கண்மணி அன்போடு....... பகுதி 2
சிவராத்திரிக்குப் பின் தியானத்தில் ஆழ்ந்ததால் எழுத இயலவில்லை. ஆனால், என் ஆன்மீக வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் நான் சின்ராசு பத்தி எழுதியதால் அரெஸ்ட் ஆயி ஜெயிலுக்குப் போயிட்டதா செய்தி ஊடகங்களில் வதந்தி பரப்பியிருந்தனர். இப்போது நக்கீரன் வலையொளியைப் பார்த்தால் சின்ராச அரெஸ்ட் பண்ணீருவாங்கன்னு சொல்றாங்க (எங்க நடக்கப் போகுது?). சரி விடுங்க, நாம யாரு வம்புக்கும் போறதில்ல....தும்புக்கும் போறதில்ல. கண்மணியைத் தொடருவோம் வாங்க. இதுக்கு நடுவால எப்படியெப்படியெல்லாம் அந்தக் காலத்துல லவ் லெட்டர் கொடுத்தாங்கன்னு வாசகர்கள்கிட்ட இருந்து பல லெட்டர்கள். சிலர் தங்களுக்கு வந்த உண்மையான லெட்டரையே அனுப்பியிருந்தாங்க. கொஞ்சம் செல்லரிச்சுப் போயி பழுப்பேறியிருந்த கடிதங்களையெல்லாம் படிச்சுப் பார்த்து அலசி ஆராயவும் நேரமாயிடுச்சு. ஆறாம் வகுப்பு படிக்குறப்ப தனக்கு வந்த அவசர அவசரமா தப்புத் தப்பா எழுதப்பட்ட சில லவ் லெட்டர்கள பகிர்ந்திருந்தாங்க ஒரு தோழி. அதெல்லாம் லவ் லெட்டர்ஸா இல்ல மிஸ்ஸிங் லெட்டர்ஸான்னு (missing letters இங்க்லீஷ்ல ஒரு exercise இருக்குமே..) தெரியல. அவ்ளோ ஸ்பெல்லிங் மிஸ்டேக். இத்தனைக்கும் தமிழ்லதான் எழுதியிருந்தது. அதுல ஒரு லெட்டர் ஒன் சைடு நோட்டுன்னு சொல்லுவோமே (அறிவியல் பாடத்துக்கு வாங்குவோம். ஒரு சைடு ரூல்டு; இன்னோரு சைடு அன்ரூல்டு) அதுல எழுதியிருந்தது. தான் ஒன் சைடா லவ் பண்றேன்னு எவ்வளவு சிம்பாலிக்கா எழுதியிருக்கார் அந்த லவ்வர் (கிளவர்) பாய். இப்ப அவர் கிழவர் பாயா இருக்கணும். இதை மேலும் உறுதிப்படுத்த மெட்ராஸ்ல தடயவியல் நிபுணரா இருக்குற ஒரு நண்பருக்கு அனுப்பியிருந்தேன். ரிசல்ட்டப் பார்த்ததும் இத எழுதுனது நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தின்னு எல்லாம் இப்ப ஒடுங்குன ஆளாத்தான் இருக்கும்னு அவங்களே மெரண்டு போயிட்டாங்களாம். இந்தியன் தாத்தா மாதிரி கையெழுத்து இருந்தப்பவே நானும் மைல்டா டவுட்டானேன். விஞ்ஞான வளர்ச்சியின் காரணமா அடுத்த ஒரு லெட்டர்....அதை லெட்டர்ன்னு சொல்லமுடியாது. ‘விக்ரம்’ (1986) கமல் படத்துடன் கூடிய ஒரு பொங்கல் வாழ்த்து அட்டை...அதுல ஒரு ஓரமா தன் காதலை வடிச்சிருந்தார் அந்தக் கலைஞர். என்னா ஐடியா...? பொங்கல் வாழ்த்துல எழுதினா சந்தேகம் வராதாம். அடுத்த கட்டமா, இன்லேண்ட் (இங்க்லேண்டுன்னு சொன்னாத்தான் எல்லோருக்கும் புரியும்) கவர்களில் இங்க் பேனாக்களில் கவிதைகளோடு எழுதப்பட்ட சில கடிதங்கள்... அந்தக் காலத்தில் டேட்டிங் கலாச்சாரம் எல்லாம் இல்லை. எல்லாமே லெட்டரில்தான். ஆனாலும் அவற்றைக் கார்பன் டேட்டிங் (carbon dating) செய்து பார்த்தபோது 1990-92 காலகட்டம் எனத் தெரிய வந்தது. பிறகு, லவ் லெட்டர் எழுதவே