Tuesday, 18 February 2025

சொல்வனம்

மனம் போன போக்கில்...

எதாவது ஒண்ணு படிக்கணும்ன்னு இங்க வந்தவங்களுக்கு நான் எதாவது ஒண்ணு எழுதிக்கிட்டு இருக்கேன். தூய தமிழ் ஆர்வலர்கள், படைப்பாளிகள், இலக்கியவாதிகள், மருத்துவக் குறிப்பாளிகள், வேணும்ன்னே கெட்ட வார்த்தை எல்லாம்  போட்டு யாரையாச்சும் வசைபாடிட்டோ இல்ல அலங்கார வார்த்தைகள்/பஞ்ச் டயலாக் போட்டு யாரோ ஒருத்தரத் துதி பாடிட்டோ இருக்கவும் எவ்வளவோ பக்கங்கள் இருக்கு. நான் இங்க மனம் போன போக்குல எழுதப்போறேன்.  நான் எழுதறதப் படிச்சா அறிவு வளருமான்னு தெரியாது. ஜாலியா இருக்குமான்னும் தெரியாது. எனக்குப் பொழுது போகுது. இன்னோன்னு நான் எழுதறத அவ்வளவு சீக்கிரம் யாரும் வெளியிட மாட்டாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. போதாததுக்கு வயசும் ஆகுது. நான் எழுதறதைப் படிச்சுட்டு அறிவார்ந்த விவாதத்துக்கெல்லாம் வந்துறாதீங்க. நான் அந்த அளவுக்கு வொர்த் இல்ல.

சொல்வனம்

மொத நாளே நெகட்டிவ்வா ஆரம்பிப்போம். சொல்வனம் சொல்வனம் ன்னு ஆனந்த விகடன்ல கவிதை போடுவாங்க. இருங்க கொஞ்சம் லீட் கொடுக்கறேன். சின்ன வயசலர்ந்து வாராவாரம் ஆனந்த விகடன் வாங்கிப்படிச்சிட்டுருந்தவந்தான் நானு. வெல ஏற ஏற வாங்குறத விட்டுட்டேன். முந்தாநேத்து 40 ரூபா கொடுத்து வாங்குனேன். சில்ற இல்லாம (பாக்கட்ல காசே இல்ல...ச்சீ பொய் சொன்னேன். பாக்கட்டே இல்லை...டீ ஷர்ட் போட்டுட்டுப் போயிட்டேன். ஹி..ஹி.. இப்ப ப்ராக்கட்டுக்குள் ப்ராக்கட் (ஆனந்த விகடன்னு சொன்னாலே ஹி..ஹி..ன்னு ஆட்டோமேட்டிக்கா வந்துடுது)) பே.டி.எம் பண்ணலாம்ன்னு ட்ரை பண்ணி ஃபெய்லியர் ஆயிருச்சு. அப்புறம் என் நண்பன்கிட்ட இருந்து 50 ரூபா வாங்கி கடைக்காரருக்குக் கொடுத்தேன். இந்தச் சம்பவம் உண்மை மாதிரியே தெரியணும்ன்னா சில விஷயங்கள சேக்கணும். இப்ப மறுபடியும் மொதல்லருந்து. அன்னைக்கு சாயங்காலம் 5 மணி இருக்கும். என்னவோ இப்பல்லாம் மத்யான சோத்துக்கப்புறம் சீக்கிரமே மறுபடியும் பசிக்குது. சரி ஈவனிங் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்ன்னு முருகேசுக்கு ஃபோன் போட்டேன். இல்ல..இல்ல...அவனேதான் ஃபோன் பண்ணினான். என்னப் பாக்க வர்றேன்னு சொன்னான். நானும் நைஸா ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போயிடலாம்னு ஐடியா பண்ணினேன். நான் மனசுல நினச்சது வடவள்ளி ஆனந்தாஸ் ஹோட்டல்ல ஒரு காபியும் வடையும். பாவம் அவன் என்ன ஸ்ட்ரெஸ்ல இருந்தானோ.. தலைவரே ஆர்.எஸ். புரம் அன்னபூர்ணா போலாங்களான்னு தாராள மனசக் காட்ட, ரெண்டு பேரும் ஹோண்டா சிட்டி கார்ல (வெள்ளக்கலர், நம்பர் வேண்டாம் உடுங்க) போனோம். கார் அவனதுதான் என்பதை நான் சொல்ல வேண்டியதில்ல. அன்னபூர்ணால மல்டிலெவல் பார்க்கிங் வந்துருச்சு. மொதல்லயெல்லாம் 10 வண்டிகூட நிறுத்த முடியாது. காரைப் பார்க்கிட்டு ஹோட்டலுக்குள்ள போனோம். க்ரீம் பன் கிடைக்கும்ங்குற போர்டு வரவேத்துது. மனசுக்குள்ள கடை ஓனர் ஜி.எஸ்.டி பத்திப் பேசுனது, அது இதுன்னு நியாபகம் வந்துச்சு. நானும் ஒரு க்ரீம் பன்னத்தான் வாங்கித்திங்கலாமான்னு நினச்சேன் (என் வாழ்க்கைல நான் சாப்டதே இல்ல). ஆனா முருகேசு வாங்கித்தரப்போற டிஃபன சாப்டமுடியாதுன்னு கம்முனு இருந்துட்டேன். ஏ.சி. ஹால்ல போயி பந்தாவா உக்கரலாம்ன்னு பார்த்தா... அது குளோஸ்டு. சரின்னு சாதாரண ஹால்லயே சாப்ட்டோம். ஐயய்யோ லீட் குடுக்கறேன்னு பூராக் கதையும் சொல்லிட்டேன். ஆனா நம்புற மாதிரி இருக்குல்ல? (படிமம்- ஆங்கிலத்துல imagery ன்னு சொல்வாங்க...அந்தக் காட்சிகள் உங்களுக்குக் கற்பனைல வந்துச்சா?). தோ வந்துட்டேன் பாருங்க.  முருகேசு பார்க்கிங்க்லர்ந்து வண்டி எடுத்துட்டு வர்றதுக்குள்ள எதாச்சும் புக் வாங்கலாம்னு 19.02.25 தேதி போட்ட ஆனந்த விகடன் புக்க வாங்குனேன். அப்புறம் அதுக்கும் அவனையே பணம் கொடுக்க வச்சது காலம். இன்னும் என் மனசக் கிடந்து பிராண்டுறது என்னன்னா பிரண்டுகிட்ட 50 ரூபா வாங்கி, 40 ரூபா புக்குக்குக் குடுத்துட்டு, மீதி 10 ரூபயக் கூட அவனுக்குக் கொடுக்காம பாக்கட்ல போட்டுக்கிட்டதுதான் (இருங்க பாக்கட் இல்லன்னு முன்னாடி சொன்னேன்ல. இது பேண்ட் பாக்கட்). காருக்குள்ள புக் படிக்க முடியல. சோறு வாங்கித்தந்த முருகேசு பேசுறதுக்கு உம் கொட்டி ஓசி டிஃபனுக்கு ப்ராயச்சித்தம் தேடிக்கிட்டேன். இருங்க அடுத்த பேராகிராஃப் பிரிச்சு உட்டர்றேன்.

