கள் ஓடியும், நான் பார்க்கவில்லை. ஆனால் டி.வி யிலேயே 100 முறை போட்ட படங்களுள் பாட்ஷாவும் ஒன்று என்பதால் சின்னச்சின்ன டயலாக் கூட அத்துப்படி. என் வயதொத்தவர்கள் பார்த்த சராசரித் திரைப்படங்களை விட நான் குறைவாகவே கண்டிருப்பேன் என்றாலும் தியேட்டர் அனுபவம் பற்றிப் பேச ஆசையாக இருக்கிறது. அடுத்த சினிமா சிறப்புப்பதிவின் தலைப்பை இங்கேயே கொடுக்கிறேன்: ‘லட்சுமி தியேட்டர்’ - ஒரு கிராமத்துத் திரையரங்கத்தின் கதை.

        இப்ப ‘திருப்பாச்சி’. அதுக்கு முன்னாடி விஜயுடனான என் அறிமுகம். நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது (1987) வெளியான சட்டம் ஒரு விளையாட்டுன்னு ஒரு படம், எதுக்கோ ஸ்கூல்லயே ப்ரொஜெக்டர் வச்சு ஓட்டிக்காட்டினாங்க (இப்பத்தான் தெரியுது அது தமிழ்மொழி விழிப்புணர்வுப்படமாம்). அதில் விஜயகாந்த் ஹீரோ. எஸ்.ஏ.சி டைரக்‌ஷன், ஷோபா சந்திரசேகர் தயாரிப்பு. ‘ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது....’ https://www.youtube.com/watch?v=fd66GHX_lhU h என்னும் பாடலில் (அந்தப் படம் போட்டுக்காட்டிய வகுப்பறையும் அப்பாடல் காட்சியும் இன்றும் மனதில் இருக்கு) விஜயகாந்தின் சிறிய வயது பாத்திரமாக முதன் முதலில் முகம் காட்டுவான் அப்போது எட்டாவது படித்துக்கொண்டிருந்த மாஸ்டர் விஜய். அந்தப் படத்தை ஓர் இருட்டு வகுப்பறையில் பார்த்ததால் சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்துக்கும் இப்படத்துக்கும் நான் கன்ஃப்யூஸ் பண்ணிக்குவேன். ஏன்னா அதுலயும் விஜயகாந்த் தான் ஹீரோ. 

 இந்தப் படத்தைக் கணக்கில் சேர்க்காமல் விஜய் வளர்ந்து பெரியவரானதும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து சூப்பர் ஹிட் அடித்த பல படங்களுக்குப் பிறகு திருமலை, உதயா, கில்லி, மதுர படங்களுக்குப் பின் 40 ஆவது படமாக வந்ததுதான் ‘திருப்பாச்சி’. முந்தைய படங்களில் பெரும்பாலும் நல்ல வழவழப்பான முகத்துடன் அடர்த்தியான நேர்த்தியான மீசையோடு காட்சியளித்த விஜய் ‘திருமலை’, ‘கில்லி’, ‘மதுர’ படங்களில் மீசையைக் கொஞ்சம் ட்ரிம்மியும் லேசாக தாடி வைத்தும் வேறு மாதிரி முக அமைப்பை ஏற்றார். கொஞ்சம் உடலும் மெலிந்து, இன்னும் சின்னப்பையன் போலத் தெரிந்தார். அந்த கெட்டப்பின் தொடர்ச்சியாகவே ‘திருப்பாச்சி’யில் சிவகிரி பாத்திரத்தில் அதிரடி காட்டுவார். 

