Wednesday, 19 February 2025

குட்மார்னிங் கோச்

 குட்மார்னிங் கோச்

இதுக்கு முன்னாடி எழுதுன கட்டுரைல (?) தமிழருவி மணியன் பத்தி எழுதுறேன்னு சொன்னதுனால யாரும் தப்பா நினைக்கலையே. தனிமனிதர்களைப் பற்றித் தனியா எழுதறதில்லன்னு நமக்கு ஒரு கொள்கை. அதனால பல தனிமனிதர்கள சேத்து வச்சு ஆசை தீர ரோஸ்ட் பண்ணுவோம்.  ஆங்...சொல்ல மறந்துட்டேன். போன பதிவப்பத்தி சிலபேரு கருத்து தெரிவிச்சிருந்தாங்க (2 க்கு மேற்பட்டாலே சில ன்னு சொல்லலாமாம்). என்ன கொடுமை சரவணன் இது (நெஜமாவே என் இன்னோரு ஃப்ரண்டுங்க இவரு. முதல் கருத்து, ஒரே கருத்து- இப்ப எழுதுற வரைக்கும்-தெரிவிச்சதே அவர்தான்). மைக்கேல் மதன காம ராஜன் படத்துல வர்ற மளிக லிஸ்ட் மாதிரி ரொம்ப நீளம்ன்னு ஒரு வாசகி அங்கலாய்க்குது. “கூந்தல் நீளமா இருந்தாப் பாராட்டுற அதே சமூகந்தான்.....(இந்த இடத்துல செந்தமிழன் சீமான் மாதிரி படிச்சீங்கன்னா நல்லா இருக்கும்) கட்டுரை நீளமா இருந்தா கலாய்க்குது” அப்படீன்னு சொல்லத்தோணுது. டேய் நில்ரா...எவண்டா அது சின்னப்பையன்.. ‘பூமர் அங்கிள்’ன்னு கத்துறது?  

