சின்ராசு (நாட்டாமையுடன் ஒரு நள்ளிரவு)
சிவராத்திரி சிறப்புக் கட்டுரை
வாசக வாசகியர் தங்கள் லவ் லெட்டர் அனுபவங்களைப் பகிர்ந்த வண்ணம் (என்ன கலரா? உஷ்...! உஷ்...!) இருப்பதால் கண்மணி அன்போடு....பாகம் இரண்டு இக்கட்டுரைக்குப்பிறகு வெளியாகும். மேலும் இன்றைய கட்டுரை நிகழ்வு சார்ந்தது என்பதாலும் ’மனம் போன போக்கில்’ பக்கத்தின் லட்சோப லட்சப் பின்தொடர்வோர் கேட்டுக்கொண்டதற்கிணங்கவும் இக்கட்டுரை தற்போது வரையப்பட்டுக்கொண்டிருக்கப்படுகிறது.
நம்ம சின்ராசு பத்தி உங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்ல. ஐம்பதுகளின் மத்தியில் டெல்லியில் பிறந்து பின்னர் எண்பதுகளில் தமிழ் மண்ணுக்கு வந்து தனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்து, தனது பேச்சுத் திறமையால் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருப்பவர். இவருக்குத் திருமண வாழ்க்கை அவ்வளவாக இனிக்கவில்லை என்பதும் சின்ராசுவின் மகள் ஒரு பெரிய பேசுபொருளாக இருப்பதும் நாம் அறிந்ததே. பாடி என்றால் (உடம்புங்க) இவருக்கு மிகவும் பிடிக்கும். அந்த பாடியை எப்படி மெய்ன்டெய்ன் பண்ணவேண்டும் என்பது குறித்த இவரது வீடியோக்கள் எப்போது தேடினாலும் யூட்யூபில் சிக்கும். இவரை நாம் செல்லமாக நாட்டாமை என்றும் அழைப்பது அவருக்குத் தெரியுமா என்று தெரியாது. அரசியலிலும் இவர் ஈடுபட்டுள்ளார் என்பது வெட்ட வெளிச்சம். தற்போது சுமார் 65 வயதுக்கு மேல் ஆகியிருந்தாலும் சும்மா கும்முன்னு காட்சியளிப்பார். இவர் ஆட ஆரம்பித்தால் இன்னைக்கெல்லாம் பாத்துட்டே இருக்கலாம். தனியாக ஆடி நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நடிகைகள் உடன் இருந்தால் இவரைக் கையில் பிடிக்கவே முடியாது. என்னமா உடம்பைக் குலுக்கி, துள்ளி, குதித்து ஆடுவார் தெரியுமா? தியானமும் நடனமும் இவரது இரு கண்கள். அதிலும் இந்தப் பாட்டு இருக்கே இதுல இரண்டும் செய்திருப்பார்...”அர்ஜுனா அர்ஜுனா அம்பு விடும் அர்ஜுனா..” சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் பத்தி இப்படி நாம பேசீட்டே போலாம். சிவராத்திரி இனிமையாப் போகும்.
ஒருநிமிஷம் நீங்களும் அப்படி நினச்சீங்க இல்லையா? (வி.ஐ.பி. விவேக் வாய்ஸ்). ஹஹ்ஹா....எப்படிப் பொருந்துது பாருங்க...சரத்குமார்-சத்குரு என்ன ஒரு பொருத்தமா இருக்கு..இவரும் கூட்டம் சேத்துவாரு அவரும் கூட்டம் சேத்துவாரு. சரத்குமார் ஒரு ராத்திரியில........கட்சியக் கலச்சவரு. சத்குரு ஒவ்வொரு சிவராத்திரியிலயும் இளம் பக்தர்களின்.....மனசக் கலைக்குறவரு. கலைச்சு சரியா இன்னர் என்ஜினியரிங் பண்ணி அனுப்பிருவாரு.