         இனி கொஞ்சம் படத்துக்குள். 2005 ல் வெளியானாலும் டைட்டில் கார்ட் டிசைன் பழைய படங்கள் போலவே இருந்தது. ஜஸ்ட் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 2007 ல் வெளியான சிவாஜி திரைப்படத்தின் கலர் க்வாலிட்டியோ டெக்னிகல் இம்ப்ரூவ்மென்ட்டோ இதில் இல்லை. ஒரு வேளை ப்ரொட்யூசர், டைரக்டர், ஹீரோ பொறுத்து அமைந்திருக்குமோ என்னவோ. திருப்பாச்சியில் தனது சர்வ திறமைகளையும் காட்டியிருப்பது விஜய் அல்ல. இயக்குநர் பேரரசுதான். அவர்தான் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எல்லாம். டி.ஆர் இடம் இவர் பயிற்சி பெற்றிருக்கலாம். ஆனாலும் ஏனோ இசையமைப்பை தினாவுக்குக் கொடுத்துவிட்டார். பேரரசு ஒரு பாடலாசிரியர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? கிட்டத்தட்ட 12 படங்களுக்கு சுமார் 35 பாடல்கள் எழுதியுள்ளார். 15க்கும் மேற்பட்ட படங்களில் (பெரும்பாலும் அவரது இயக்கத்திலேயே) நடிக்கவும் செய்துள்ளார். திருப்பாச்சிதான் இயக்குநராக அவரது (டெப்யூ-Debut) முதல் படம். அதில் முதல் பாட்டு ‘நீ எந்த ஊரு, நான் எந்த ஊரு, முகவரி தேவையில்ல..’ என்பது. இத்திரைப்படம் வெற்றி பெற்று அவருக்கு ஒரு முகவரி வாங்கித்தரவே, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி, பழனி, திருவண்ணாமலை, திருத்தணி என்று ஊர்ப்பெயர்களிலேயே படம் எடுத்தார். என்ன சென்ட்டிமென்ட்டோ? தினா இசையில் எல்லாம் யார் வேண்டுமானாலும் பாட்டெழுதலாம். சித்தீஈஈஈஈ...என்ற ராதிகாவின் தொடர்நாடகத்துக்கு இசை அமைத்தவரும் இவர்தான். கோயமுத்தூர்க்காரர். கும்புடப் போன தெய்வம் பாட்டைக் கேட்டா இவரது முத்திரை தெரியும். பாதிக்கு மேல் இதேபோலத்தான். பொறி படத்தின் ‘பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்’ போன்ற பாடல்கள் இவர் இளையராஜாவின் மாணவர் என்பதைக் காட்டும். பேரரசுவின் கவிவாரிசாக வந்தவர்தான் சிவகார்த்திகேயன். அரபிக்குத்து என்னும் மரபுக்கவிதை வரிகளான ’ஹலமத்தி ஹபீபோ ஹலமத்தி ஹபீ வந்தாலே’ என்ற வரிகளுக்குச் சொந்தக்காரர். அவர விடுங்க. அந்தபாட்டுக்கு விளக்கம் கொடுத்த இலுமினாட்டிப் பிரியர்கள் கொண்டாடும் பாரிசாலனை மறக்கமுடியுமா? இப்படி ஒவ்வொன்றாகக் கிளைக்கதை பேசினால் இன்னும் 3 பதிவுகள் இதேதான். இருந்தாலும் பேசாமல் இருக்க முடியவில்லை. மேகம் கறுக்காதா Pen (பென்) பென்னே என்று தனுஷ் பாடுவதைப் பொறுத்துக்கொள்ளும் சகிப்புத்தன்மை இருந்தால் இதை எல்லாம் நாம் கண்டுகொள்ள வேண்டியதில்லை (இதைப்பற்றி ஒரு தனிப்பதிவு பின்னர்). கும்பிடப்போன தெய்வத்துக்குறுக்கே இவர்களெல்லாம் வந்துவிட்டனர். ஆமாம் அதில் ஏன் சாயா சிங்கை அதற்குள் கேமியோ ரோலில் நடிக்க வைத்தனர் என்று தெரியவில்லை. அப்போதுதான் ஒரு நான்கைந்து படம் நடித்திருப்பார். அதில் ஒன்று திருடா திருடி. தனுஷின் கெட் அப் சரியாக ஒரே மாதிரி சீக்வென்ஸாக இல்லாமல் இருக்கும். முதல்நாள் மீசை, தாடி..இரண்டாம் நாள் சிறுவனைப்போன்ற முகம், மூன்றாம் நாள் மீண்டும் மீசை தாடி...கன்டினிவிட்டியில் கோட்டை விட்ட படம் அது. சரி...சரி...மீண்டும் திருப்பாச்சி. முதல் அறிமுகப்பாடலில் விஜய்க்குப் பொருந்தாத ஒரு ஜிப்பாவை மாட்டிவிட்டிருப்பார்கள். தன்னைப் பால்கார அண்ணாமலை ரஜினியாகவே எண்ணிக்கொண்டு பெர்ஃபார்ம் செய்திருப்பார் விஜய். ஓவராக முகபாவம் காட்டுவதில் விஜய்க்கும்  பெஞ்சமினுக்கும் போட்டி.  பழகிய முகம் கொண்ட நடிகர் பட்டாளம். சீனியாரிட்டிப்படி சொல்வதென்றால் எம்.என். ராஜம் அம்மா தொடங்கி குமரிமுத்து (பெஞ்சமினின் அப்பா), எம்.எஸ். பாஸ்கர் வரை. இன்னும் பட்டியல் நீளும்.