நான் ரொம்ப ஹெல்த் கான்சியஸ். ஒடம்ப எப்பவும் ஃபிட்டா வெச்சிருப்பேன். ஒரு ஆரோக்யமான டயட்டை ஃபாலோ பண்றவன். பேட் ஹேபிட்ஸ் எதுவும் கிடையாது... இப்படி யார் சொன்னாலும் நான் அவங்க கூட சேரவே மாட்டேன். இருந்தாலும் சின்ன வயசுல ஸ்ப்ரிண்ட், ரிலே, மாரத்தான்...இப்படி ஆரம்பிச்சு ஸ்லோ ரன்னிங், ஜாக்கிங், ஸ்பீட் வாக்கிங், வாக்கிங், ஸ்லோ வாக்கிங்ன்னு ஆயிடுச்சு இப்ப. வடவள்ளி வீதிகளில் (தெருத்தெருவா இல்லீங்க) நடந்துட்டிருந்த நானு போன வாரம் ஒரு நாள் பணக்காரனாகறதுன்னு முடிவெடுத்தேன். அன்னைக்கு ராத்திரி தூக்கமே இல்ல. மண்டைக்குள்ள ஜி.டி. நாயுடு, கே.ஜி. பக்தவச்சலம், தைரோகேர் வேலுமணி ன்னு ஒரே திங்க்கிங். காலைல 5 மணிக்கு எந்திரிச்சு 1C பஸ் புடிச்சு உப்பிலிபாளையம் டி.எஸ்.பி ஸ்டாப்ல இறங்கினேன். என்னோட பணக்காரக்கனவு நனவாக இன்னும் சில மீட்டர் நான் நடந்தாலே போதும்ன்னு நினைக்குறப்ப எனக்கே புல்லரிச்சுது. ஆமாங்க நான் அடைஞ்சுட்டேன்... என் 26 வருசக் கனவு... ரேஸ் கோர்ஸ்ல வாக்கிங்... ஒரு வருஷம்....வேண்டா வேண்டா...ஆறுமாசம் போனாலே பணக்கரனாகிடலாம். பணக்காரங்க ரேஸ்கோர்ஸ்ல வாக்கிங் போறாங்க...அப்ப லா ஆஃப் அட்ராக்‌ஷன் படி... நீங்க அங்க வாக்கிங் போனா அவங்களோட வைப்ரேஷன்....எப்பவும் பணத்தப்பத்தி டிஸ்கஷன்....நியூ இயர் ரெஸல்யூஷன்.......உங்களோட ஆஃபீஸ்ல ப்ரொமோஷன்......உங்க ப்ரச்சனைக்கெல்லாம் சொல்யூஷன்...... பங்களா கன்ஸ்ட்ரக்‌ஷன்.....இனி வாழ்க்கைல நோ டென்ஷன்....நீங்க பணக்காரனாகறத யாராலும் தடுக்க முடியாது (சதுரங்க வேட்டை - ரைஸ் புல்லி- நட்டி டயலாக் சாயல் தெரியுது). இந்த லாஜிக்கை அடிப்படையா வச்சு சாரதா கோவில் எண்ட்ரன்ஸ்ல மங்களகரமா வாக்கிங் ஆரம்பிச்சேன். ஒரு நாப்பது எட்டுத்தான் வச்சிருப்பேன். கவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜ் ஹாஸ்டல் வாசலைத் தாண்டல. ஒரு ஆள் என்னையே குறுகுறுன்னு பாத்திட்டுருந்தான். ரொம்ப நேரமா வாட்ச் பண்ணியிருப்பான் போல. சார்ன்னு சன்னமா கூப்டான். நான் காது கேட்காத மாதிரியும் பிஸியா நடக்குற மாதிரியும் பாவலா பண்ணிட்டு சி.எஸ்.ஐ சர்ச் வரைக்கும் வந்துட்டேன். அவனும் பின்னாடியே சார் சார்ன்னு கூப்ட்டுட்டே வந்தான். நானும் நின்னு என்ன சார் ன்னு கேட்டேன். நீங்க நடக்குற மெத்தட் தப்பு சார்ன்னான். அதப்பத்தி உனக்கென்னய்யா அவனே இவனேன்னு வாய்க்கு வந்தபடி திட்டமுடியல. ஏன்னா ஆளு கொஞ்சம் பல்க்காவே இருந்தான்.  “நீங்க யாரு?” ன்னு..... நான் கேக்குறக்கு முன்னாடியே...சிரிச்ச மேனிக்கு “நான் ஒரு வாக்கிங் கோச் சார்” அப்படின்னான். எனக்கு ஒண்ணும் புரியல. மேற்கொண்டு நான் பேசுறதுக்குள்ள....மாசம் 8 நாள் கோச்சிங் சார். 4000 ருபீஸ் ஃபீஸ் சார் அப்டீன்னான். டக்குன்னு நான் பாக்கெட்டைத் தொட்டுப்பார்த்தேன். கொண்டு வந்த நாப்பது ரூபாய்ல எவ்ளோ மிச்சம் இருக்குன்னு ஒரே மெண்டல் மேத்ஸ்தான். அப்ப எனக்குக் கோவம் வந்தது....அந்த கோச் மேல இல்லீங்க....ஸ்டாலின் மேல... ஏன் ஆம்பளைகளுக்கு ஃப்ரீ பஸ் விட்டா என்ன குடியா முழுகிடும்? வாக்கிங்கை அப்ரப்ட்டா கட் பண்ணீட்டு மறுபடியும் பஸ்ல வீட்டுக்குத் திரும்பி வரும்போது கோச்சுகளப் பத்தி எழுதனும்ன்னு மனதின் மூலையில் ஒரு பட்சி சொல்ல விளைந்ததே இந்தப் பதிவு.