ரொமான்டிக்கான watermark background கொண்டிருந்த ப்ரத்யேக letter pad கடிதங்கள். அதில் கடைசியாக ஆண்கள் ரத்தத்திலும் பெண்கள் லிப்ஸ்டிக் முத்தத்திலும் கையொப்பமிட்டிருந்தார்கள். தாங்களே ஸ்கெட்ச், ஜிகினா, க்ளிட்டரிங் பேனா என்று அலங்காரம் செய்த லெட்டர் ஒன்று கண்ணைப் பறித்தது. அதில் கடைசியில் காதலனைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் காதலி அன்று விட்ட கண்ணீர்த்துளியும் இருந்தது. நான் கொஞ்சம் கண் கலங்கிவிட்டேன். பிறகு கண்ணில் விழுந்த அந்த ஜிகினாவை எடுத்ததும் கண் நார்மலானது. என்னதான் லேண்ட்லைன் ஃபோன், மொபைல் ஃபோன், ஈ-மெய்ல், வாட்ஸாப்ன்னு வந்தாலும் அந்தப் பழைய லெட்டர்களுக்கு ஒரு தனி மவுசுதான். உடனுக்குடன் ப்ளூ டிக் வருதான்னு பாக்குறதுல எங்க இருக்கு காதல்? ஒவ்வொரு லெட்டருக்கும் குறைஞ்சது நாலு நாள் காத்திருக்கணும். அந்தக் காதல் எல்லாம் எவரெஸ்ட் ஏறிப்போயாச்சு. போஸ்ட் ஆஃபீஸ் வாசல்லயே குடியிருந்து, போஸ்ட் மேனுக்கு தீபாவளிக் காசு குடுத்து காதல் கடிதங்களை வீட்டுக்கு வரும் முன்னர் நாமே நம் கைப்பட வாங்கிப் படிச்சு, ரசிச்சு, சிரிச்சு இல்ல அழுத சம்பவங்களை மறக்க முடியுமா? இல்ல அப்படிப்பட்ட கடிதங்களை வீட்டில் அட்டாரிகளிலும் பழைய ஃபோட்டோ ஆல்பங்களுக்குள்ளும் ஒளிச்சு வச்சு வீட்டில் யாரும் இல்லாதப்ப, பாடப்புத்தகத்துக்குள்ள வச்சு, படிச்சுப் படிச்சுப் பாத்தது நினைவை விட்டு நீங்குமா? என்ன ஒண்ணு பொங்கலுக்கு வெள்ளையடிக்கும்போதோ வீடு மாத்தும்போதோ கவனமா இருக்கணும். சிலது அப்படியே தொலஞ்சும் போயிருக்கும். தொலையுது உடுங்க.
கனத்த இதயங்களைக் கொஞ்சம் லேசாக்குவோம். லெட்டர் பத்திப் பேசினதும் நாம் பயன்படுத்தின வித விதமான பேனாக்களப் பத்தி எழுதலாம்னு தோணுச்சு. மூணாம் வகுப்பு வரை பென்சில்தான். நாலாம் வகுப்பில் குண்டான Camlin இங்க் பேனா. அதைத் தூக்கிட்டு வர்றதுகுள்ள போதும் போதும்னு ஆயிடும். நாம் எழுதிய லட்சணத்துக்கு இங்க் தீரவே தீராது. எல்லாருக்கும் கேம்லின் பேனா கிடைக்கல அன்னைக்கெல்லாம். சில லோக்கல் கம்பெனி பேனாக்களும் இருந்தன. கொஞ்சம் அடிக்கடி லீக்கடிக்கும். அப்பல்லாம் இங்க் கறை இல்லாத சட்டைகளே இருக்காது. மை கொட்டினால் அதனைத் தலையில் தடவியே அட்ஜஸ்ட் செய்த நாம்தான் இன்று நரையை ஏற்றுக்கொள்ள முடியாமல் அதே தலையில் டை என்னும் மையைத் தடவுகிறோம். மரை போன பேனாக்களையெல்லாம் சேகரித்து 50 பைசாவுக்கு மரைபோட்டுப் பணம் சம்பாதித்துக் கடைசியில் சஞ்சய்கா (ஞாபகம் வருதா? ஞாபகம் வருதா? ஞாபகம் வருதா?.....) என்னும் சிறு சேமிப்பில் சேமித்த ஒரு நண்பன் கூட இப்போது நினைவுக்கு வருகிறான். லெட் பேனாவில் எழுதுவது அன்புரஃபஷனாலகக் கருதப்பட்ட காலமும் உண்டு. ஆனாலும் அவை புழக்கத்துக்கு வந்தன.