சத்குரு அவர்களின் ஆசியோடு இப்ப இக்கட்டுரை இனிதே துவங்குது. இன்னைக்கும் டைம் மெஷினுக்கு வேலை இருக்கு சரவணன் சார். 1999 ஆம் வருசம். கோய்ம்த்தூர் சும்மா எப்புடி இருன்ச்சு தெரீமா? திருச்சி ரோட்ல சுங்கத்துக்கும் மேக்கதா டிவைடரு. அதுக்குங் கெளக்க எல்லா ஒத்த ரோடுதே. காந்தீபுரத்துல கரூர் வண்டி ஏறுனா 40 நிமிசந்தே பொங்லூரு (நான் அங்கதா பொறந்து வளந்து, பள்ளிக்கோடம் படிச்சு, காலேசு முடிச்சு..அட அவ்வளவு ஏ..கருமம் கலியாணம் வரைக்கு அங்கதான நம்ம பொளப்புத்தனம். 2009 வரீலும் அது கோய்ம்த்தூர் மாவட்டந்தானொ). என்னொ ஒண்டிப்புதூர்ல ரெயில்வே கேட்டு போட்டாப் போச்சு. அதே மாதர இந்தல்ல பொள்ளாச்சி ரோட்ல போனா ஒரே மரமா இருக்கு ரெண்டு அல்லைலயும். வளிபூரா தோட்டங்காடு, தோப்புன்னு அவ்ளோ நிதுவா இருக்கு. அதுல அப்ப முள்ளுப்பாடி கேட்டு வளியா ரயில் போகு. மேட்டுப்பாளைய ரோட்ல மட்டும் என்ன மரத்துக்குப் பஞ்சமா? ஆயரத்துக்கும் மேல புளியமரமா இருக்கு காரமட போக வரீலும். சத்தி ரோடும் அப்புடித்தே. அவுனாசி ரோடெல்லாம் இப்புடி மாறும்ன்னு எவங்கண்டா? டவுனுக்குள்ள பஸ்ஸுல சுத்துனா அவ்ளோ நல்லா இருக்கு. உப்ப நானிருக்குற வடவள்ளியெல்லாம் அப்ப ஒரே காடு. புதூரத் தாண்டுனா ஊடுகளே இருக்காது. பஸ்ஸுல ஆளுகளும் இருக்காது. மருதமல போனம்னா காத்து சும்மா சிலிசிலுன்னு அடிக்கு...பாம்பாட்டி சித்தர் கோயலுக்கு மேல அருவில தண்ணி வரும். நானே குளிச்சுக்கறே. அந்தக் காலம் வரவா போகுது உனி. சேரி டைம் வண்டிய அவடத்தாலைக்கே பார்க் பண்ணிரலாம்.
இப்படி ஒரு நாள் அந்தக் காலத்துல நான் கோயமுத்தூர்ல ஒரு போஸ்டர் பார்த்தேன். ’தியானலிங்கம் உலகிற்கு அர்ப்பணிப்பு’ன்னு போட்டிருந்தது. நான் பார்த்த இடம் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு எதுத்தாப்புல ஜெயில் கிரவுண்டு காம்பவுண்டு சுவத்துல. ஆன்மிக ஒளியைப் பப்பரப்பேன்னு பரப்ப யோகாசனம் (யோகா + சனம் = விஜயகாந்த் விளக்கம். அன்றே கணித்தார் கேப்டன். சனம் இவர் பின்னாடி இருக்கும்ன்னு) என்னும் டார்ச்சோடு வந்து இன்னைக்கு வரைக்கும் டார்ச்சர் பண்ணுகிறார் மனுஷன் (சாரி...தெய்வம்). ஒரு மனுசனப் பத்தி சும்மா வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசக்கூடாது. அவர் கஞ்சா வித்தாரா, போலீஸ் ஸ்டேஷன்ல கேஸ் இருக்கா, வசிய மருந்து (அப்படியெல்லாம் ஒண்ணு இருக்கா என்ன? இருந்தா சொல்லுங்க எல்லாத்தையும் வசியம் பண்ணி நம்ம பக்கத்த ஃபாலோ பண்ண வைக்கணும்) வச்சு வெளிநாட்டு, உள்நாட்டுப் பணக்காரங்கள/பெண்களை வசியம் பண்ணினாரா, தன் பொண்டாட்டிய தானே கொண்ணுட்டு சமாதி கட்டினாரா, அதுக்கு அவங்க மாமனார் கேஸ் குடுத்தாரா, யானைப் பாதையைக் கபளீகரம் செஞ்சாரா, காட்டை ஆக்ரமிச்சாரா, ஏழை/மலைவாழ் மக்கள் நிலத்தப் புடுங்குனாரா, பாதரச லிங்கக் குளத்தில் குளிக்க வந்த பெண்கள ஏதும் பண்ணினாரா, பள்ளிக்கூடங்குற பேர்ல பாலியல் குற்றங்கள் நடக்கக் காரணமா