    அறிமுகப்பாட்டுக்குப் பின் சுமார் ஒரு வாரம் கழித்து அதே அளவெடுக்காத வெள்ளை ஜிப்பாவை மாட்டி விட்டு  கரிச்சாம்பட்டிக்கு விஜயை அனுப்பியிருப்பார்கள். ஒரே காஸ்ட்யூமில் வேறு வேறு சீன்கள் எடுத்ததன் விளைவு. அந்த எபிஸோடே தேவையில்லாதது. அரசியல் காரணம் இருக்கலாம். ஏனென்றால் அப்போதுதான் கோயில்களில் ஆடு, கோழி வெட்ட தடைச்சட்டம் கொண்டுவந்திருந்தார் கலைத்தாயும் முன்னாள் முதல்வருமான செல்வி ஜெயலலிதா. ஆனால் அதில் முஸ்லிம் பெயர்களைச் சொல்லித் தப்பிப்பதாக வரும் காட்சியில் ‘எங்கம்மா கும்தாஜ்...இல்ல மும்தாஜ்...’ என்பதையெல்லாம் அன்று சிறுபான்மையினர் பெரிதுபடுத்தவில்லை.

        தங்கையின் கல்யாணத்துக்குப் பின் மெட்ராஸ் செல்லும் விஜய் நாயகி திரிஷாவைச் சந்திக்கிறார். 2005 ல் பாவாடை தாவணியில் தோன்றும் திரிஷா ஒன்பதாவது அதிசயம்தான் (ஐஸ்வர்யா ராய் எட்டாவது). பெஞ்சமினின் இறப்புக்குப் பின் தங்கையையும் மாப்பிள்ளையையும் நைசாக ஊரில் இருக்கச்செய்துவிட்டு  விஜய் மெட்ராஸ் வந்து தனது சீக்ரெட் ஆப்ரேஷனைத் தொடங்கி முதல் ஃபைட்டிலேயே 21 பேரைப் போட்டுத்தள்ளுகிறார். ராக்கி ராஜேஷ்க்குப் (சண்டைப் பயிற்சி) பேசிய சம்பளத்தை சௌத்ரி முழுதாகக் கொடுத்திருப்பாரா என்று சந்தேகம்தான். சந்தனம் குங்குமம் விபூதி கலந்து முகத்தில் பூசிக் கொலை செய்வது 2005 ல் மாஸ். 2025ல் சிரிப்புத்தான் வந்தது. இருபது ஆண்டுகள் கழித்துப் பார்த்தது என் தப்புத்தாங்க. எலுமிச்சம்பழத்தைப் பாக்கெட்டிலேயே வைத்திருப்பார் போல விஜய். ஆனால் பான்பராக் ரவி (ஆர்யன்) க்குச் சங்கு ஊத அதை எங்கு வைத்திருந்தார் என்று கேட்கும் அளவு நான் லாஜிக் பார்ப்பவனல்ல.

                 சனியன் சகடை, பட்டாசு பாலு, பான்பராக் ரவி ஆகியோர் ஓரளவு பயமுறுத்துகின்றனர் குழந்தைகளை. இப்படத்துக்குப் பின் பாலு என்று பெயர் கொண்ட சில வெத்து வேட்டுகள் பட்டாசு பாலு என்று அடைமொழி வைத்து அகமகிழ்ந்திருக்கக்கூடும். சனியன் சகடையாக வரும் கோட்டா சீனிவாச ராவுக்கு வாய்ஸ் ஆர்டிஸ்ட் ராஜேந்திரன் குரல் கொடுக்கவில்லை என்றால் அவர் ஊமைக்கோட்டான் சீனிவாசராவ்தான். விஜய் ’ஐயர்’ வீட்டில் நடந்ததைப் பற்றி கம்ப்ளைன் கொடுக்கும்போதே திரிஷாவையும் காணவில்லை என்று கம்ப்ளைன் கொடுத்திருக்கலாம். ஆளையே காணோம். கால்ஷீட் பிரச்சனையாக இருந்திருக்கலாம். சிட்டியில் இருக்கும் போலீஸ் எண்ணிக்கையைப் புள்ளிவிவரமாகத் தரும்போது ஒன்று புரிந்தது. இவர்தானே சின்ன வயதில் சின்ன வயசு கேப்டனாக நடித்தவர். லிவிங்ஸ்டன்-வையாபுரி காமெடிகளை ரசிக்க முடியவில்லை.