வீட்டுக்குப் போனதும் படிக்கறக்கு புக்க எடுத்தேன். இந்த இதழ் காதலர் தின சிறப்பிதழாம். சரி அது நமக்குத் தேவையில்லத டாப்பிக். அட்டைப் படத்தில் திரிஷா ஒரு தினுசா சிரிக்குது. திரிஷாவின் வயசு....என் வயசு... இதெல்லாம் மனசுக்குள் வந்துபோச்சு. ஆமா அதுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா? கல்யாணம்...கல்யாணம். இனி புக்குக்குள்ள. நேக்கு சினிமா பெருசாப் பிடிக்காதுண்ட்றதால இவுக திருத்தி மார்க் போடுவாகளே அதையெல்லாம் நான் படிக்க மாட்டேன். 1995 ல குருதிப்புனல் படத்துக்கு 'இது KURUDHIPPUNAL' ன்னு விமர்சனம் பண்ணி ஹாலிவுட் படம் மாதிரி இருக்குன்னு சிம்பாலிக்கா சொன்னாங்களாம். கமலுக்கே ட்ஃப் குடுக்குறாங்க. இந்த இதழ்ல விடாமுயற்சி. அந்தப் பக்கத்தப் படிக்க எந்த முயற்சியும் எடுக்காம உள்ளே போனேன். ஓஷோ கணக்கா ஒருத்தரு ஃபோட்டோ போட்டு எதோ அல்கெமின்னு போட்டிருந்துது. ஆனந்த விகடன் புரோமோட் செய்த நித்தி, ஜக்கி வரிசையில் இதுவும் ஒண்ணோன்னு கடந்து போகாம, படிச்சேன் கருமத்த. என்னப்பா சொல்ல வர்றாரு அவரு. திரும்பத் திரும்ப ஒரே விஷயந்தான். சேட் ஜி.பி.டி கூட கொஞ்சம் தமிழ் நல்லா எழுதும் போல இருக்குது. இந்தாளு காசு வாங்கிட்டு வகுப்பு வேற நடத்துறாராம். கோயமுத்தூர் இப்ப ரெம்ப ஃபேமஸ் ஆயிடுச்சு. மைவி3 லருந்து உணவுத்திருவிழா வரைக்கும் கழுவி ஊத்துறாங்க. கிணத்துக்கடவு ரவி, பர்வீன் யூனுஸ் இவங்க ஜோக்கெல்லாம் இன்னமும் வந்துட்டிருக்கும் ன்னு ஒரு அனுமானம். ஆனா இந்த வாரம் இல்ல போலருக்கு. வேற புதுசு புதுசா வந்துட்டாங்க.  வலைபாயுதே கொஞ்சம் நக்கலா இருக்கும். நம்மள மாதிரி சாதாரண மக்கள் தங்கள் சிந்தனைத் திறமையையும் வார்த்தை விளையாட்டையும் காட்டியிருப்பாங்க. இந்த வாரப் பகுதியப் படிச்சுட்டு சிரிச்சேன். 