இருந்தாரா, பல தற்கொலை/கொலைகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கா, இமயமலைக்குக் கூட்டிட்டுப் போயி பொம்பளைகளுக்கு இம்ச குடுத்தாரா, மரத்த வெட்டினாரா, சத்தியமங்கலம் போற வழியில காரை வேகமா ஓட்டி ஒரு பையன் மேல இடிச்சி அவனுக்கு மோட்சம் வாங்கிக் குடுத்தாரா, நாலஞ்சு வருசத்துக்கு முன்னாடி சிவராத்திரி அன்னைக்கு நைட்டு ஆடும்போது சமந்தா இடுப்பக் கிள்ளுனாரா, இதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க...(சொல்லல...சொல்லல்லுன்னு சொல்லி...நோ...நோ...) வேணும்ன்னா பியூஷ் மானுஷ், நக்கீரன் கோபால், உள்ளூர் வனச்சரக அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள், ஹிந்து மதத்தை அழிக்க வந்த தி.க/தி,மு,க ஜால்ரா ஊடகங்கள்/அவர்களால் ஸ்பான்சர் செய்யப்படும் யூட்யூப் சேனல்கள்ன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கங்க. இதப் பேசும்போது காருண்யா யுனிவர்சிடி செஞ்ச ஆக்ரமிப்பையும் பத்திப் பேசுங்கன்னு தேச பக்தர்களும் சனாதனிகளும் பேசுறதும் நியாயந்தான். அவர்கள் அடிக்கும் கொள்ளை, அங்கே நடக்கும் சட்டவிரோத செயல்கள் எல்லாத்தையும் தோல் உறிக்கணும். மதத்தின்/கடவுளின் பெயரால் யார் தப்பு செஞ்சாலும் தப்புதான். இப்ப...இன்னைக்கு....சத்குரு. எல்லோரையும் சமமாகப் பார்க்கும் நம்மவா என்ன சொல்ல வர்றா? நம்ம ஆள் செஞ்சது தப்புதான். ஆனா மாற்று மதத்தவா பண்ற தப்பையும் கேளுங்கோன்னுதான சொல்றா? சமமாத்தான பாக்குறா. சீமான் அத்திம்பேர் எங்கயோ போயிட்டர்.
சத்குரு அவர்கள் பேசினத வச்சு, நான் செய்தி/ஊடகத்துல பாத்தத வச்சுத்தான் நான் பேசுறேன். மொதல்ல நம்ம சத்குரு என்ன படிச்சிருக்காருன்னு தெரியல (அவரே சொல்லியிருக்காரு...நா ஒன்ணும் படிக்கல...ஸ்கூலுக்கும் போகல...ஒரு கிரந்தமும் படிக்கல...வேதமும் படிக்கல...). ஆனா மனுஷன் (சாரி தெய்வம்) என்னமா இங்க்லீஷ் பேசுறாரு. லா காலேஜ் பசங்க கேட்ட கேள்விக்கெல்லாம் சும்மா பிச்சு ஒதருவாரு...ஐ ஹேவ் ஃபாலோவ்ட் எவ்ரி லா இன் திஸ் கண்ட்ரின்னு அடிச்சு உடுவாரு சராமாரியா...இப்படித்தான் ஒரு ப்ரபல (மறந்து போச்சுன்னா இப்படி சமாளிச்சுக்கலாம்) ஊடகத்துல ஒரு இளம் செய்தியாளர் ஆக்கிரமிப்பு பத்திக் கேள்வி கேக்க....அப்ப நான் லைவா பாத்துட்டிருந்தேன். எங்க வீட்ல சமையல் நடந்துட்டிருந்தது. திடீர்ன்னு குக்கர் விசில் வரவும் நான் கேஸ் ஸ்டவ்வை அணைக்க உள்ளே ஓடினேன்...குக்கர் அமைதியாத்தான் இருந்துச்சு. டக்குன்னு டி.வி இருக்குற ரூமுக்கு வந்தா நம்ம சத்குரு தஸ்...புஸ்...உஷ்...உஷ்...ன்னுட்டிருந்தாரு. நானும் மனுஷன் (தெய்வம்) மூச்சுப் பயிற்சிதான் சொல்லித்தர்றாராக்கும்ன்னு நினச்சேன். அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியல. கேமரா மொதக்கொண்டு தூக்கிட்டு போச்சொல்லீட்டாரு. ஒரு ஞானிக்கே கோவம் வரவச்சுட்டாரு அந்தத் தம்பி. திருட்டு தி.மு,க பாசறைல வளர்ந்தவரா இருக்குமோ?