Ballpoint பேனாவை வைத்து நாம செஞ்சது கொஞ்ச நஞ்சமில்ல. அதுல ஒரு ரூபாய்க்கு ஒல்லியா ஒரு பேனா கிடைக்கும். தண்டுப்பகுதியில் ஒரு கலர் ஸ்ட்ரைப் போட்டிருக்கும். அது இருந்தாலே கெத்துதான். மரக்கட்டைல ஒரு பேனா....அதுக்கு மூடி எல்லாம் இருக்காது. ரீபில் மாத்த முடியாது. கண்டக்டர் எல்லாம் காதுல சொருகி வச்சிருப்பாங்க. அந்தப் பேனாவ மோந்து பாத்தா உக்கடத்தனமான (கோவைக்காரங்களுக்குப் புரியும்) ஒரு நாத்தம் நாறும். இதனைச் சமன் செய்யும் விதமா எழுதினா மணக்கும் லெட் பேனாக்களும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனாலும் ரெனால்ட்ஸ் கோலோச்சியது. இன்னைக்கும் இருக்கு. அப்ப விலை மூணு ரூபா இருக்கும். சச்சின் விளம்பரத்துல வருவான். Reynolds..The pen the world prefers ன்னு அவனோட மெல்லிய குரல்ல சொல்வான். நல்லா எழுதும். அதையே நம்ம குறும்புக்காரப் பசங்க உடைச்சு உள்ள இருக்கற ரீஃபில்லையும் கட் பண்ணி அதோட மினியேச்சர் வெர்ஷன் மாதிரி ஒண்ண ரெடி பண்ணுவானுக பாருங்க. அதுக்கெல்லாம் நாம பேட்டன்ட் வாங்கியிருந்தா அப்பவே இந்தியா வல்லரசாயிருக்கும். அதுக்குப் பின்னாடி ஹீரோ பேனா (Made in China ன்னு போட்டிருந்தாத்தான் அது ஒரிஜினலாம். நல்லா உழைக்குமாம். இப்ப சிரிப்பா வருதுல்ல). அதுல இங்க் ஊத்தத் தெரியாம நாம பட்ட பாடு இருக்கே...ஐயோ...ஐயோ...என்னதான் அது Hero பேனாவா இருந்தாலும் நம்பி பரிச்சைக்கு எடுத்துட்டுப் போனா அது வில்லனா மாறி நம்மளக் கால வாரிவிட்ரும். அதுக்குப் பின்னாடி ஜெல் பேனா...அது ஒரு ஜில் பேனா என்றால் மிகையல்ல. நோ லீக். நோ ஃபில்லிங். அதுலயும் கறுப்பு இங்க் ஜெல்ன்னா எனக்குப் பிடிக்கும். பிறகு பெருசானதும் Parker பேனாகூட வாங்கியிருப்போம். ஆனா எழுதுறதுதான் கம்மி ஆயிடுச்சு (இதப் பத்தி நான் ஆங்கிலத்துல ஒரு ஆர்ட்டிக்கிள் எழுதியிருக்கேன். அதைப் படிக்க இங்கே செல்லலாம்: https://www.linkedin.com/pulse/refiuelling-fountain-dr-viswanathan-mahalingam/?trackingId=iRoR56MT1v%2FRLDo1xRvZUw%3D%3D).