                முதல் சீக்ரட் ஆப்ரேஷனுக்குப் பிறகு அதே பேட்டர்னில் செய்யும் கொலைகள் கணிக்கத்தக்கனவாகவே இருந்தன. ஒரு நீண்ட வசனத்தில் தேங்கா வெட்றதுக்கும், தென்னை வெட்றதுக்கும் எளனி வெட்றதுக்கும் என்று (எல்லாமே தென்னை மரத்தின் பாகங்கள்தான சார்?) வசனகர்த்தா பேரரசு சறுக்குகிறார். ஒரு வசனத்தில்  ‘ஆள் கில்லி மாதிரி இருந்தான் சார்’ என அடியாட்கள் சொல்லி விஜயின் முந்தைய பட ரெஃபரன்ஸ் கொடுப்பார்கள். ஆனால் என்னவோ விஜயின் ஹேர்ஸ்டைலில் கன்டினிவிட்டி பிரச்சனை. ஐயரின் கையை வில்லன்கள் உடைக்கும்போது விஜயின் (தங்கை வீடு) ஏரியாவில் வசிக்கும் உயரம் குறைந்த ஒரு நபர் வருவார். பின்னர் பான்பராக் ரவியைக் கொல்லும் ஆபரேஷனில் ஒரு போராட்டக் கூட்டத்திலும் வருவார். ஆனால் அப்போது அவருக்கு விஜயை அடையாளம் தெரியாது. பாவம் அவரே ஃபைனான்ஸில் பணத்தை இழந்து சோகமாக இருந்ததில் எப்படி இதை நினைவு வைத்திருக்க முடியும்? மேலும் இதையெல்லாம் யார் கவனிப்பார்கள் என்று துணைநடிகர்களை ஒருங்கிணைப்போரும் அசிஸ்டன்ட் டைரக்டர்களும் கருதியிருக்கக்கூடும்.

          சொன்ன தேதியில் வில்லன்களின் கதையை முடித்த பிறகு, விஜய்தான் அவற்றைச் செய்தது என்று தெரிந்த பின் அவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று ஒரு சாரார் எதிர்பார்க்க அதைப் பற்றிச் சிந்தித்து எதுக்கு சட்டச்சிக்கலை உருவாக்க வேண்டும் என்று நினைத்த அசோஸியேட் டைரக்டர்கள் குழு ’நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு’ என்று மூன்று சொற்களைப் பின்புலத்தில் ஒலிக்க விட்டு சிம்பிளாக மேட்டரை முடித்த விதம் மெச்சத்தக்கது.

        ஃபாத்திமா பாபுவைப் படத்தில் அடையாளம் கண்டவர்கள் தங்களைத் தாங்களே முதுகில் தட்டிக்கொள்ளலாம். 