வடவள்ளியிலிருந்தே பல பேரு அங்க வாலண்டியரா (???) இருக்காங்க. எனக்கு அவங்களையே பெர்சனலாத் தெரியும். ப்ரைவஸி கருதி விவரங்கள் தரல. சிலர் ஈஷா கார்ப்பொரேஷன்ல வேலை செய்றாங்க. ஐ.டி வேலைய விட வேலை வாங்குவாங்களாம். சத்குரு நடத்தும் இந்த ஆன்மீக நிறுவனத்தின் மார்க்கெட்டிங் உத்தி எனக்கே (அங்க போன பெரும்பாலானோருக்கு) தெரியும். நான் ஏன் எப்பப் போனேன்னு கேக்குறீங்க? என்ன பண்றது? யாராச்சும் கெஸ்ட் கோவைக்கு வந்தா என்னமோ பெரிய புனிதத் தலம் மாதிரியும் புராதன ஆலயம் மாதிரியும் இங்கதான் அழச்சுட்டுப் போகச்சொல்றாங்க. அதுல ஒரு கொடும! ஏர்போர்ட்ல கோவையின் அடையாளமா சத்குரு சிலை (சிவன்னும் சில பேர் சொல்றாங்க) வச்சிருக்காங்க. பேரூர் எல்லாம் ஒரு அடையாளமா? இல்ல ஈஷா பக்கத்துல இருக்குற வெள்ளியங்கிரி மலையெல்லாம் முக்கியமா? அந்த மலைக்குப் போகவும் சத்குரு அவர்கள் ஷார்ட்கட் வைத்திருக்கிறார். மாதாமாதம் ஒரு முறை அல்லது இருமுறை அவரது சீடர்கள் பக்தகோடிகளை அழைத்துச் செல்வார்கள். ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
சரி பாய்ண்ட்டுக்கு வருவோம். ஈஷாவின் கோவில் (?) உள்ள பகுதிக்குச் சென்றவர்களுக்குத் தெரியும். நாம் அங்கு எள்ளுரண்டை வாங்கித் தின்று ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கும்போது சாதுவான குரலோடு இரண்டு பேர் வந்து ஐயா/அம்மா 15 நிமிஷமோ/30 நிமிஷமோ யோகா கத்துத்தர்றோம் பக்கத்து ஹால்ல...ம்ம்ம்ம் காசெல்லாம் ஒண்ணும் வேண்டாம்...சும்மாத்தான் (ஏதாச்சும் சினிமா டயலாக்கா இது?) என்பார்கள். இதுதான் முதல் ஃபிஷ்ஷிங் நெட்.
ஹானெஸ்ட்டா சொல்றேன்...அடுத்த பத்தி மட்டும் எனது கற்பனைக்கு எட்டிய அதிக நிகழ்தகவுள்ள ஒரு வழிமுறை.
உள்ளே சென்று திரும்பும்போது நீங்கள் புல்லரித்துப் புளகாங்கிதம் அடைந்துவிட்டால் அடுத்த கட்டம். பிறகு அடிக்கடி வகுப்புக்கு வரச்சொல்வார்கள். அங்கு உங்கள் பின்புலம் விசாரிக்கப்பட்டு, தரம் பிரிக்கப்படுவீர்கள். டோனாரா, வாலெண்டியரா, சீடரா இப்படி...
இந்தப் பத்தி..எனக்குத் தெரிந்தவர்கள் பற்றி. ஒரு கோடீஸ்வரி அம்மையார் எனக்குப் பழக்கமானவர். இவர்புகழேதான் பாடிக்கொண்டிருப்பார். அவர் வாழ்வில் அடைந்த முன்னேற்றத்துக்கு சத்குருவும் அவரது தியான முறைகளுமே காரணம் என்று என்னிடமே சொல்லியிருக்கிறார். அவரது புத்தகம் ஒன்றைப் பதிப்பிக்க நான் உதவியபோது (நெஜமாங்க) நான் இதனை அறிந்தேன். இது ஒரு வகை. இன்னொரு வகை கணவனால் பாதிக்கப்பட்ட/ திருமணம் ஆகாத/ விவாகரத்து ஆன/ திருமண வாழ்வில் வலிகளைச் சந்திக்கும் பெண்களை டார்கெட் செய்வது...இதற்கு பலியானது எனக்குத் தெரிந்த ஒரு பெண். அவங்க இன்னைக்கு ஈஷா சார்பா கும்பமேளாவுக்கெல்லாம் போயிருக்காங்க.