மொதல்லையெல்லாம் குஜினி, குமல், குஜய், பாகுல் பூந்தி, கக்ரம், குமிழருவி பனியன்னு (முறையே ரஜினி, கமல், விஜய், ராகுல் காந்தி, விக்ரம், தமிழருவி மணியன் - நம்ம அடுத்த ஆர்ட்டிக்கிள் இந்தாளப் பத்தித்தான்) நையாண்டி பண்ணி லூசுப் பையன்னு ஒருத்தர் எழுதுவாரு. அத இப்பக் காணம். நான் ஒரு லூசுப் பையன்...இன்னுமா அதெல்லாம் வரும்? (ஆனா கன்னித்தீவு வருதுன்னு நினைக்கிறேன்).  ஆனந்த விகடன்ல வந்த வைரமுத்து கவிதைகளையோ தொடர்களையோ நான் படிக்க மாட்டேன் (அவர் கவித...படைப்பு...பேச்சு ன்னு நான் எதையும் ரசிக்க மாட்டேன்). மனுஷ்யபுத்திரன் படத்தப் போட்டு ஒரு பக்கம். அதையும் நான் படிக்கல (வேற எதத்தான் நீ படிச்சன்னு கேக்காதீங்க). 

தலைப்புக்குத் தாவுறேன். சொல்வனம் பகுதியில் கவிதைகள் இருக்கும். வாரமலர் கவிதைகள் ஒரு ரகம் என்றால் இவை வேறு ரகம். பல சமயம் புரியாது....எதுக்கு இதையெல்லாம் பப்ளிஷ் பண்ணியிருக்காங்கன்னு. சான்றுகளோட எழுதணும்ன்னா நிறைய புக் கலெக்‌ஷன் வேணும். என்கிட்ட இல்ல. அதனால இந்த வாரக் கவித ஒண்ணு. கவிஞர் ஸ்ரீநிவாஸ் பிரபு அவர்கள் எழுதியது (ஏண்டா வைரமுத்து, மனுஷ்யபுத்திரன்னு எழுதிட்டு.... இப்ப கவிஞர்.. நீ யாரடா ஓட்டற? என்னும் தங்கள் மைண்ட் வாய்ஸை யாம் கேட்கிறோம்).

ஃபோட்டோ போட்டா நல்லா இருக்காது. அச்சு பிசகாம நானே டைப்புறேன்.

திருமணத்தில் ஒன்றுசேராது போன
அவனும் அவளும்
சந்தித்துக்கொண்ட
குளிரூட்டப்பட்ட பல்பொருள் அங்காடியில்
நீரில் பரவிய எண்ணெய்ப் படலமாய்
தனித்த வண்ணங்களை 
வெப்பத்துடன் வெளிப்படுத்துகிறது
ஊடுருவும் பார்வைக்குள்
உள்ளுறைந்த காதல்
                                      - ஸ்ரீநிவாஸ் பிரபு

இதைப் படித்ததும் நம்ம வடிவேல் சொல்வாருல்ல தலையப் பிச்சுக்கிட்டு ‘என்னங்க இது எனக்கு ஒண்ணுமே புரியலங்க’ன்னு அப்படித்தான் நேக்கும் இருந்தது.