      Beast படத்தைப் பார்த்து Sun TV Top 10 Movies சுரேஷ்குமார் போல கால் மேல் கால் போட்டு பீஸ்ட்-மொத்ததில் வேஸ்ட் என்று சொல்லலாம் என்றிருந்தேன். ஆனால் திருப்பாச்சி அப்படியில்லை. என்னதான் இருந்தாலும் 20 ஆண்டுகளுக்கு முன் ஹிட். ராஜூ சுந்தரத்தின் கோரியோக்ராஃபியில் விஜயின் ஆட்டம் (பாட்டு எதுவும் கதையோடு ஒட்டவில்லை என்றாலும்) படத்தை ஆட்டம் காணாமல் செய்கிறது என்றே சொல்லலாம். நம் விமர்சனத்தைப் பார்த்து மீண்டும் திருப்பாச்சியை ரீரிலீஸ் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ரவுடிகளை ஒழித்து மெட்ராஸைச் சுத்தமாக்குவதன் மூலமும், மெட்ராஸ் நல்லா இருந்தால்தான் தமிழ்நாடே நல்லா இருக்கும் என்ற வசனம் மூலமும் விஜய் அண்ணாவுக்கு மைலேஜ் கிடைக்கலாம். பனையூரில் இருந்து சில மைல்கள் வெளியே பயணிக்கலாம். திரிஷாவுடனான நட்புறவும் நீடித்து பெண்கள் வாக்குகளும் திரிஷா ரசிகர் மன்ற வாக்குகளும் கிடைக்கலாம். படத்தில் விஜயின் முதல் ஆப்பரேஷன் எபிஸோடில் ஒரு காட்சியில் ஒரு சிறிய ஃபோட்டோவுடன் மு.க. ஸ்டாலின் என்று எழுதியிருந்த போஸ்டர் ஒன்றும் தென்படுகிறது. ஏதோ போராட்ட அறிவுப்பு போலத் தெரிந்தது. எதிர்க்கட்சின்னாலே அப்படித்தானே. 2005ல் அ.தி.மு.க. ஆட்சி. அதன்பின் 2006ல் தி.மு.க ஆட்சி அமைத்தது (ஆமாம் கலைஞர்தான் முதல்வர்). தொடர்ந்து 2011 ல் ஜெயலலிதாவின் வெற்றிக்கு அணில் போல உதவுவதாக விஜய் தரப்பு சொன்னது. 2024 ல் த.வெ.க. ஆரம்பிக்கப்பட்டு 2026ல் தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளார் அண்ணா (விஜய் அண்ணா). திருப்பாச்சி பட லிங்க் https://www.youtube.com/watch?v=kT6BJcF3ajM

                    விஜய் என்றாலே வெற்றிதான் சினிமாவில். ஆனால் அரசியலில்?

    வாசகர் கருத்துகளைப் பொறுத்து மீண்டும் பழைய படங்கள் அவ்வப்போது போஸ்ட் மார்ட்டம் செய்யப்படும். 

 வி.மஹாலிங்கம்,

           வடவள்ளி, கோவை. 