மேற்கொண்டு என்ன நடக்கும்ன்னு அடுத்து ஒரு இன்வெஸ்டிகேஷன் ஜேர்னல் ஸ்டார்ட் பண்ணி, துப்பறிஞ்சு சொல்றேன்.
நான் இங்கு மாங்கு மாங்குன்னு எழுதிக்கொண்டிருக்கும் நேரம் சத்குரு சும்மா பட்டையக் கிளப்பிட்டிருப்பாப்ல. எல்லா சேனலும் இதைத்தான் ஒளிபரப்புறாங்க. டி.வி டேன்ஸ் ஷோக்களுக்கு ஐயாவை ஏன் ஜட்ஜா கூப்டக்கூடாது? இந்த வருஷம் கரகாட்டக்காரன் படத்துல கனகாவக் கெடுக்கப் பாப்பாரே...அந்த வில்லன்...ம்ம்ம்...நடிகர் சந்தான பாரதி அவர் ச்சீஃப் கெஸ்டா வந்துருக்காரு போல. வீட்டுப் பக்கத்துல போஸ்டர்ல பார்த்தேன்.
நம்ம சத்குருவுக்கு ஒரு சமயம் மூளைல எதோ பிரச்சனை ஆயிடுச்சு...அப்பத்தான் தெரிஞ்சது......(நீங்க ஃபில் பண்ணினது சரிதான்). இவுரு வெவசாயம் பத்தி, மன்னு பத்தி, பேசுனது கேட்டா யாரே ஆனாலு கோப வரு. ஏன்னா அதெல்லா ஒரு தன்மெ. ஒரு விக்னானொ. நாம வாளிட்டிருக்கற வாள்க்கெ பத்தி, இன்னும் புதிய கல்வி கொள்கெ பத்தி தமிலு, கன்னடான்னு பல மொளிகள் தெரிஞ்ச நம்ம ஐயாவ யாராச்சும் கேள்வி கேட்டாங்கன்னா போதும் நா என் வேல பாக்குற...என்னோடா செய்லுல தப்பிருந்தா அர்சாங்கொ பாத்துக்வாங்க நீங்க உட்ங்கொ ன்னு தப்பிக்காம பதில் சொல்லுவார்.
அதெல்லாம் உட்டர்லாங்க. காவேரி காலிங்னு சொல்லி ஊர ஏமாத்துன இந்தப் பிக்காலிப் பயல தாடியப் புடிச்சு நாம கேள்வி கேட்க முடியுங்களா? அவரு சத்குருவாச்சே. நீதிமன்றங்களே இவர் வழக்குகளைத் தள்ளுபடி செஞ்சாலும் ஒரு காலம் வரும்....அப்ப இந்த மனுஷன் (தெய்வம்) செத்துப் போயிருப்பாரு. அப்புறம் வயசுக்கு.....(சேம் டயலாக்).
உள்ளம் கொதிக்குதுங்க...இருங்க தியானம் பண்ணிட்டு வர்றேன்.
இப்ப நான் டைப் பண்ற அந்த கீ ஸ்ட்ரோக் சத்தம் உங்க காதுக்குக் கேட்கணும்.
ம த த் தி ன் பெ ய ரா ல் ம க் க ளை ஏ மா ற் று ம் எ வ னை யு ம் நா ம்
த ப் பி க் க வி ட க் கூ டா து.
கடவுள் நம்பிக்கை அவரவர் உரிமை. ஆனால் பிறப்பின் அடிப்படையில் மனிதருள் ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் எம்மதத்தையும்/கொள்கையையும் நாம் ஏற்க முடியுமா?
இப்படி நாம் சிந்திக்கத் தொடங்கும் இரவுகளில்தான் போலிச்சாமியார்களுக்கும் கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கும் சவக்குழி தோண்டப்படுகிறது, ஹேப்பி
சவசிவராத்திரி.
- வி. மஹாலிங்கம்
வடவள்ளி, கோவை.