லெட் பேனாவுலயே ரொம்ப ஃபேன்ஸியானது அஞ்சு மல்டி கலர் பேனா. அதுல ப்ளூ நல்லா எழுதும். கறுப்பு சுமார். சிவப்பு அல்லது ரோஸ் இன்னும் சுமார். இன்னும் ரெண்டு கலர் எதுக்கு இருக்குன்னே புரியாது. எழுதுனாலும் எடுப்பாத் தெரியாது. அந்த எல்லாக் கலரையும் ஒண்ணா அமுத்தி வெளிய வர வைக்கறது ஒரு விளையாட்டு. சீக்கிரம் உடைஞ்சிடும் இது. இங்க் பேனா சரியா எழுதலன்னா...கிடைத்தால் ப்ளேடாலோ இல்லாட்டி காம்பஸாலோ கீறிய அனுபவம் இருப்பவர்கள் கமென்ட்டவும். இங்க் கடன் வாங்குறது....டெஸ்க்கில் ஓரிரு சொட்டு விட்டு நிப்பால் உறிஞ்சுவது...இங்க் பழம்ன்னு ஒரு செடி இருக்கும். அதன் பழத்தை எடுத்து நாமே இங்க் தயார் செய்து பேனாவில் ஊற்றி....என்னா ஆனந்தம் அதெல்லாம். முழு ஆண்டுத் தேர்வு முடிஞ்சு அடுத்த க்ளாஸ்க்கு போகும் முன்னாடி இங்க் பேனாக்களக் கழுவுவோம். அது காயறதுக்குள்ள இங்க் ஊத்தி எழுதுனா டைல்யூட்டா எழுதும். எரிச்சலா வரும். அப்றம் வேணும்ன்னே ரெட் இங்க் பேனால ப்ளூ இங்க் கலந்து ஊத்தி எழுதுறது...அது இதுன்னு எதத்தான் சொல்றது? எத விட்றது?
‘கண்மனி அன்போடு’ன்னு பேனால எழுதுன லெட்டர் முன்னாடி தங்லீஷில் தப்பும் தவறுமாக டைப்பி அனுப்பப்படும் வாட்ஸாப் குறுஞ்செய்திகள் நிக்குமா?
- வி. மஹாலிங்கம்
வடவள்ளி, கோவை.
பேனாக்களைப் பற்றி நீங்க சொல்லும்போது தான் மற்றொரு நினைவு நியாபகம் வருகிறது சார்...இங்க் பேனாக்கள் வாங்கினாலே நாம் அதன் நிப்பை நடுவில் கீறி விடுவது வாடிக்கையாய் இருந்தது. அப்படி செய்தோம் னா எழுத்துக்கள் மாவு போல் குண்டுகுண்டாக அழகாக விழும் 😃
ReplyDeleteஉண்மைங்க
Deleteபேனாக்களின் வரலாறு...அடுத்த தலைமுறைகள் இக்கட்டுரையை வாசிக்கும்போது ஆச்சரியமாக இருக்கும். தலைப்பு என்னவோ கண்மணி அன்போடுவாக இருந்தாலும் பேனாக்களின் இராஜ்ஜியம்தான் எனக்கு நெருக்கம். ஒரு வார கால காத்திருப்பிற்க்கு நல்ல தீனி. நாம் அடிக்கடி பேசிய பேசுகின்ற விஷயங்கள்தான் என்றாலும் உன் எழுத்துக்களில் வாசிப்பது சுகமே. பாடவாரியாக எழுதி சுருட்டி பேனாக்களில் பக்குவமாக வைத்து தேர்வுகளுக்கு எடுத்துச்செல்லும் நம் நண்பர்களும்.. அடிஸ்கேல் எனப்படும் அளக்கவும் அடிக்கவும் பயன்படும் மர ஸ்கேலில் பேனாக்களின் மூலம் பல குறியீடுகளை பொறித்திருக்கும் நம் சமகால நண்பர்களும் கண்முன் வந்து போயினர் மஹா.
ReplyDeleteஆமாம் ஆமாம் சரவணா.
Deleteகண்மணி அன்போடு என்று தலைப்பு வைத்து விட்டு பேனாக்களின் வரலாறாக மாற்றி விட்டாயே தோழா. இருந்தாலும் படிக்க படிக்க இளமைக் கால நினைவுகள் நீங்கா இடம் பெற்றுவிட்டது மனதில். எந்த கூகுள் வந்தாலும் நம் மனதின் ஞாபக சக்திக்கு ஈடாகுமா. அதற்குள்ளாக கட்டுரை முடிந்து விட்டதே என்று என் மனம் ஏக்கத்திற்கு சென்று விட்டது. அடுத்த கட்டுரை விரைவாக எதிர்நோக்கும் உன் தோழி.
ReplyDeleteஆதரவுக்கு நன்றி தோழி
Delete