Saturday, 8 March 2025

கண்மணி அன்போடு....... பகுதி 2

 கண்மணி அன்போடு....... பகுதி 2

         சிவராத்திரிக்குப்  பின் தியானத்தில் ஆழ்ந்ததால் எழுத இயலவில்லை. ஆனால், என் ஆன்மீக வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் நான் சின்ராசு பத்தி எழுதியதால் அரெஸ்ட் ஆயி ஜெயிலுக்குப் போயிட்டதா செய்தி ஊடகங்களில் வதந்தி பரப்பியிருந்தனர்.  இப்போது நக்கீரன் வலையொளியைப் பார்த்தால் சின்ராச அரெஸ்ட் பண்ணீருவாங்கன்னு சொல்றாங்க (எங்க நடக்கப் போகுது?). சரி விடுங்க, நாம யாரு வம்புக்கும் போறதில்ல....தும்புக்கும் போறதில்ல. கண்மணியைத் தொடருவோம் வாங்க. இதுக்கு நடுவால எப்படியெப்படியெல்லாம் அந்தக் காலத்துல லவ் லெட்டர் கொடுத்தாங்கன்னு வாசகர்கள்கிட்ட இருந்து பல லெட்டர்கள். சிலர் தங்களுக்கு வந்த உண்மையான லெட்டரையே அனுப்பியிருந்தாங்க. கொஞ்சம் செல்லரிச்சுப் போயி பழுப்பேறியிருந்த கடிதங்களையெல்லாம் படிச்சுப் பார்த்து அலசி ஆராயவும் நேரமாயிடுச்சு. ஆறாம் வகுப்பு படிக்குறப்ப தனக்கு வந்த அவசர அவசரமா தப்புத் தப்பா எழுதப்பட்ட  சில லவ் லெட்டர்கள பகிர்ந்திருந்தாங்க ஒரு தோழி. அதெல்லாம் லவ் லெட்டர்ஸா இல்ல மிஸ்ஸிங் லெட்டர்ஸான்னு (missing letters இங்க்லீஷ்ல ஒரு exercise இருக்குமே..) தெரியல. அவ்ளோ ஸ்பெல்லிங் மிஸ்டேக். இத்தனைக்கும் தமிழ்லதான் எழுதியிருந்தது. அதுல ஒரு லெட்டர் ஒன் சைடு நோட்டுன்னு சொல்லுவோமே (அறிவியல் பாடத்துக்கு வாங்குவோம். ஒரு சைடு ரூல்டு; இன்னோரு சைடு அன்ரூல்டு) அதுல எழுதியிருந்தது. தான் ஒன் சைடா லவ் பண்றேன்னு எவ்வளவு சிம்பாலிக்கா எழுதியிருக்கார் அந்த லவ்வர் (கிளவர்) பாய். இப்ப அவர் கிழவர் பாயா இருக்கணும். இதை மேலும் உறுதிப்படுத்த மெட்ராஸ்ல தடயவியல் நிபுணரா இருக்குற ஒரு நண்பருக்கு அனுப்பியிருந்தேன். ரிசல்ட்டப் பார்த்ததும் இத எழுதுனது நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தின்னு எல்லாம் இப்ப ஒடுங்குன ஆளாத்தான் இருக்கும்னு அவங்களே மெரண்டு போயிட்டாங்களாம். இந்தியன் தாத்தா மாதிரி கையெழுத்து இருந்தப்பவே நானும் மைல்டா டவுட்டானேன். விஞ்ஞான வளர்ச்சியின் காரணமா அடுத்த ஒரு லெட்டர்....அதை லெட்டர்ன்னு சொல்லமுடியாது.  ‘விக்ரம்’  (1986) கமல் படத்துடன் கூடிய ஒரு பொங்கல் வாழ்த்து அட்டை...அதுல ஒரு ஓரமா தன் காதலை வடிச்சிருந்தார் அந்தக் கலைஞர். என்னா ஐடியா...? பொங்கல் வாழ்த்துல எழுதினா சந்தேகம் வராதாம். அடுத்த கட்டமா, இன்லேண்ட் (இங்க்லேண்டுன்னு சொன்னாத்தான் எல்லோருக்கும் புரியும்) கவர்களில் இங்க் பேனாக்களில் கவிதைகளோடு எழுதப்பட்ட சில கடிதங்கள்... அந்தக் காலத்தில் டேட்டிங் கலாச்சாரம் எல்லாம் இல்லை. எல்லாமே லெட்டரில்தான். ஆனாலும் அவற்றைக் கார்பன் டேட்டிங் (carbon dating) செய்து பார்த்தபோது 1990-92 காலகட்டம் எனத் தெரிய வந்தது. பிறகு, லவ் லெட்டர் எழுதவே ரொமான்டிக்கான watermark background கொண்டிருந்த ப்ரத்யேக letter pad கடிதங்கள். அதில் கடைசியாக ஆண்கள் ரத்தத்திலும் பெண்கள் லிப்ஸ்டிக் முத்தத்திலும் கையொப்பமிட்டிருந்தார்கள். தாங்களே ஸ்கெட்ச், ஜிகினா, க்ளிட்டரிங் பேனா என்று அலங்காரம் செய்த லெட்டர் ஒன்று கண்ணைப் பறித்தது. அதில் கடைசியில் காதலனைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் காதலி அன்று விட்ட கண்ணீர்த்துளியும் இருந்தது. நான் கொஞ்சம் கண் கலங்கிவிட்டேன். பிறகு கண்ணில் விழுந்த அந்த ஜிகினாவை எடுத்ததும் கண் நார்மலானது. என்னதான் லேண்ட்லைன் ஃபோன், மொபைல் ஃபோன், ஈ-மெய்ல், வாட்ஸாப்ன்னு வந்தாலும் அந்தப் பழைய லெட்டர்களுக்கு ஒரு தனி மவுசுதான். உடனுக்குடன் ப்ளூ டிக் வருதான்னு பாக்குறதுல எங்க இருக்கு காதல்? ஒவ்வொரு லெட்டருக்கும் குறைஞ்சது நாலு நாள் காத்திருக்கணும். அந்தக் காதல் எல்லாம் எவரெஸ்ட் ஏறிப்போயாச்சு. போஸ்ட் ஆஃபீஸ் வாசல்லயே குடியிருந்து, போஸ்ட் மேனுக்கு தீபாவளிக் காசு குடுத்து காதல் கடிதங்களை வீட்டுக்கு வரும் முன்னர் நாமே நம் கைப்பட வாங்கிப் படிச்சு, ரசிச்சு, சிரிச்சு இல்ல அழுத சம்பவங்களை மறக்க முடியுமா? இல்ல அப்படிப்பட்ட கடிதங்களை வீட்டில் அட்டாரிகளிலும் பழைய ஃபோட்டோ ஆல்பங்களுக்குள்ளும் ஒளிச்சு வச்சு வீட்டில் யாரும் இல்லாதப்ப, பாடப்புத்தகத்துக்குள்ள வச்சு, படிச்சுப் படிச்சுப் பாத்தது நினைவை விட்டு நீங்குமா? என்ன ஒண்ணு பொங்கலுக்கு வெள்ளையடிக்கும்போதோ வீடு மாத்தும்போதோ கவனமா இருக்கணும். சிலது அப்படியே தொலஞ்சும் போயிருக்கும். தொலையுது உடுங்க.