குழந்தை பிறந்தா அதை வளர்க்க ஒரு பேரண்டிங் கோச். பேராண்டிய வளர்க்க ஆயாவை வீட்டுல வச்சிருந்தா ஆய் கழுவ zoom class அட்டெண்ட் பண்ற நிலமை வந்திருக்குமா? அது கொஞ்சம் வளர்ந்ததும் ப்ரீ-ப்ரைமரியாமே....அங்க சேத்து நல்ல பழக்க வழக்கம் பழக பிஹேவியர் கோச். 3வது வந்துட்டாப் போதும் டான்ஸ் கோச், கிடார்/கீ போர்ட் கோச், ஷட்டில் கோச், கிரிக்கெட் கோச், மார்ஷியல் ஆர்ட்ஸ் கோச், செஸ் கோச்...இதுக்கு நடுவுல ஸ்போக்கன் இங்க்லீஷ் கோச். நம்ம பையன் தமிழ்ல ழ சொல்றான்னா வராதும்பான். ஆனா இங்க்லீஷ்ல father, mother ன்னு எழுதியிருந்தா ஃபாதழ், மதழ் ன்னு சொல்வான். எல்லாம் accent coach ஓட வேலைதான். இன்னும் பெருசானா லவ் பண்ண கோச் (நெசமாலுமே இருக்குறாங்க), ரிலேஷன்ஷிப் கோச், மேரேஜ் கோச்....இன்னோரு பக்கம் பிஸினஸ் கோச் (MLM coach கள் தனி), ஃபிட்னஸ் கோச், வெல்த் கோச், மணி கோச், வெல்நெஸ் கோச்...நல்லா ட்ரஸ் பண்ணிக்க grooming coach.. இதெல்லாம் நமக்கு வராதுன்னு யூட்யூப் பக்கம் போனா, AI coach, writing coach...ன்னு 9 ரூபாய் முதல் கோர்ஸ் சொல்லித்தர்றாங்க. எங்களுக்குன்னு சொந்தமா எதுவுமே தெரியாதா கோச்சுகளா? மூச்சு விடவும் கோச்சு.....ப்ராணாயாமாவாமே.. எல்லாத்தையும் தூக்கி சாப்பிடுற மாதிரி கோச்சுகளை கோச் பண்ணும் சூப்பர் கோச்.

எழுதிட்டிருக்கும்போது டக்குன்னு ஒரு ஃபோன். 

எதிர்க்குரல்: “சார் நான் ஒரு ஃப்யூனரல் (funeral) கோச்”
நான்: “அப்படியா! என்ன சொல்லித் தருவீங்க”
எதிர்க்குரல்: “சாகும்போது மூஞ்சிய எப்படி வச்சிருக்கணும்ன்னு சொல்லித்தருவோம்”
நான்: “எலே...எடுபட்ட பயலே...”
எதிர்க்குரல்: “சார்..ஃபேமிலி பேக் எடுத்தா ஆஃபர் இருக்கு..”
நான்:-----------டக்.

கோச்சுகள் கோலோச்சும் காலம். 
தமிழருவி மணியன் ஒரு முன்னோடி அரசியல் கோச். அவருக்கு, தான் பெரிய்ய பிரசாந்த் கிஷோர்ன்னு நினப்பு. சிவனேன்னு இருந்த ரஜினிய சீண்டி...சிங்கமா இருந்த அண்ணாமலைய நோண்டி...த.வெ.க தளபதி விஜய்ய...

இத்துடன் குட்மார்னிங் கோச் என்னும் தமிழருவி மணியன் பற்றிய கட்டுரை முற்றிற்று.
-வி. மஹாலிங்கம், வடவள்ளி, கோவை.

2 comments:

  1. இரண்டாவது ball ம் சிக்ஸ்.. ஆ.. நானும் கோவை வரும்போதெல்லாம் பந்தய சாலையை காரிலேயே ஒரு சுற்று வருவதுண்டு.. ஹால்ஃப் ரிச்மேன் கூட ஆகல டீசல் செலவுதான்.. கோச்சுகளை பத்தி இவ்வளவு அழகா யாரும் சொன்னதில்ல... அதுவும் ஃபினிசிங்.. 😆😆 அடுத்த ball க்காக.. வெயிட்டிங்.. 👍

    ReplyDelete

திருப்பாச்சி

திருப்பாச்சி             வணக்கம் வாசகர்களே. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு சந்திக்கிறோம். சிரித்தது போதும். கொஞ்சம் சீரியஸ்ஸாக எழுதலாம் எனத் ...