நேர் நேர் தேமா வருதான்னோ என்ன பா வகைன்னோ அசை, சீர், அடி, தளை, தொடை (8ம் வகுப்பு இலக்கண புக்ல படிச்சது) இதெல்லாம் சரியான்னோ நாம கேக்கல. ஏன்னா தெரியாது. ஆனா எதாச்சும் மீனிங் வேணுமில்லங்க. அதுவும் அந்தக் கடைசி நாலு வரி... புதுக்கவிதை ன்னு எதை எழுதினாலும் பப்ளிஷ் பண்ணிடுவாங்க போல.. காதலர் தின சிறப்பிதழ் இல்லையா? 
ஒரு வாசகனா என்னால இந்தக் கவிதையப் புரிஞ்சுக்க முடியல... அது என்னப்பா நீரில் பரவிய எண்ணெய்ப் படலம்.....தனித்த வண்ணம்... வெப்பத்துடன் வெளிப்படுத்துகிறது...
இதுக்கெல்லாம் சாதி ஒழிப்புப் போராட்டங்கள்தான் காரணம். கோனார் நோட்ஸையே வேரோடும் வேரடி மண்ணோடும் அறுத்துட்டாங்க போலருக்கு. அது இருந்திருந்தாலாச்சும் நான் அருஞ்சொற்பொருள், பொழிப்புரைன்னு எதாச்சும் படிச்சுத் தெரிஞ்சிருப்பேன். 

விகடனுக்கு ஒரு பக்கம் செண்ட்ரல் கவுர்மெண்ட்டு ட்ரபுள் குடுக்குது. இன்னொரு பக்கம் நானு (எவ்ளோ பெரிய ஆளு பாத்தீங்களா?). 

“வறண்டு கிடக்கும் சொல்வனம் 
வளமாவதெப்போது?
துவண்டு கிடக்கும் விகடன் தாத்தா
துள்ளிக்குதிப்பதெப்போது?” 

ன்னு நேக்கே எழுதத் தோணறது.

சொல்வனம் பகுதித் தேர்வுக்குழுவுல அடியேனையும் சேர்த்துக்க அப்ளிக்கேஷன் போட்டிருக்கேன். (என்னாது.....அதுக்கு சொல்வனம் கவிதைகள் எல்லாத்தையும் படிக்கணுமா? ஆள விடுங்கப்பா சாமி. நான் பர்வீன் சுல்தானா ரசித்துச் சொல்லும் ஹைக்கூக் கவிதைகளையே படிச்சுக்கிறேன். என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல...அந்த அம்மாவப் பார்த்தாலும் காண்டாகுது. சில சமயம் ஓவராப் பேசும். கப்ஸாவா அடிச்சு விடும். தெரிஞ்சு பேசுதா தெரியாம பேசுதான்னே தெரியாது... மோட்டிவேட்டஷன் ஸ்பீச்சுக்கு காலேஜ்களுக்குக் கூப்டா....நம்மள மோஷன் போக வச்சுடும்)

----புனை பெயர் வைக்கும் அளவுக்கெல்லாம் இல்லீங்க.
வி. மஹாலிங்கம், வடவள்ளி, கோவை.
 

4 comments:

  1. ஹா ஹா.. ஒரு அரை மணி நேரம் நேர்ல பேசின மாதிரி இருந்தது.. விகடர் ( வயசாகுதுல்ல) பாவம். நீ பாட்டுக்கு மனம் போன போக்கில் டைப்பிட்டே இரு.. சொல்வனம்.. விகடன் ரசிகர்களின் குமுறல்.. பில்ட்அப் அருமை..

    ReplyDelete
  2. நன்றி சரவணா. எல்லாம் நாம சின்ன வயசுல பழகினதுதான்.

    ReplyDelete
  3. Blog yennavo konjam neelama Michael Madana Kama Rajan padathula vara maligai list pola ponalum ,Maadapoosi Krishnaswamy Govindan pathi sollama vittutandradhu konjam varutham tha.

    ReplyDelete
    Replies
    1. மதன் இன்னும் பல ஓவியர்கள்/கார்ட்டூனிஸ்ட்ஸ் பற்றி ஒரு சிறப்புக் கட்டுரை எழுதிவிடுவோம் ரித்து.

      Delete

திருப்பாச்சி

திருப்பாச்சி             வணக்கம் வாசகர்களே. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு சந்திக்கிறோம். சிரித்தது போதும். கொஞ்சம் சீரியஸ்ஸாக எழுதலாம் எனத் ...