        கனத்த இதயங்களைக் கொஞ்சம் லேசாக்குவோம். லெட்டர் பத்திப் பேசினதும் நாம் பயன்படுத்தின வித விதமான பேனாக்களப் பத்தி எழுதலாம்னு தோணுச்சு. மூணாம் வகுப்பு வரை பென்சில்தான். நாலாம் வகுப்பில் குண்டான Camlin இங்க் பேனா. அதைத் தூக்கிட்டு வர்றதுகுள்ள போதும் போதும்னு ஆயிடும். நாம் எழுதிய லட்சணத்துக்கு இங்க் தீரவே தீராது. எல்லாருக்கும் கேம்லின் பேனா கிடைக்கல அன்னைக்கெல்லாம். சில லோக்கல் கம்பெனி பேனாக்களும் இருந்தன. கொஞ்சம் அடிக்கடி லீக்கடிக்கும். அப்பல்லாம் இங்க் கறை இல்லாத சட்டைகளே இருக்காது. மை கொட்டினால் அதனைத் தலையில் தடவியே அட்ஜஸ்ட் செய்த நாம்தான் இன்று நரையை ஏற்றுக்கொள்ள முடியாமல் அதே தலையில் டை என்னும் மையைத் தடவுகிறோம். மரை போன பேனாக்களையெல்லாம் சேகரித்து 50 பைசாவுக்கு மரைபோட்டுப் பணம் சம்பாதித்துக் கடைசியில் சஞ்சய்கா (ஞாபகம் வருதா? ஞாபகம் வருதா? ஞாபகம் வருதா?.....) என்னும் சிறு சேமிப்பில் சேமித்த ஒரு நண்பன் கூட இப்போது நினைவுக்கு வருகிறான். லெட் பேனாவில் எழுதுவது அன்புரஃபஷனாலகக் கருதப்பட்ட காலமும் உண்டு. ஆனாலும் அவை புழக்கத்துக்கு வந்தன.

    Ballpoint பேனாவை வைத்து நாம செஞ்சது கொஞ்ச நஞ்சமில்ல. அதுல ஒரு ரூபாய்க்கு ஒல்லியா ஒரு பேனா கிடைக்கும். தண்டுப்பகுதியில் ஒரு கலர் ஸ்ட்ரைப் போட்டிருக்கும். அது இருந்தாலே கெத்துதான். மரக்கட்டைல ஒரு பேனா....அதுக்கு மூடி எல்லாம் இருக்காது.  ரீபில் மாத்த முடியாது. கண்டக்டர் எல்லாம் காதுல சொருகி வச்சிருப்பாங்க. அந்தப் பேனாவ மோந்து பாத்தா உக்கடத்தனமான (கோவைக்காரங்களுக்குப் புரியும்) ஒரு நாத்தம் நாறும். இதனைச் சமன் செய்யும் விதமா எழுதினா மணக்கும் லெட் பேனாக்களும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனாலும் ரெனால்ட்ஸ் கோலோச்சியது. இன்னைக்கும் இருக்கு. அப்ப விலை மூணு ரூபா இருக்கும். சச்சின் விளம்பரத்துல வருவான். Reynolds..The pen the world prefers ன்னு அவனோட மெல்லிய குரல்ல சொல்வான். நல்லா எழுதும். அதையே நம்ம குறும்புக்காரப் பசங்க உடைச்சு உள்ள இருக்கற ரீஃபில்லையும் கட் பண்ணி அதோட மினியேச்சர் வெர்ஷன் மாதிரி ஒண்ண ரெடி பண்ணுவானுக பாருங்க. அதுக்கெல்லாம் நாம பேட்டன்ட் வாங்கியிருந்தா அப்பவே இந்தியா வல்லரசாயிருக்கும். அதுக்குப் பின்னாடி ஹீரோ பேனா (Made in China ன்னு போட்டிருந்தாத்தான் அது ஒரிஜினலாம். நல்லா உழைக்குமாம். இப்ப சிரிப்பா வருதுல்ல). அதுல இங்க் ஊத்தத் தெரியாம நாம பட்ட பாடு இருக்கே...ஐயோ...ஐயோ...என்னதான் அது Hero பேனாவா இருந்தாலும் நம்பி பரிச்சைக்கு எடுத்துட்டுப் போனா அது வில்லனா மாறி நம்மளக் கால வாரிவிட்ரும். அதுக்குப் பின்னாடி ஜெல் பேனா...அது ஒரு ஜில் பேனா என்றால் மிகையல்ல. நோ லீக். நோ ஃபில்லிங். அதுலயும் கறுப்பு இங்க் ஜெல்ன்னா எனக்குப் பிடிக்கும். பிறகு பெருசானதும் Parker பேனாகூட வாங்கியிருப்போம். ஆனா எழுதுறதுதான் கம்மி ஆயிடுச்சு (இதப் பத்தி நான் ஆங்கிலத்துல ஒரு ஆர்ட்டிக்கிள் எழுதியிருக்கேன். அதைப் படிக்க இங்கே செல்லலாம்: https://www.linkedin.com/pulse/refiuelling-fountain-dr-viswanathan-mahalingam/?trackingId=iRoR56MT1v%2FRLDo1xRvZUw%3D%3D)

         லெட் பேனாவுலயே ரொம்ப ஃபேன்ஸியானது அஞ்சு மல்டி கலர் பேனா. அதுல ப்ளூ நல்லா எழுதும். கறுப்பு சுமார். சிவப்பு அல்லது ரோஸ் இன்னும் சுமார். இன்னும் ரெண்டு கலர் எதுக்கு இருக்குன்னே புரியாது. எழுதுனாலும் எடுப்பாத் தெரியாது. அந்த எல்லாக் கலரையும் ஒண்ணா அமுத்தி வெளிய வர வைக்கறது ஒரு விளையாட்டு. சீக்கிரம் உடைஞ்சிடும் இது. இங்க் பேனா சரியா எழுதலன்னா...கிடைத்தால் ப்ளேடாலோ இல்லாட்டி காம்பஸாலோ கீறிய அனுபவம் இருப்பவர்கள் கமென்ட்டவும்.  இங்க் கடன் வாங்குறது....டெஸ்க்கில் ஓரிரு சொட்டு விட்டு நிப்பால் உறிஞ்சுவது...இங்க் பழம்ன்னு ஒரு செடி இருக்கும். அதன் பழத்தை எடுத்து நாமே இங்க் தயார் செய்து பேனாவில் ஊற்றி....என்னா ஆனந்தம் அதெல்லாம். முழு ஆண்டுத் தேர்வு முடிஞ்சு அடுத்த க்ளாஸ்க்கு போகும் முன்னாடி இங்க் பேனாக்களக் கழுவுவோம். அது காயறதுக்குள்ள இங்க் ஊத்தி எழுதுனா டைல்யூட்டா எழுதும். எரிச்சலா வரும். அப்றம் வேணும்ன்னே ரெட் இங்க் பேனால ப்ளூ இங்க் கலந்து ஊத்தி எழுதுறது...அது இதுன்னு எதத்தான் சொல்றது? எத விட்றது? 

   ‘கண்மனி அன்போடு’ன்னு பேனால எழுதுன லெட்டர் முன்னாடி தங்லீஷில் தப்பும் தவறுமாக டைப்பி அனுப்பப்படும் வாட்ஸாப் குறுஞ்செய்திகள் நிக்குமா? 

           - வி. மஹாலிங்கம்

            வடவள்ளி, கோவை. 

 
    
        

திருப்பாச்சி

திருப்பாச்சி             வணக்கம் வாசகர்களே. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு சந்திக்கிறோம். சிரித்தது போதும். கொஞ்சம் சீரியஸ்ஸாக எழுதலாம் எனத் ...